மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட ஆந்திராவினைச் சேர்ந்த 15,000 புகையிலை விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக முன்னணி இணையதள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
வட்டியில்லா கடன்களின் காலம் ஆறு மாதங்கள் இருக்கும் எனவும், ₹10,000 முதல் ₹20,000 வரை வழங்கப்படும் தொகையானது, விவசாயிகள் புகையிலையை மீண்டும் பயிரிட உதவும் என்று சில அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புகையிலை வாரியத்தால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவை வர்த்தக அமைச்சகம் பரிசீலித்து வருவதாகவும், அது விரைவில் இறுதி செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி ஆந்திரப் பிரதேசத்தைத் தாக்கிய மிக்ஜாம் புயலால், இந்தியாவின் புகையிலை உற்பத்தியில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்ட ஆந்திரா விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்தனர். சீனாவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய புகையிலை உற்பத்தியாளராக இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது. உலகளாவிய மொத்த புகையிலை உற்பத்தியில் இந்தியா 9% கொண்டுள்ளது.
இந்தியா ஆண்டுதோறும் சுமார் 800 மில்லியன் கிலோ புகையிலையை உற்பத்தி செய்கிறது, மொத்த உற்பத்தியில் 45% உடன் குஜராத் மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து, ஆந்திரப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் மாநிலங்கள் அதிகளவில் புகையிலை உற்பத்தி செய்யும் மாநிலங்களாக உள்ளன.
புகையிலைக்கான நடவு பருவம் நவம்பர் இறுதியில் தொடங்கி ஜனவரி நடுப்பகுதி வரை தொடர்கிறது. பயிர்களின் அறுவடை மார்ச் இறுதியில் தொடங்கி ஜூன் வரை தொடர்கிறது என்று ஒரு அதிகாரி கூறினார். மற்றொரு அதிகாரி குறிப்பிடுகையில் “புயல் காரணமாக ஆந்திராவில் புகையிலை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் ஏழை மற்றும் விளிம்புநிலை விவசாயிகளுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க விவசாயிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளது” என்றார்.
“ஒட்டுமொத்த புகையிலை ஏற்றுமதி தற்போது வரை நன்றாக இருக்கிறது. விவசாயப் பொருட்களின் விலையை உயர்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் சர்வதேச சந்தைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த ஆண்டை விட 10% விலை அதிகமாகவே உள்ளது, இது ஒரு நல்ல அறிகுறி" என்று மற்றொரு அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
நடப்பு நிதியாண்டின் முதல் எட்டு மாதங்களில் (ஏப்ரல்-நவம்பர் 2023) 981.05 மில்லியன் டாலர் மதிப்புள்ள புகையிலையை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. பெல்ஜியம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தோனேசியா, ரஷ்யா, கொரியா, அமெரிக்கா, ஏமன், எகிப்து, சிங்கப்பூர், நெதர்லாந்து, பிலிப்பைன்ஸ், துருக்கி மற்றும் நேபாளம் ஆகியவை முக்கிய ஏற்றுமதி இடங்களாக திகழ்கிறது.
தற்போது வரை, இந்த தகவல் உறுதிச்செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. புகையிலைத் தொழிலில் ஆறு மில்லியன் விவசாயிகள் மற்றும் 20 மில்லியன் விவசாயத் தொழிலாளர்கள் உட்பட சுமார் 36 மில்லியன் மக்கள் பணியாற்றுகின்றனர். ஆந்திரப் பிரதேசம் உட்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள புகையிலை விவசாயிகளை மாற்று பயிர்களுக்கு மாற அரசின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Read also:
அரிசி உமிக்கு அதிகரிக்கும் மவுசு- காரணங்களை அடுக்கும் வேளாண் ஆலோசகர்
கனமழை முதல் மிக கனமழை- தமிழகத்துக்கு தொடர் எச்சரிக்கை விடுத்த IMD
Share your comments