ஐ.சி.ஏ.ஆர் - மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் (ICAR-CTCRI), திருவனந்தபுரம்; மண்டல வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் (RARS), கேரள வேளாண் பல்கலைக்கழகம், பட்டாம்பி ஆகியவற்றுடன் இணைந்து குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை இயற்கையான முறையில் எதிர்த்துப் போராடுவதற்கான “வானவில் உணவுப் பிரச்சாரத்தை” அட்டப்பாடி பகுதியில் தொடங்கியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், அட்டப்பாடியில் பழங்குடியினர் வாழும் பகுதியில் ஊட்டச்சத்து நிறைந்த கிழங்கு பயிர்களான ஆரஞ்சு மற்றும் ஊதா நிற சதை கொண்ட - சர்க்கரைவள்ளி கிழங்கு (வைட்டமின் ஏ மற்றும் அந்தோசயனின் நுண்ணூட்டச் சத்து நிறைந்தது) மற்றும் ஊதா சதை கொண்ட கிழங்கு (அந்தோசயனின் நுண்ணூட்டச் சத்து நிறைந்தது) ஆகியவை அறிமுகப்படுத்தப்படும். ஆரஞ்சு சதை கொண்ட சர்க்கரைவள்ளி கிழங்கு குழந்தைகளிடையே வைட்டமின் ஏ குறைபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான இயற்கையான வழியாக உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது மற்றும் ஊதா-சதை கொண்ட சர்க்கரைவள்ளி கிழங்கு சில வகை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது அல்லது தாமதப்படுத்துகிறது.
இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, அகலி ஊராட்சியில், ஐசிஏஆர் - மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி டாக்டர். பி. சேதுராமன் சிவக்குமார் மற்றும் பட்டாம்பி மண்டல ஆராய்ச்சிநிலையத்தை சேர்ந்த, பேராசிரியர் டாக்டர் பி.சண்முகசுந்தரம் ஆகியோர் அடங்கிய திட்டக்குழுவினரால், அகழி பஞ்சாயத்தில் ஒரு விவசாயிகள் கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த கலந்துரையாடல் கூட்டத்தில், நுண்ணூட்டச் சத்து அதிகமாகவுள்ள சர்க்கரைவள்ளி கிழங்கு வகைகளான பூ சோனா (ஆரஞ்சு-சதை) மற்றும் பூ கிருஷ்ணா (ஊதா-சதை) விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. பள்ளி மாணவர்களை கவரும் வகையில், ஆரஞ்சு - சர்க்கரைவள்ளி கிழங்கு சிப்ஸ், வைட்டமின் ஏ நிறைந்த பாஸ்தா, அந்தோசயனின் ஊதா பாஸ்தா போன்ற பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
பயிர் பெருக்கம் செய்வதற்காக விவசாயிகளுக்கு ஊதா சதை கொண்ட சர்க்கரைவள்ளி கிழங்கு நடவு பொருட்கள் வழங்கப்பட்டது. உள்ளூர் விவசாய ஆர்வலர் திரு. உன்னிகிருஷ்ணன் இந்த திட்டத்தை செயல்படுத்த விவசாயிகளை ஏற்பாடு செய்தார். இருளர் சமூகத்தை சேர்ந்த 25 பழங்குடி விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க:
India Post: அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு: பெண்களுக்கு கட்டணம் இல்லை
Share your comments