விவசாயிகள் அனைவரும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியிலோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கியிலோ பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழகத்தில் வேளாண் பெருமக்களின் நலனுக்காக தமிழ்நாடு அரசு கடந்த 2021-22 மற்றும் 2022-23 ஆம் ஆண்டில் வேளாண் நிதிநிலை அறிக்கைகளில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறது.
மழை, வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் பயிர் இழப்புகளிலிருந்து விவசாயிகளை பாதுகாப்பதற்காக, தமிழ்நாடு அரசு பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.
பயிர் காப்பீடு (Crop Insurance)
தமிழ்நாட்டில் நடப்பாண்டில் எதிர்வரும் சிறப்புப் பருவம் மற்றும் ராபிப் பருவத்தில் பயிர் காப்பீட்டுத்திட்டத்தினை செயல்படுத்துவதற்கு, இந்திய வேளாண் காப்பீட்டுக் கழகம், இப்கோ-டோக்கியோ, பஜாஜ் அலையன்ஸ், எச்டிஎப்சி எர்கோ மற்றும் ரிலையன்ஸ் போன்ற 5 காப்பீட்டு நிறுவனங்களை அரசு தேர்ந்தெடுத்துள்ளது.
மேலும், 2022-23 ஆம் ஆண்டில் விவசாயிகளின் சார்பாக, காப்பீட்டு நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய காப்பீட்டுக் கட்டணத் தொகையில் மாநில அரசின் பங்குத் தொகையாக 2,057 கோடியே 25 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் நிதியினை அனுமதித்து கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி அன்று தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. ஏப்ரல் முதல் சூலை முடிய நடப்புக் குறுவை (Kharif) பருவத்தில் இயற்கைச் சீற்றங்கள் நிகழ்வது மிகவும் குறைவு.
எனினும், இக்காரீப் பருவத்தில் வேளாண் பயிர்களுக்கோ அல்லது தோட்டக்கலை பயிர்களுக்கோ இயற்கை இடர்பாடுகளினால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில், மாநில பேரிடர் நிதியிலிருந்து விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.
ஆகஸ்ட் 2022 முதல் சிறப்புப் பருவத்திலும், அக்டோபர் 2022 முதல் அடுத்த 2023-ம் ஆண்டு மார்ச் முடிய சாகுபடி செய்யப்படும் சம்பா மற்றும் குளிர்கால (Rabi) பருவத்திலும் சாகுபடி செய்யப்படும் முக்கிய பயிர்கள் அனைத்தும் மாநில அரசினால் அறிவிக்கை செய்யப்பட்டு, காப்பீடு செய்யப்படும்.
பயிர்க் காப்பீட்டுத்திட்டத்தில் பயிர்களை அறிவிக்கை ஆணை வெளியிட்டபின், விவசாயிகள் அனைவரும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியிலோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கியிலோ அல்லது பொது சேவை மையங்களிலோ உரிய ஆவணங்களுடன் தங்கள் பயிரை காப்பீடு செய்துகொள்ளலாம்.
மேலும் படிக்க
பனை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்: மானியத்துடன் நல்ல வருமானம்!
விவசாயிகளுக்கு டிராக்டர்: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
Share your comments