இந்தியாவில் மண் வளத்தை மேம்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், மாபெரும் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆலோசனை (Advice)
நதிகளை மீட்போம் இயக்கம் மற்றும் காவேரி கூக்குரல் இயக்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர்களின் கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து சத்குருவும், நதிகளை மீட்போம் இயக்கத்தின் நிர்வாக குழு உறுப்பினரும் இஸ்ரோ முன்னாள் தலைவருமான திரு.ஏ.எஸ்.கிரண் குமார் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது சத்குரு பேசியதாவது:
கரிம வளம் (Organic resources)
விவசாயம் நன்றாக நடப்பதற்கும், நல்ல மகசூல் எடுப்பதற்கும் மண்ணில் குறைந்தபட்சம் 4 முதல் 6 சதவீதம் கரிம வளம் இருக்க வேண்டும்.
ஆனால், தற்போது இந்தியாவில் இருக்கும் மொத்த விவசாய நிலங்களில், 42 சதவீத மண்ணில் கரிம வள அளவு அரை சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. இது மிகப்பெரிய பேரழிவாகும்.
அழியும் டெல்டா (Perishable delta)
ஒரு காலத்தில் காவேரி டெல்டா விவசாயிகள் நாட்டிலேயே செழிப்பான விவசாயிகளாகப் போற்றப்பட்டனர். அவர்கள் ஆண்டுக்கு 4 முறை பயிர் அறுவடை செய்து வந்தனர். ஆனால், தற்போது ஒரு முறை மட்டுமே அறுவடை செய்கின்றனர். இதற்கு காரணம், வருடத்தின் 5 மாதங்கள் காவேரி நீர் டெல்டா பகுதியை அடைவதே இல்லை.
வளம் குறைகிறது (Wealth is declining)
நம் கண்களுக்கு எளிதில் புலப்படும் வகையில் இருப்பதால், காற்று மற்றும் நீர் மாசுபாடுகளுக்கு அதிகம் கவனம் கிடைக்கிறது. ஆனால், அதை விட மிக முக்கிய பிரச்சினை மண் வளம் குன்றுவது தான்.
மாசுபாடுகள் (Pollution)
காற்று, நீர் மாசுபாடுகள், பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் மாசு ஆகியவை எல்லாம் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் அல்ல. அவை ‘கார்பரேசன் பிரச்சினைகள்’. அதற்கு உரிய சட்டங்களை உருவாக்கி, அதைக் கடுமையாக அமல்படுத்தினால், அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுவிட முடியும். ஆனால், அதுபோல் குன்றிய மண் வளத்தை சில ஆண்டுகளுக்குள் மேம்படுத்த முடியாது.
150 ஆண்டுகள் (150 years)
மண்ணில் கரிம வளம் அரை சதவீதத்திற்கும் கீழ் சென்றால், அதை மீண்டும் வளமாக்க கிட்டதட்ட 150 ஆண்டுகள் தேவைப்படும் என வல்லுநர்கள் சொல்கிறார்கள். எனவே மண் வளத்தை மீட்டெடுக்க விவசாயிகளின் ஒத்துழைப்பு அவசியம்.
ரசாயன விவசாயம் (Fertilizers Used)
பல நூறு ஆண்டுகளாக இயற்கை வழியில் விவசாயம் செய்த நம் விவசாயிகள் கடந்த 40 ஆண்டுகளில் செயற்கை விவசாயத்துக்கு மாறினர். இது மண்ணின் வளத்தை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளது. அதை சரிசெய்ய விவசாய நிலங்களில் மரங்களும், விலங்குகளின் கழிவுகளும் தேவை.
மரம் சார்ந்த விவசாயம் (Tree based agriculture)
அதற்காக தான் நாம் காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலம் விவசாயிகளை மரம் சார்ந்த விவசாய முறைக்கு மாற்றி வருகிறோம். இது ஒரு புதிய பரிசோதனை அல்ல.
ஏற்கனவே ஈஷாவின் 20 ஆண்டுகால களப் பணியால் சுமார் 1 லட்சம் விவசாயிகள் மரம் சார்ந்த விவசாயத்திற்கு மாறி உள்ளனர்.
இதன்மூலம் மண் வளம் மேம்படுவதும் விவசாயிகளின் பொருளாதாரம் அதிகரித்து இருப்பதும் கண்கூடாக நிரூபணமாகி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...
Share your comments