விவசாயிகளின் மண்ணின் தன்மை அறிந்து உரமிடுதல், நீர் பாய்ச்சல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் பயிர் சேதத்தை தவிர்க்க இயலும். இதற்காக அரசின் சார்பில் மண் வள அட்டை திட்டம் நடைமுறையில் உள்ளது. விவசாயிகளின் நிலத்திற்கே நேரில் வந்து மண் பரிசோதனை மேற்கொள்ள சிறப்பு முகாம் நடைப்பெற உள்ளது. இதுக்குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு தலைமையிடமாக கொண்டு வேளாண் துறையின் கீழ் இயங்கி வரும் நடமாடும் மண்பரிசோதனை நிலைய வாகனம் மூலம் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று விவசாயிகளிடமிருந்து மண் மற்றும் நீர் மாதிரிகளை பெற்று ஆய்வு செய்து மண்வள அட்டையினை அன்றைய தினமே வழங்க ஏற்பாடு செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
மண் பரிசோதனை வாகனம் மூலம் விவசாயிகள் சாகுபடி செய்யும் நிலங்களின் மண்ணில் உள்ள கார-அமிலத்தன்மை மற்றும் தழை,மணி,சாம்பல் சத்துகளின் அளவு, பயிரிடப்படும் பயிர்களுக்கான உரப்பரிந்துரை மற்றும் பிரச்சனைக்குரிய மண் வகைகளுக்கு மேலாண்மை முறைகள் ஆகியவற்றை மண் மாதிரியினை ஆய்வு செய்து அதற்கேற்ப உரமிட்டு சாகுபடி செலவைக் குறைக்கலாம்.
நீர் மாதிரியின் கார-அமிலத்தன்மை, கரையும் உப்புக்களின் அளவு, நேர் மற்றும் எதிர் அயனிகளின் அளவு ஆய்வு செய்யப்பட்டு நீரின் வகைப்பாடு மற்றும் நீரின் தன்மைக்கேற்ப சாகுபடி பயிர்கள், பிரச்சனைக்குரிய நீரின் மேலாண்மை முறைகள் தெரிவிக்கப்படும். மேலும் நடமாடும் மண் பரிசோதனை நிலைய வாகனம் மூலம் 2023-24 ஆம் வருடத்தில் இதுவரை 958 மண் மாதிரிகளும், 150 நீர் மாதிரிகளும் ஆய்வு செய்து முடிவுகள் மண் வள அட்டையாக வழங்கப்பட்டுள்ளன.
ஆய்விற்கு மண் மாதிரியினை விவசாயிகள் தரும் பொழுது அதனுடன் விவசாயின் பெயர் மற்றும் முகவரி, தொலைபேசி எண், ஆதார் எண், சர்வே எண் மற்றும் சாகுபடி பயிர் ஆகிய விபரங்களை தெரிவித்திட வேண்டும்.
இதன்படி நாமக்கல் மாவட்டத்தில் வசந்தபுரத்தில் மண்பரிசோதனை நிலையமும், திருச்செங்கோடு நாராயணபாளையத்தில் நடமாடும் மண்பரிசோதனை ஆய்வகமும் இயங்கி வருகின்றது. இந்த ஆய்வகங்களை பயன்படுத்தி விவசாயிகள் மண் மாதிரி மற்றும் நீர் மாதிரிகளை ஆய்வு செய்து அதன் முடிவுகளின் அடிப்படையில் உரமிடுமாறும், இரசாயன உரங்களை குறைத்து இயற்கை உரங்களை பயன்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது. மண் மற்றும் நீர் மாதிரிக்கு ஆய்வு கட்டணமாக தலா ரூ.20/- செலுத்தி விவசாயிகள் பயன்பெறலாம்.
இதையும் படிங்க: மண் வள அட்டை- விவசாயிகள் எடுக்க வேண்டிய அவசியம் என்ன?
இம்மாதத்தில் இனிவரும் வாரங்களில் கீழ்காணும் விபரப்படி சிறப்பு மண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது எனவும். அதனைப் பயன்படுத்தி விவசாயிகள் தங்களது நிலங்களின் மண் மற்றும் நீர் மாதிரிகளை ஆய்வு செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
முகாம் நடைபெறும் நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை. முகாம் நடைப்பெறும் தேதி, வட்டாரம், கிராமத்தின் விவரங்கள் பின்வருமாறு-
- 05.10.2023 - வியாழன் - எருமப்பட்டி வட்டாரம்- வரகூர் கிராமம்
- 11.10.2023- புதன் - மோகனூர் வட்டாரம்- நஞ்சை இடையார் கிராமம்
- 17.10.2023- செவ்வாய்- பரமத்தி- கூடச்சேரி கிராமம்
- 19.10.2023- வியாழன் - கபிலர்மலை வட்டாரம் - கோப்பணம்பாளையம்
- 26.10.2023- வியாழன் - எலச்சிப்பாளையம் வட்டாரம்- நல்லிப்பாளையம் கிராமம்
மேலும், விவசாயிகள் மண் மாதிரிகள் மற்றும் நீர் மாதிரிகளை நேரடியாகவும் மண் பரிசோதனை நிலையம் வசந்தபுரம் மற்றும் மண் பரிசோதனை நிலையம், திருச்செங்கோடு நாராயணம்பாளையத்திலும் வழங்கி ஆய்வு செய்து மண்வள அட்டை பெற்று பயனடையலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:
வேளாண் கருவி மானியத்தில் பெற என்ன செய்ய வேண்டும்?
இ-வாடகை: விவசாயிகளுக்கு வேளாண் அமைச்சர் MRK முக்கிய அறிவிப்பு
Share your comments