தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கருப்பட்டிபட்டி பொட்டலாம் தெரு எனும் கிராமத்தில் வளவப்பன் என்ற விவசாயி வெண்டைக்காய் சாகுபடியில், தற்போது நல்ல லாபத்தை ஈட்டி வருகிறார். இது குறித்து விவசாயி வளவப்பனுடன் இந்த சாகுபடி குறித்து விசாரித்த போது, வெண்டைக்காய் சாகுபடி குறித்து பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். வாருங்கள் பதிவில் காணலாம்.
வெண்டைக்காய் சாகுபடி:
வெண்டைக்காய் சாகுபடியைப் பொருத்தவரை, வருடம் முழுவதும் பயிரிடக் கூடிய பயிர்களில் ஒன்றாகும். எந்த மாதத்திலும் இதனை பயிரிடலாம். வெண்டைக்காய் சாகுபடியில் தண்ணீர் அளவுடன் இருத்தல் வேண்டும். தண்ணீர் அதிக அளவில் விளை நிலத்தில் இருந்தால், சாகுபடியானது பெரிய அளவில் மகசூல் தராது என்பதை நினைவில் கொள்ளவும். மேலும் மற்ற காய்கறி சாகுபடிகளில் வெண்டைக்காய் சாகுபடியே, அதிக அளவில் லாபத்தை ஈட்டி தரக்கூடிய, ஒரு சாகுபடியாகும்.
வெண்டைக்காய் விதை விதைவிக்கும் முறை:
பெரும்பாலும் மேடான பகுதிகளிலேயே, இந்த வகையான சாகுபடிகளை செய்ய முடியும். உதாரணத்திற்கு ஒரு ஏக்கர் நிலத்தில் வெண்டைக்காய் பயிரிட வேண்டும் என்றால் முதலில் விளைநிலங்களை தயார் படுத்துவதற்காக ஏறு ஒட்ட வேண்டும். பின்பு, புற்கள் அதிக அளவில் இருந்தால் அதனை எடுத்துவிட்டு இயற்கை உரமோ அல்லது செயற்கை உரமோ தெளித்த பின்னர் அந்த நிலம் முழுவதும் பட்டம் இட வேண்டும் (வாய்க்கால் முறையில் பல வரிசைகளில் கோடு கோடாக உருவாக்கவது நல்லது) இந்த வாய்க்காலை 1.5 அடிக்கு ஒரு வாய்க்காலாக முறைப்படுத்த வேண்டும். பின்னர், ஒரு ஏக்கர் நிலத்திற்கு 700 கிராம் வெண்டைக்காய் விதைகளை வாய்க்கால்களில் தேவையான அளவு மட்டுமே தண்ணீர் செலுத்திய பிறகு ஒரு வாய்க்கால் விட்டு ஒரு வாய்க்கால்களில் முழுவதுமாக விதைகளை செலுத்த வேண்டும்.
சாகுபடி செய்ய ஆகும் காலம், எவ்வளவு?
வெண்டைக்காயானது முதலில் பூ பூக்கும், அதன் பின்னரே காய் காய்க்கும். இந்த வெண்டைக்காய் சாகுபடியானது சரியாக விதை செலுத்திய 30- 35 நாள்களில் வெண்டைக்காய்களை பறித்திடலாம். மேலும் ஒரு முறை விதைக்கப்படும் வெண்டைக்காய் விதையின் வாழ்நாள் ஆனது மூன்றில் இருந்து நான்கு மாத காலம் ஆகும்.
இந்த நான்கு மாதங்களும் செடிகளில் வளரும் வெண்டைக்காய்களை முதல் 30-35 நாட்கள் பிறகு ஒடித்த பின்னர், சாகுபடியானது கடைசி மூன்று மாதங்களில் அதிக அளவில் இருக்கும் என்பது குறிப்பிடதக்கது. இந்த வெண்டைக்காய்களை ஒருநாள் விட்டு ஒரு நாள் சாகுபடி செய்திடலாம். ஒரு நாள் ஒடிக்கும் வெண்டைக்காய் மறு நாளே அந்த செடிகளில் வளர்ந்து விடும் எனவே, அந்த வெண்டைக்காய் முத்திவிடுவதற்கு முன்னதாகவே, கண்காணித்து ஒடித்திட வேண்டும். மேலும் ஒரு ஏக்கர் நிலத்திற்கு, ஒரு முறை (முதல் 30 நாட்களில்) சாகுபடி செய்யப்படும் வெண்டைக்காய்களின் எடை அதிகபட்சம் 60 இலிருந்து 80 கிலோ இருக்கும் என விவசாயி வளவப்பன் கூறிகிறார்.
புதிதாக இந்த வகையான சாகுபடி செய்பவர்கள் பின்பற்ற வேண்டிய முக்கியமானவை:
மற்ற காய்களை விட வெண்டைக்காய் சாகுபடியில் அதிக அளவில் லாபம் ஈட்ட முடியும் என்பது ஒரு நிதர்சனமான உண்மையாகும், இதனை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் அதே அளவில், வெண்டைக்காய் சாகுபடிக்கு அதிக அளவு கண்காணிப்பும் கவனமும் தேவைப்படுவது குறிப்பிடதக்கது.
ஏனென்றால் அதிக அளவில் தண்ணீர் சேர்ந்தாலோ அல்லது தொற்று கிருமிகள் வந்தாலோ பூச்சிகள் சேதப்படுத்தினாலோ உரங்களை மாற்றி தெளித்தாலோ உதாரணத்திற்கு (பொட்டாசியம் உரம் இந்த வகையான சாகுபடிக்கு ஆகாது) இந்த சாகுபடியை முற்றிலும் வளர விடாமல் அழித்துவிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அதிக முறை செடிகளை வந்து கண்காணிப்பதோடு முடிந்த அளவு இயற்கை உரங்களை பயன்படுத்துவது சிறப்பான ஒன்றாகும்.( செயற்கை உரங்களும் பயன்படுத்தலாம்) மேலும் மழைக்காலங்களில் கவனமாக இருந்து தண்ணீரை வாய்க்கால் மூலம் வெளியேற்றும் படி செய்வது முக்கியமான ஒரு வேலையாகும். இந்த அனைத்து வேலைகளையும் சரியாக செய்தால் வெண்டைக்காய் சாகுபடியில் அதிக அளவில் லாபம் பார்க்கலாம் என்கிறார் விவசாயி வளவப்பன்.
மேலும் படிக்க:
Beef Tweet: சர்ச்சையில் சிக்கிய சென்னை காவல்துறையினர்
Agri Updates: விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் பரிசு- அதிரடி அறிவிப்பு!
Share your comments