விவசாயிகள் இரண்டாவது மற்றும் மூன்றாவது தவணை உரமிடுவதற்கு தேவையான உரங்களை ஆதார் அட்டையுடன் சென்று விற்பனை முனைய கருவி மூலம் பில் செய்து உரங்களை பெற்றுக் கொள்ளலாம் எனச் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நெல் நடவு செய்துள்ள விவசாயிகள் இரண்டாவது மற்றும் மூன்றாவது தவணை உரமிடுவதற்கு தேவையான 540 மெட்ரிக் டன் யூரியா உரம் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன எனச் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
நடப்பு சம்பா பருவத்தில் சுமார் 70000 ஹெக்டேர் பரப்பளவில் விவசாயிகளால் நெல் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது பயிர்கள் 20 முதல் 70 நாட்கள் வயதுள்ள பயிராக இருக்கிறது. இப்பயிர்களுக்கான அடி உரங்கள் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி விநியோகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது பயிர்களுக்கு இரண்டாவது மற்றும் மூன்றாவது தவணை உரமிடுவதற்குத் தேவையான உரங்களை இருப்பு வைப்பதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில், தற்பொழுது கோரமண்டல் நிறுவனத்திலிருந்து 100 மெ.டன்கள், MFL நிறுவனத்திலிருந்து 60 மெ.டன்கள் மற்றும் IPL நிறுவனத்திடமிருந்து 280 மெ.டன்கள் யூரியா உரங்கள் வரவழைக்கப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டு இருக்கிறது.
தற்பொழுது மாவட்டத்தில் யூரியா 2087 மெ.டன்கள், டிஏபி 370 மெ.டன்கள், பொட்டாஷ் 671 மெ.டன்கள் மற்றும் காம்பளக்ஸ் 1825 மெ.டன்கள் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் மொத்தமாகப் பயன்பாட்டிற்காக இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் பெறும் மற்றும் கடன் பெறாத விவசாயிகளுக்கும் உரங்கள் வழங்கிட அறிவுரை வழங்கப்பட்டு இருக்கிறது. விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்குரிய அடங்கல் மற்றும் ஆதார் அட்டையினை எடுத்துச் சென்று விற்பனை முனைய கருவி மூலம் பில் செய்து உரங்களை பெற்றுக் கொள்ளலாம் எனச் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
மேலும் படிக்க
Share your comments