உரங்களை சரியான முறையில் கையாள்வது, விவசாயத்தில் மிக முக்கியம். மண்ணிற்கு பல சத்துக்களை அளிப்பது உரங்கள் தான். ஆகவே, உரங்களைப் பயன்படுத்தும் போது முறையாக கையாள வேண்டும்.
சத்துக்கள்
மண்ணைப் பொறுத்தே மகசூல் (Yield) மாறுபடுகிறது. தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து ஆகியவற்றை யூரியா, டிஏபி, பொட்டாஷ் மற்றும் சூப்பர் பாஸ்பேட் உரங்களை இடுவதன் மூலம் மண்ணுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கிறது. இதையும் அளவுடன் பயன்படுத்த வேண்டும்.
இந்த பேரூட்ட சத்துகளுடன் நுண் சத்துக்களான, இரும்பு, போரான், மாங்கனிஸ், துத்தநாகம், மாலிப்டினம், தாமிரம், குளோரின் ஆகியவை மிக குறைந்த அளவு தேவைப்படும். இந்த நுண் சத்துக்கள் தொழு உரத்தில் அதிக அளவு கிடைக்கிறது. சாணப்பற்றாக்குறையால் விவசாயிகள் தொழு உரம் அதிகம் இடுவதில்லை. இதனால் நுண் சத்துக்கள் கிடைக்காமல் மகசூல் குறைகிறது.
300 கிலோ உரம்
குறைந்த அளவு தொழு உரத்தை ஊட்டமேற்றி பயன்படுத்தினால் நுண்சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும். நன்கு மக்கிய மாட்டு சாண (Cow Dung) தொழு உரம் 300 கிலோவுடன் 50 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரத்தை சிறிது சிறிதாக கலந்து குமித்து வைக்க வேண்டும். குவியலின் மீது களிமண் அல்லது மாட்டு சாணம் கொண்டு காற்று புகா வண்ணம் நன்றாக பூசி மொழுக வேண்டும். 30 நாட்களுக்கு தினமும் லேசாக தண்ணீர் தெளிக்க வேண்டும். அதன் பின் கிளறி ஆற வைத்து கடைசி உழவின் போது ஒரு ஏக்கருக்கு 300 கிலோ இடலாம். இதனால் ஏக்கருக்கு 5 டன் தொழு உரம் இடுவதன் மூலம் கிடைக்கும் பயன்களை இந்த 300 கிலோ உரம் ஈடு செய்து விடும்.
வயல் மண் பொல பொலப்பாகி காற்றோட்டம் அதிகரிக்கிறது. மண்ணின் நீர் பிடிப்பு தன்மை, பயிர்களின் வேர் வளர்ச்சி அதிகரிக்கிறது. ஊட்டமேற்றிய தொழு உரத்தில் களை விதைகள் அழிக்கப்படுவதால் வயலில் களை செடிகள் வளராது. பயிருக்கு தேவையான அனைத்து நுண் சத்துக்களும் கிடைக்கின்றன. தங்களது தோட்டத்திலேயே அனைத்து விவசாயிகளும் ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரித்து அதிக மகசூல் பெறலாம்.
-அமர்லால்
வேளாண்மை உதவி இயக்குனர்
திருப்புல்லாணி
ராமநாதபுரம்
94432 26130
மேலும் படிக்க
கொரோனாவால் மீண்டும் முடங்கியது தென்னங்கீற்று முடையும் தொழில்!
பருத்தி சாகுபடியை ஊக்கப்படுத்த மானிய விலையில் விதை, இடுபொருட்கள் வழங்க விவசாயிகள் கோரிக்கை!
Share your comments