மண் வளத்தை மேம்படுத்த தமிழக அரசு, இயற்கை உரம் தயாரிக்க முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக விவசாயிகள் பாரம்பரிய விவசாய முறையை தவிர்த்து முழுவதுமாக ரசாயனம் கலந்த உரத்தை பயன்படுத்தும் நவீன முறையை பின்பற்றுவதால் தற்போது யூரியா இல்லாமல் விவசாயம் செய்ய முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ரசாயன உரங்களை மட்டுமே நம்பி இருக்காமல் இயற்கை விவசாயத்தை பயன்படுத்த முன்வர வேண்டும்.
மண்புழு உரம்
விவசாயிகள் இயற்கையான முறையில் விவசாயம் செய்வதற்கும், குறைந்த செலவில் அதிக மகசூல் (High Yield) பெறுவதற்கும் அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளில் இருந்து மண்புழு உரம் (Vermi Compost) தயாரித்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். போதிய நீர்ப்பாசன வசதி இருப்பதால் தமிழகம் முழுவதும் இயற்கை விவசாயிகள் அதிகரித்துள்ளனர்.
நேரடி நெல் விதைப்பு: தண்ணீரை சிக்கனப்படுத்தி, செலவையும் குறைக்கலாம்!
இந்நிலையில் இயற்கை விவசாயம் குறித்து தும்பலபட்டியை சேர்ந்த விவசாயி ரெங்கசாமி கூறுகையில், ரசாயன உரங்களையே கடந்த 50 வருடங்களாக பயன்படுத்தி வந்ததால் நிலங்களும், ரசாயன உரத்திற்கு ஏற்றதாகி விட்டது. ரசாயன உரங்களை பயன்படுத்தி விளைவிக்கப்படும் நமது விளைபொருட்கள், உலக சந்தையில் விற்பனை வாய்ப்பை இழந்து விட்டது. இதனை மாற்ற தமிழக அரசு தனிவாரியம் அமைத்து, நகரங்கள் மற்றும் கிராமங்களில் கிடைக்கும் மக்கும் குப்பைகளை, மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் மண்புழு உரமாக மாற்ற முன்வர வேண்டும் என்றார்.
எவ்வாறு உள்ளூர்ரக மண்புழுக்களை தேர்வு செய்யமுடியும்?
- மண்ணின் மேற்பரப்பில் தென்படக்கூடிய, புழுக்களின் ஆக்கிரமிப்புள்ள மண்ணை கண்டறிய வேண்டும்.
- 500 கிராம் வெல்லம் மற்றும் ஒரு கிலோ மாட்டுச்சாணம் ஆகிய இரண்டையும் 2 லிட்டர் தண்ணீரில் கரைத்து 1 மீ x 1 மீ பரப்பளவில் மண்ணின் மேல் தெளிக்க வேண்டும்.
- வைக்கோல் கொண்டு மூடிவிட்டு பின்பு அதன் மேல் கோணிப்பை வைத்து போர்த்த வேண்டும்.
- 20-30 நாட்களுக்கு தண்ணீர் தெளிக்க வேண்டும்.
- அந்த இடத்தில், மண்புழுக்கள் மேற்பரப்பில் அதிக அளவில் வரத்தொடங்கும். அவற்றை சேகரித்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
மண்புழு உரத்தின் பயன்கள்
- இயற்கை கழிவுகளை, மண்புழுக்களைக் கொண்டு மட்க வைப்பதன் மூலம், நல்ல கட்டமைப்புடன் கூடிய, நச்சுத்தன்மையற்ற நல்ல மதிப்பூட்டமுள்ள எரு கிடைக்கிறது.
- பயிர் வளர்ச்சிக்கு தேவையான கணிமப்பொருள்களையும், நுண்ணூட்டங்களையும் பயிர்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்து நல்ல கலப்பு உரமாக செயல்படுகிறது.
- தொழுஉரம், மண்ணில் உள்ள நோய் பரப்பக்கூடிய நுண்ணுயிர்களை குறைத்து விடுகிறது.
- பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ள மக்களுக்கும், சமுகத்தின் கீழ்தட்டில் உள்ள மக்களுக்கும், மண்புழு தயாரித்தல் ஒரு சிறந்த குடிசைத் தொழிலாக அமைந்து அவர்களின் வாழ்க்கைக்கு கூடுதல் வருமானத்தை அளிக்கிறது.
- ஒவ்வொரு கிராமத்திலும், வேலையில்லாத இளைஞர்களையும் பெண்களையும் இணைத்து கூட்டுறவு சங்கங்கள்அமைத்து, மண்புழு உரம் தயார்செய்யலாம். மேலும் அவர்களே விலை நிர்ணயம் செய்து கிராம விவசாயிகளுக்கு விற்பனை செய்து ஒரு புதுமை படைக்கலாம். இதன் மூலம் இளைஞர்கள் நல்ல வருமானம் பெறுகின்றனர். அதோடுமட்டுமல்லாமல் நல்ல தரமான தொழுஉரத்தை அளித்து ஒரு நல்ல நீடித்த வேளாண்மை தொழில் செய்ய ஊக்குவிக்கிறது.
மேலும் படிக்க
பசுமைக்குடில் காய்கறிகளை தாக்கும் நூற்புழுக்கள்: கட்டுப்படுத்தும் முறை
Share your comments