கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில், தென்னை சாகுபடி (Coconut Cultivation) அதிகம் உள்ளது. இதனால், தேங்காய் மட்டையை மூலப்பொருளாக கொண்டு, 800-க்கும் மேற்பட்ட தென்னை நார், தென்னை நார் துகள் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.
தென்னை நாரில் வருவாய்:
தென்னை மரத்தை பொறுத்தவரை அதில் இருந்து கிடைக்கும் எந்தப்பொருளும் வீண் கிடையாது. மெத்தை, கயிறு என, சில பொருட்களுக்கு மட்டுமே தென்னை நார் (Coconut fiber) பயன்படுத்தப்படுகிறது. இதை மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றும் பட்சத்தில் வருவாய் (Income) அதிகரிப்பதுடன், பொள்ளாச்சி போன்ற ஊர்களுக்கு அங்கீகாரமும் வலுப்பெறும். சீனாவுக்கு, 60 முதல், 70 சதவீதம் வரை தென்னை நார் ஏற்றுமதி (Coconut fiber exports) செய்யப்படுகிறது. அங்கு உள்நாட்டு தேவை போக, 30 முதல், 40 சதவீதம் வரை இருப்பு வைக்கப்பட்டு, அங்கிருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்தியாவில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பில் உற்பத்தியாளர்கள் கவனம் செலுத்தினால் வருவாயை அதிகரிக்க முடியும்.
கயிறு வாரியம் உதவிக்கரம்:
பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக தென்னை நார் பயன்படுத்தி, தட்டுகள் உள்ளிட்டவற்றை தயாரிக்கலாம். அதேபோல், பலகை, செடி, கொடிகள் வளர்ப்பு பைகள், உறிஞ்சும் ‘ஸ்டிரா’ (straw) என பல்வேறு தேவைகளுக்கு இதை தயாரித்து, சர்வதேச சந்தையில் தென்னை சார்ந்த வர்த்தகத்தை (Trade) வளர்ச்சி நிலைக்கு கொண்டு செல்ல முடியும். அதாவது, சீனாவில் இருந்து பிற நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் மதிப்புக்கூட்டு பொருட்களை இந்தியாவில் இருந்து குறிப்பாக, தமிழகத்தில் இருந்து அனுப்பிவைக்க முடியும். இதற்காக மத்திய அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில் அமைச்சகம், கயிறு வாரியம் (Rope Board) வாயிலாக உதவிக்கரம் நீட்டுகிறது. மழைக் காலங்களில் தென்னை நார் உலரவைப்பதில் சற்று சிரமம் இருந்தாலும், அதற்கு தீர்வுகாண புதிய தொழில்நுட்பங்களை கண்டறிவதில் இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும். தென்னை நார் தொழில் முனைவோர், புதிய பொருட்களை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் வழங்கப்படும் பயிற்சிகளை (Training) நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
முத்ரா (ம) ஸ்டேண்ட் அப் இந்தியா திட்டங்கள்:
தென்னையை பொறுத்தவரை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றுவதன் வாயிலாக, சீனாவை விடுத்து இந்தியாவை திரும்பி பார்க்க வைக்க முடியும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களையும், உதவிகளையும் வழங்கி வருகிறது. முத்ரா (Mudra) ஸ்டேண்ட் அப் இந்தியா (Stand-up India) போன்ற திட்டங்களை, தென்னை நார் தொழில்முனைவோர் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம். மத்திய, மாநில அரசுகளின் உதவித்திட்டங்கள் குறித்து, பொள்ளாச்சி உட்பட இடங்களில் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. திருப்பூர் என்றாலே பனியன் என்ற அடையாளம் போல், தென்னை பொருட்கள் என்றால் பொள்ளாச்சி என்ற முகம் மாற்றும் அளவுக்கு கொண்டுசெல்ல முடியும். இதற்கு தொழில் முனைவோரிடம் விடா முயற்சியும், ஆர்வமும் அவசியம் என்று மாவட்ட தொழில் மைய அதிகாரி கூறினார்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
குறைந்த நேரத்தில் காயம் ஏதுமின்றி பால் கறக்க, நவீன பால் கறக்கும் இயந்திரம்!
நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தித் திறனுக்கான விருது! முதல்வர் அறிவிப்பு!
Share your comments