நம்முடைய பகுதியில் இரவில் தான் மூன்று முனை மின்சாரம் வழங்கப்படுவதால் விவசாயில் தங்களுடைய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். பகலில் பதுங்கியிருக்கும் பாம்புகள் இரவில் உணவை தேடி வயல் வரப்புகளில், சாலையில் போகும்போது விவசாயிகள் தெரியாம மிதித்து விடுவதால் பாம்புகள் தங்களை தற்காத்து கொள்ள மனிதர்களை கடிக்கிறது.
பாம்புகள் வேண்டுமென்றே யாரையும் சீண்டுவது கிடையாது. அதுபோல மனிதர்களும் வேண்டுமென்றே பாம்புகளிடம் கடிபடுவதும் கிடையாது. எல்லா சம்பவங்களும் விபத்துகளுக்கு இணையாக தான் நடக்கிறது. விவசாயிகள் பாம்புக்கடியிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்வது குறித்தும், இந்தியாவில் பாம்புக்கடி விவரங்கள் குறித்தும் வேளாண் ஆலோசகர் சந்திர சேகரன் பகிர்ந்துள்ள தகவல்களின் விவரம் பின்வருமாறு-
இந்தியாவில் உள்ள பாம்பு வகைகள்:
நமது நாட்டில் 250-க்கும் மேற்பட்ட பாம்பு வகைகள் இருந்தாலும் கூட அவற்றுல் 60 வகை பாம்புகள் மட்டுமே விஷத்தன்மை உடையது. குறிப்பாக தமிழகத்திலுள்ள நல்ல பாம்பு, கண்ணாடி வீரியன், கட்டு வீரியன்,மற்றும் சுருட்டை பாம்பு இவை நான்கும் அதிக விஷத்தன்மை வாய்ந்தது. இவை மனிதர்களை கடித்தால் சில மணி நேரங்களில் இறப்பு நிச்சயம். மீதமுள்ள வெள்ளிக்கோல் வீரியன்,பச்சைபாம்பு,மண்ணுளி பாம்பு தண்ணீர் பாம்பு சாரை பாம்பு போன்றவை விஷம் குறைந்தவை.
பாம்புகளின் குணம் என்ன?
நன்கு விஷத்தன்மையிலுள்ள பாம்புகளும் மனித நடமாட்டம் உள்ள பகுதியில் அதுவும் குப்பை கூளங்கள் அடர்த்தியான பகுதியில் வசிக்கும். கண்ணாடி வீரியன் மற்றும் கட்டு வீரியன் இரவில் தான் தங்களுடைய இரை ( உணவு) தேடக்கூடியவை எலி, தவளை சிறிய பூச்சிகளை உணவாக உட்கொள்ளும்.
பகலில் பாம்புகள் பந்து போல சுருண்டு கிடக்கும். கட்டு வீரியனை விட கண்ணாடி வீரியன் பாம்பு அதிக ஆபத்தானது. இது ஒருவரை கடிக்க நேர்ந்தால் அதனுடைய விஷம் அடுத்த ஒரு மணி நேரத்துல இரத்தத்தை உறைய வைத்து விடும். கண்ணாடி வீரியன் கர்ப்பம் தரித்து குட்டிகள் ஈனும் ஆனால் கட்டுவீரியன் முட்டையிட்டு குஞ்சு களை பொறிக்கும் .
இந்தியாவுல பாம்புக்கடியால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த தகவல்கள்:
உலக அளவில் உலக சுகாதார அமைப்பின் கணக்கின்படி ஓவ்வொரு ஆண்டும் 54 லட்சம் பேர் கடிபடுவதாகவும் இதில் 138000 பேர்கள் உயிரிழப்புதாகவும் தரவுகள் உள்ளன. இதில் 50000 பேர்கள் இந்தியர் என்பது அதிர்ச்சியான தகவல். 2020 ஆம் ஆண்டு கணக்கின்படி இந்தியாவுல மேற்கு வங்கம் பாம்பு கடியில் முதலிடத்திலும், அடுத்த படியாக தமிழகம் இரண்டாவது இடத்திலே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க தகவல்.
தமிழகத்தில் பாம்புக்கடி நிலவரம் என்ன?
தமிழகத்தில் 2019 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை 1284 பேர் பாம்பு கடியால் அதுவும் நல்ல பாம்பு, கண்ணாடி வீரியன், கட்டு வீரியன் பாம்புகளால் தான் உயிரிழந்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன. 2022- கணக்கின்படி 27868 பேர் பாம்பு கடித்து அதுவும் அதிகமாக கிராமப்புறங்களில் தான் இச்சம்பவம் அதிகமாக நடைப்பெற்றுள்ளது. இதில் 406 பேர் இறந்துள்ளனர்.
பாம்பு கடியில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?
விவசாயில் இரவில் வயல் வரப்புகளில் நடமாடும் போது நீண்ட சூ டைப் செருப்பு அணிந்து கொள்ள வேண்டும். நீண்ட அதிக வெளிச்சம் தரக்கூடிய டார்ச் லைட்டை பயன்படுத்த வேண்டும். நடக்கும் போது கையில் கம்பு தடி வைத்து தரையை தட்டிப்பார்த்து நடக்க வேண்டும். நெல் வயலில் எலிகளை கட்டுபடுத்திட கிட்டி வைத்தல் பறவை தாங்கி T வடிவத்தில் அமைக்க வேண்டும். வளர்ப்பு நாயுடன் இரவில் நடந்து செல்லுவது பாதுகாப்பாக இருக்கும். பாம்பு கடித்தவுடன் அருகேயுள்ள அரசு மருத்துவ மனையில் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
எனவே பாம்பு கடியில் இருந்து தற்காத்து கொள்ள விவசாயிகள் இரவில் நடமாடும்போது அலட்சியமாக இருக்க கூடாது. பாதுகாப்பு கருதி எச்சரிக்கையாக இருந்தால் தப்பிக்கலாம் என வேளாண் ஆலோசகர் அக்ரி சு.சந்திர சேகரன் தெரிவித்துள்ளார். மேற்குறிப்பிட்ட தகவல்கள் தொடர்பாக ஏதேனும் மாற்றுக் கருத்துகள்/முரண்கள் இருப்பில் வேளாண் ஆலோசகரை தொடர்புக் கொள்ளலாம். தொடர்பு எண்: 9443570289
மேலும் காண்க:
ரொம்ப கவலைப் படாதீர்கள்- வெங்காய விவசாயிகளுக்கு வேளாண் அமைச்சர் பதில்
Share your comments