நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சில தினங்களுக்கு முன்னர் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைப்பெற்றது. அக்கூட்டத்தின் போது விவசாயிகளுக்கான இழப்பீடு தொகை குறித்த விவரங்களை ஆட்சியர் தெரிவித்ததோடு, வெள்ள பாதிப்பின் போது நெல் பயிரினை பாதுகாக்க கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
இழப்பீட்டுத் தொகை விவரம்: நடப்பாண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பெய்த பருவம் தவறிய மழையினால் பாதிக்கப்பட்ட பயறு வகை மற்றும் எண்ணெய் வித்துக்கள் ஆகியவைகளுக்கு நிவாரணமாக 15887.5049 ஹெக்டேருக்கு ரூ.4.7662515 கோடி நிதி பெறப்பட்டுள்ளது. இந்நிதியினை சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்கள் மூலம் விவசாயிகளின் வங்கி கணக்கில் விரைந்து வரவு வைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆட்சியர் விவசாயிகளிடம் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நெல் பயிரில் வெள்ள பாதிப்பின்போது கடைபிடிக்க வேண்டிய மேலாண்மை முறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. அவற்றின் விவரம் பின்வருமாறு-
நாற்று /நாற்றங்கால் பருவத்தின் போது:
- கூடுதல் நீரை வடிகட்ட வேண்டும்.
- மேட்டுப்பாத்தி நாற்றங்கால் அமைக்க வேண்டும்.
- நேரடி விதைப்பிற்கு முளைக்கட்டிய விதைகளை விதைக்க வேண்டும்.
- குறுகிய கால இரகங்களை விதைப்பு செய்ய வேண்டும்.
வளர்ச்சி பருவத்தின்போது:
- கூடுதல் நீரை வடிகட்ட வேண்டும்.
- ஒரு சதவிகித யூரியா கரைசல் (ஏக்கருக்கு 2 கிலோ யூரியா 1 கிலோ சிங்க் சல்பேட் 200 லிட்டர் தண்ணீர் தெளிக்க வேண்டும்)
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஏக்கருக்கு 1கிலோ சூடோமோனாஸ் நுண்ணுயிரினை 20 கிலோ மணல் (அ) தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும்.
- பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிர்ப்பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க வேண்டும்.
பூக்கும் மற்றும் பால்பிடிக்கும் பருவம்:
- கூடுதல் நீரை வடிகட்ட வேண்டும்
- இரண்டு சதவிகித டிஏபி கரைசல் தெளிக்க வேண்டும்.
- ஏக்கருக்கு 50 கிலோ அம்மோனியம் சல்பேட் (அல்லது) 22 கிலோ யூரியாவுடன் 18 கிலோ பொட்டாஷ் கலந்து மேலுரமாக இட வேண்டும்.
- பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிர்ப்பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்தார்.
விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம் (TNMSGCF):
இத்திட்டத்தின் கீழ் 2023-24 ஆம் ஆண்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு சாகுபடிக்கு போக மீதமுள்ள நிலங்களில் வனப்பரப்பினை அதிகரிக்கும் வகையில் வேளாண் காடுகள் உருவாக்கிட 100 சதவீத மானியத்தில் வேம்பு, தேக்கு, செம்மரம், மகாகனி, ஈட்டி மரம், வேங்கை, சந்தனம், புங்கை மற்றும் மலை வேம்பு ஆகிய மரக்கன்றுகள் வனத்துறை நாற்றுப்பண்ணை மூலமாக இலவசமாக வழங்கப்படும்.
அதிகபட்சமாக ஒரு நபருக்கு ஒரு எக்டேருக்கு 400 மரக்கன்றுகள் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் "உழவன் செயலி" மூலமாக முன்பதிவு செய்து (அல்லது) வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து பயன்பெறலாம் எனவும் அக்கூட்டத்தில் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் காண்க:
வேளாண் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் காலிப்பணியிடம்- முழு விவரம் காண்க
நாளை உருவாகும் புதிய ஆபத்து- இந்த மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
Share your comments