மதுரை கிராமங்களில் குப்பையால் சுகாதாரம் கெடுவதோடு, நீர், நிலம் மாசுபாடும் அதிகரிக்கிறது. குப்பையில் இருந்து இயற்கை உரம், மின்சாரம், காஸ் தயாரித்து ஊராட்சிக்கு வருவாய் சேர்க்கலாம்'' என்கிறார் விஞ்ஞானி டேனியல் செல்லப்பா.
மும்பை பாபா அணுசக்தி நிலைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இயற்கை உரம், காஸ் அல்லது மின்சாரம் தயாரித்து வருவாய் ஈட்ட, மதுரை மாவட்டத்தின் முன்னோடி திட்டமாக ஒத்தக்கடையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் அங்குள்ள காந்திநகர் பகுதி மயானத்தில் துவங்கியுள்ளன. இதை நேற்று கலெக்டர் அனீஷ்சேகர், விஞ்ஞானி டேனியல் செல்லப்பா, ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர் இந்துமதி ஆய்வு செய்தனர். பி.டி.ஓ., வில்சன், பிரேம்ராஜன், ஊராட்சி தலைவர் முருகேஸ்வரி சரவணன் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
விஞ்ஞானி கூறியதாவது: ஊராட்சியில் சேரும் குப்பை இங்குள்ள தொட்டியில் கொட்டப்பட்டு 19 நாட்களில் (பழைய முறையில் 40 நாட்கள்) இயந்திரங்கள் மூலம் அவை இயற்கை உரமாகவும், பெறப்படும் மீத்தேன் வாயுவில் இருந்து எரிவாயு அல்லது மின்சாரம் பெறப்படும். இம்முறையில் 80 முதல் 90 சதவீத பலன்பெறலாம் (பழைய முறையில் 45 சதவீதமே பலன் கிடைத்தது).
ஒரு டன் குப்பையில் 80 - 100 கிலோ இயற்கை உரம், 21 கிலோ எரிவாயு அல்லது 80 - 100 யூனிட் மின்சாரம் பெறலாம். இங்கு தினமும் 2 டன் குப்பை சேர்வதால் தினமும் ரூ.6 ஆயிரம் வரை வருவாய் கிடைக்கும். இந்த ஏற்பாடுகளுக்காக ரூ.55 லட்சம் செலவாகும். இதனால் சுற்றுச்சூழல், சுகாதாரம் பாதுகாக்கப்படுவதுடன், நோய் தொற்று, காற்று, நீராதாரமும் மாசுபடாது.
பொருளாதார ரீதியாகவும் ஊராட்சி மேம்படும். குப்பையை தினமும் சேகரிப்பது தொடர்பாக ஓட்டல்கள், திருமண மண்டபங்கள், இறைச்சி கடைகள், துாய்மை பணியாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இத்திட்டம் மாவட்டம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றார்.
மேலும் படிக்க
குறைந்த பட்ஜெட்டில் டாப் 5 மின்சார ஸ்கூட்டர்கள்- முழு விவரம்!
Share your comments