இன்றைய டிஜிட்டல் உலகத்தில் விவசாயிகள் பலவித பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது. பயிர்களை பயிரிட்டு படாதபாடுபட்டு வளர்த்து, சாகுபடி செய்யும் நேரத்தில் அவர்கள் உழைத்த காசு கூட கைக்கு வருவதில்லை. விவசாயத்திற்கு ஆதாரமாகவும் அடிப்படைத் தேவையாகவும் இருப்பது தரமான விதைகளே. விதைகள் தான் விவசாயத்தின் உயிர்நாடி. அதிக விளைச்சலுக்கு தரமான விதைகளே முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு விவசாயியும் விதைகளின் உற்பத்தி நிலைகள் தரமான விதைகள் முக்கியத்துவம் பற்றி தெரிந்து வைத்திருப்பது கட்டாயம். விதைகளில் கருவிதை, வல்லுநர் விதை, ஆதார விதை, சான்று விதை என 4 நிலைகளில் உள்ளன. நல்ல விதைகள் மட்டுமே 15லிருந்து 20 சதவீத மகசூலைப் கூட்ட முடியும். அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்த அளவு புறத்துாய்மை, முளைப்புத்திறன், மரபுதுாய்மை உள்ள வீரியமான விதைகளை நல்ல விதைகள் என்கிறோம்.
விதை உற்பத்தி (Seed Production)
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலையில் விதை உற்பத்திக்கு ஏற்ற ஒரு துறை உள்ளது. இதன் கீழ் பயிர் மேம்பாடு ஆய்வாளர்கள் மேற்பார்வையில் தமிழ்நாடு வேளாண் பல்கலை ஆராய்ச்சி நிலையங்கள், கல்லூரிகள் மூலம் வல்லுநர் விதை உற்பத்தி நடைபெறுகிறது. தரமான விதைகளை உற்பத்தி செய்ய விவசாயிகளுக்கு விதை உற்பத்தி பயிற்சி பல்வேறு கட்டங்களாக நடத்தப்படுகிறது. அந்த வகையில் அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளம் வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கு தரமான விதை உற்பத்தி பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் கலந்துகொண்ட விவசாயிகள் தங்கள் அனுபவங்களை நெகிழ்ச்சியுடன் கூறினர்.
நேற்று விவசாயி இன்று உற்பத்தியாளர் ராமமூர்த்தி, விவசாயி: பல ஆண்டு காலமாக விவசாயம் செய்து வருகிறேன். விவசாயத்தில் பயறுவகை பயிர்களை உற்பத்தி செய்து வருகிறேன். ஆனால் எதிர்பார்த்த அளவு லாபம் கிடைக்கவில்லை. அருப்புக்கோட்டை வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் என்னை தொடர்புகொண்டு விதை உற்பத்தி பற்றி விளக்கினர். அவர்கள் கூறிய தொழில்நுட்பங்களை கடைபிடித்து உற்பத்தி செய்ததில் அதிக மகசூலும், தரமான விதைகளும் கிடைத்தது. நானே விதை உற்பத்தி செய்து தொழில் முனைவோராக மாறுவதற்கு தேவையான விதை விற்பனை உரிமம் வாங்க கூடிய ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறேன். விவசாயியாக இருந்த நான் இன்று விதை உற்பத்தியாளராக மாறி உள்ளேன். கூடுதல் வருமானம் பெற்றேன்.
செல்வம், முன்னோடி விவசாயி: விதைகளுக்கு தானியத்தை விட கூடுதல் விலை கிடைக்கிறது. முதன்முதலாக உளுந்து வம்பன் 11 என்ற ரகம் வெளியிட்டபோது, என்னுடைய வயலில் ஒரு ஏக்கரில் பயிரிட்டு இருந்தேன். இந்த ரகம் மானாவாரியில் அதிக மகசூல் கிடைத்ததால், இந்தாண்டும் வம்பன் 11 வல்லுநர் விதைகளை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வாங்கி ஆதார நிலை விதைகளை உற்பத்தி செய்து அருப்புக்கோட்டை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் திரும்ப வழங்கியதில், விதைக்காண தொகை மற்றும் மானிய தொகை என குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரத்து 500 ரூபாய் கிடைத்தது. தானியமாக விற்பதை விட கூடுதலான வருமானம் கிடைத்தது.
விருதுகள் (Awards)
சிறந்த விவசாயிகளை கவுரவிக்கும் விதமாகவும், புதியதாக விதை உற்பத்தி செய்வதற்கு ஆர்வமுள்ளவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் "சிறந்த விதை உற்பத்தியாளர்" என்ற விருதுகள் வழங்கப்படுகிறது. அறுவடை, விதை சுத்திகரிப்பின் போது வேறு ரக பயிர் விதைகள் கலக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
உளுந்து,பாசிப் பயிறு குறைந்தபட்சம் 75 சதவீத முளைப்புத்திறன், 98 சதவீத புறத்துாய்மை, 9 சதவீத ஈரப்பதம் இருக்குமாறும் பார்த்து கொள்ள வேண்டும். இவ்வாறான விதைச் சான்றளிப்பு முறைகளை சரியாக கடைபிடித்தால் விதை உற்பத்தி ஒரு லாபகரமான தொழிலாக அமையும்,என்றார்.
மேலும் படிக்க
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் திட்டம்: மாற்றுப் பயிர் சாகுபடி!
குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் மட்டுமே விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும்!
Share your comments