பெருமழை மற்றும் பெருவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு வீட்டுவசதி, தொழிற்கடன், பயிர் சேத நிவாரணம் உள்ளிட்ட 1000 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணத் தொகுப்பு திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.
டிசம்பர் 17 மற்றும் 18, 2023 ஆகிய நாட்களில் தூத்துக்குடி,திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன. மீட்பு பணிகள் பெரும்பாலும் நடைப்பெற்று முடிந்த நிலையில், வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு நிவாரணம் வழங்குவது தொடர்பான அறிவிப்பினை முதல்வர் நேற்று வெளியிட்டார்.
நேற்று தலைமைச்செயலகத்தில் நடைப்பெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு பிரிவினருக்குத் தேவையான உதவிகள் பட்டியலிடப்பட்டு அதற்கான தீர்வுகள் காணப்பட்டன. அதில் வெள்ளத்தால் விளைநிலங்களில் அடித்துவரப்பட்ட மண் படிந்துள்ளதை சரிசெய்யும் பணி கட்டணமின்றி மேற்கொள்ளப்படும் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
பயிர்ச்சேத நிவாரணம் - ரூ.250 கோடி
தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களில் சுமார் 2,64,000 ஹெக்டேர் பரப்பளவில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. இதற்கென இழப்பீட்டு நிவாரணம் மொத்தம் 250 கோடி ரூபாய் வழங்கப்படும். பயிர் சேதம் நேரிட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பயிர்க் கடனும், வேளாண் இயந்திரங்கள் வாங்குவதற்கும் கடன் வழங்கப்படும்.
தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தினால் இம்மாவட்டங்களில் விவசாய நிலங்களில் வெள்ளத்தால் அடித்துவரப்பட்ட மண் படிந்துள்ளது.
இதனை அகற்றி மீண்டும் விவசாயத்திற்கு ஏற்றவகையில் சீர்செய்துதரும் பணி மாநில வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலமாக கட்டணமின்றி மேற்கொள்ளப்படும். இதற்கென வெளி மாவட்டங்களிலிருந்து தேவையான கருவிகள் மற்றும் உபகரணங்கள் வரவழைக்கப்படும் எனவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
Read more: ரேஷன் கடையில் வெள்ள நிவாரணத்தொகை வழங்கும் பணி தொடங்கியது
சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகள் மற்றும் பழுதுபார்த்தல்-ரூ.385 கோடி
(அ) திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பகுதியாக சேதமடைந்த வீடுகளை பழுது பார்ப்பதும், முழுமையாக சேதமடைந்த வீடுகளை மீண்டும் புதிதாகக் கட்டித்தருவதும் அரசின் தலையாய கடமை என்பதை கருத்திற்கொண்டு வீடுகள் பழுது பார்ப்பதற்கும், முழுமையாக கட்டித்தருவதற்கும் அரசு முடிவெடுத்துள்ளது.
(ஆ) ஊரக வளர்ச்சித் துறை மூலம் முழுவதுமாக சேதமடைந்த வீடுகளை மீண்டும் புதிதாகக் கட்டுவதற்கு ரூ.4 இலட்சம் வழங்கிடவும், பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ. 2 இலட்சம் வரை வழங்குவது எனவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இத்திட்டம் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும்.
இத்திட்டத்தின் மூலம் மொத்தம் 385 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4577 புதிய வீடுகள் கட்டப்படும் மற்றும் 9975 வீடுகளுக்கு பழுது நீக்கம் பணிகள் மேற்கொள்ளப்படும்.இத்திட்டம் முழுவதும் மாநில அரசு நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும். இத்திட்டத்திற்கான வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட திட்டங்களைப் போல் சிறு வணிகர்களுக்கு ரூ.1 இலட்சம் வரை சிறப்பு கடன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வெள்ள நிவாரண கடனுதவித் திட்டம் ரூ.3 இலட்சம் வரை வழங்கும் பல்வேறு அறிவிப்பையும் முதல்வர் வெளியிட்டார்.
Read more:
விவசாயிகளுக்கு நற்செய்தி- நபார்டு வங்கி சார்பில் வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை வெளியீடு
Share your comments