ஆந்திரா மற்றும் தெலுங்கானா விவசாயிகள் மூங்கில் சாகுபடியில் ஈடுபட சமீப காலமாக மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிளாஸ்டிக் மேஜைகள், உபகரணங்களுக்கு மாற்றாக தற்போது பலரும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மூங்கிலலான பொருட்களை பயன்படுத்த விருப்பம் தெரிவித்து வருவதால் சந்தைகளிலும் மூங்கிலுக்கு தேவை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
மூங்கில் தோட்டக்கலைப் பயிராக மாற்றப்பட்ட நிலையில் பல விவசாயிகள் தமிழகத்தின் அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மூங்கில் சாகுபடிக்கு திரும்பியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி, இரு தெலுங்கு மாநிலங்களிலும் சுமார் 200 ஏக்கர் நிலத்தில் மூங்கில் பயிரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மூங்கிலை தோட்டக்கலைத்துறையின் கீழ் கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றிய ஆந்திரப் பிரதேச மாநில விவசாய இயக்கத்தின் (APSAM) துணைத் தலைவர் MVS நாகி ரெட்டி முன்னணி நாளிதழான TNIE-யிடம் பேசுகையில், ”விவசாயிகள் தங்கள் நிலங்களில் ஒரு பகுதி மாற்றுப் பயிர் சாகுபடி செய்வதன் மூலம் வருமானத்தைப் பெருக்கலாம் என்றார். மூங்கில் பல நூற்றாண்டுகளாக ஒரு பல்துறை வளமாக இருந்து வருகிறது. குறிப்பாக ஆசியாவில், மூங்கிலை கொண்டு குடிசைகள் கட்டுவதற்கும், மேஜை, நாற்காலி போன்றவற்றை தயாரிப்பதற்கும் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. புதிய தொழில்நுட்பங்களின் வருகையானது தற்போது மூங்கில் கூழ் மூலம் ஆடை தயாரிக்கவும் வழிவகை செய்துள்ளது” என்றார்.
மூங்கிலின் பலன்களால் ஈர்க்கப்பட்ட நாகி ரெட்டி, தற்போது 24 ஏக்கர் நிலத்தில் மூங்கில் பயிரிட்டு பராமரித்து வருகிறார். மேலும் அவர் கூறுகையில், “2017 ஆம் ஆண்டில், மூங்கிலானது வனத்துறையின் கட்டுப்பாட்டிலிருந்து துண்டிக்கப்பட்டது மற்றும் விவசாயிகள் அதை பயிரிட ஊக்குவிக்கும் வகையில் மானியங்களும் அறிவிக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து மூங்கில் சாகுபடியில் முன்னணியில் உள்ள மகாராஷ்டிராவுடன் இப்போது ஆந்திரா மற்றும் தெலுங்கானாவும் இணைந்துள்ளது” என்று அவர் விரிவாகக் கூறினார்.
மூங்கில் சாகுபடியில் பொறுமை அவசியம். மூங்கில் விதைத்து நான்கு ஆண்டுகளுக்கு எந்த வருமானமும் இல்லாமல் இருக்கும், ஆனால் அதன் பிறகு 90 ஆண்டுகளுக்கு நிலையான ஆண்டு வருமானத்தை வழங்கும் என அறியப்படுகிறது. ஒரு மூங்கில் மரக்கன்று ஆரம்ப பராமரிப்புக்குப் பிறகு தானே வளரும் என்பதோடு ஒவ்வொரு முறையும் தளிர்களை உருவாக்குகிறது. தற்போது தொழில் நுட்ப வசதிகளை கொண்டு மூங்கில் கூழ் மூலம் ஆடைகள் தயாரிக்கும் பணியும் நடைப்பெற்று வருகிறது. பருத்தியிலான ஆடைகளுக்கு இணையாக இதற்கும் பொதுமக்களின் ஆதரவு பெருகி வருகிறது.
2029 ஆம் ஆண்டில், மூங்கில் சந்தை 94.38 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்துறை பிரிவிலும் மூங்கில் தொடர்பான பொருட்கள் தயாரிப்புக்கு முக்கியத்துவம் அதிகரித்துள்ள நிலையில் இன்னும் அதிகமான விவசாயிகள் மூங்கில் சாகுபடிக்கு திரும்புவார்கள் எனவும் நாகி ரெட்டி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
இதையும் காண்க:
நகை கடை ஓனர்கள் கலக்கம்- தங்கத்தின் விலை வரலாறு காணாத சரிவு
டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35000 தாங்க- அதிமுக ஆர்ப்பாட்டம்
Share your comments