ஆடி மாதத்தில் தேடித் விதைக்க வேண்டும் என்பது ஆன்றோர் வாக்கு. ஆனால் ஆடி மாதத்தின் பாதி நாட்களைக் கடந்துவிட்டோம். பெரும்பாலான விவசாயிகள், வேர்க்கடலை உள்ளிட்ட பயிர்களைத் திட்டமிட்டபடி விதைத்திருப்பீர்கள்.
ஆனால், முறையான திட்டமிடல் இல்லாத காரணத்தினாலோ, முயற்சி கை கொடுக்காததாலோ விதைக்க முடியாமல் போய் விட்டதே, நிலம் தரிசாகக் கிடைக்கிறதே என வருத்தப்படும் விவசாயியா நீங்கள்? கவலை விடுங்கள். சாமை, குதிரைவாலி, வரகு போன்ற சிறுதானியங்களை விதைத்து அதிக லாபம் ஈட்ட முடியும்.
சாமை சாகுபடி செய்வது குறித்து பார்க்கலாம்.
பருவம் (Season)
மானாவாரியாக ஆடிப் பட்டத்தில் அனைத்து வகையான நிலங்களிலும் பயிரிட ஏற்றது சாமை. செம்மண், இருமண் கலந்த நிலங்களில் சாமைப் பயிர் செய்ய உகந்தது.
ரகங்கள் (Varieties)
பையூர்-2 என்ற ரகமானது 85 நாள்கள் வரை வளரக் கூடியது. ஹெக்டேருக்கு 850 முதல் 1000 கிலோ வரை மகசூல் கிடைக்கும். கோ-4 என்ற ரகமானது 75 முதல் 80 நாள்கள் வளரக் கூடியது. ஹெக்டேருக்கு 1,500 முதல் 2,000 கிலோ மகசூல் கிடைக்கக் கூடியது.
உழுதல்
சாமை விதைப்பதற்கு முன்பு நிலத்தைக் கலப்பையைக் கொண்டு இரண்டு முறை நன்கு உழுது நிலத்தைச் சமன் செய்ய வேண்டும். விதையின் அளவு மிகச் சிறியதாக இருப்பதால் முளைத்து வெளியே வருவதற்கு 5 முதல் 7 நாள்கள் ஆகும். நிலத்தை நல்ல முறையில் தயார் செய்தால்தான் களைகளின் பாதிப்புகள் குறைந்து மண்ணில் ஈரப்பதம் பாதுகாக்கப்படும். அப்போதுதான் விதைகள் நன்கு முளைத்து வரும்.
விதைக்கும் முறை (Sowing)
சாமைப் பயிரானது கை விதைப்பு முறையில் பரவலாகத் தூவப்படுகிறது. இந்த முறையில் விதைப்பதற்கு ஏக்கருக்கு 5 கிலோ விதை தேவைப்படும். விதையை விதைக்கும்போது 2.5 செ.மீ. ஆழத்தில் விதைக்க வேண்டும். வரிசைக்கு வரிசை 22.5 செ.மீ. இடைவெளி இருக்க வேண்டும். மேலும், நாற்றுக்கு நாற்று 7.5 செ.மீ. இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
உர நிர்வாகம் (Fertilizers)
ஓர் ஏக்கர் நிலத்தில் 2 டன் தொழு உரத்தைப் பரப்பி உழ வேண்டும்.
களை நிர்வாகம்
இருபதாம் நாளில் ஒரு முறை களை எடுக்க வேண்டும்.
நீர் நிர்வாகம் (Water Management)
சாமைப் பயிர் நன்கு வளர்வதற்கு 300 முதல் 350 மீ.மீ. மழை அளவு தேவைப்படும். பயிர் வளர்ச்சிப் பருவத்தில் விதைப்பு நீர், பூக்கும் பருவம், பால் பிடிக்கும் பருவங்களில் கட்டாயம் மண்ணில் ஈரப்பதம் இருக்க வேண்டும்.
அறுவடை (Harvesting)
கதிர்கள் நன்கு முற்றி, காய்ந்த பிறகு அறுவடை செய்ய வேண்டும். பின்னர் கதிர்களைக் களத்தில் காயவைத்து அடித்து தானியங்களைப் பிரித்து எடுக்க வேண்டும். பிறகு, தானியத்தை நன்கு காய வைத்து சுத்தம் செய்து சேமித்து வைக்க வேண்டும்.
சாமை குறித்து காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி கலிவரதன் கூறுகையில், சாமை, செலவில்லாமல் சாகுபடி செய்யச் சிறந்த பயிர். விதைத்த 15 நாட்களில் இருந்து காலை மற்றும் மாலை வேளைகளில் பறவைகள் தொல்லையைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.
விதையை விலை கொடுத்து வாங்குதல், ஏர் பூட்டி உழுதல் உள்ளிட்ட சாகுபடி பணிகளுக்கு ஏக்கருக்கு சுமார் 6 ஆயிரம் ரூபாய் செலவு பிடிக்கும். அறுவடை செய்தால், ஏக்கருக்கு 750 கிலோ வரை மசூல் (Yield)கிடைக்கும்.
நெல்லிற்கு கிலோவிற்கு 30 ரூபாய் வீதம் கணக்கிட்டால், 21 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். எனவே குறுகிய காலப் பயிரான, அதேநேரத்தில் வறட்சியைத் தாங்கி வளரும் பயிரான சாமை, குதிரை வாலியை இந்த சமயத்தில் சாகுபடி செய்து விவசாயிகள் நல்ல பலனை அடையாலம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விவசாயியின் யோசனை பலருக்கும் பலனுள்ளதாக இருக்கும்.
மேலும் படிக்க...
உடலுக்கு உரமிடும் சிறுதானியங்கள்- எண்ணற்ற நன்மைகள் நமக்கு!
புற்றுநோய் வராமல் தடுக்கும் பாலக்கீரை- வீட்டில் வளர்க்க எளிய வழிகள்!
Share your comments