1. விவசாய தகவல்கள்

தூத்துக்குடியில் 725 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் - ஆட்சியர் தகவல்!

Daisy Rose Mary
Daisy Rose Mary
கொப்பரை
Image credits : Dinamalar

தூத்துக்குடி மாவட்டத்தில் 725 மெட்ரிக் டன் அளவிற்கு கொப்பரை தேங்காய்கள் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார், அதில் தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு நல்ல விலை பெறுவதற்கும் தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது. பயறு வகைகளின் விலை குறைந்தபட்ச ஆதார விலைக்கு கீழ் சென்ற போது, விலை ஆதார திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஆதார விலையில் பயறு வகைகள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கொள்முதல் செய்யப்பட்டதால், பயறு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைத்தது.

அதே போன்று கொப்பரை தேங்காய்களின் விலை குறைந்துள்ளதால், தென்னை விவசாயிகளுக்கு உதவும் வகையில், விலை ஆதார திட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலையில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்து உள்ளது.

ஆதார விலையில் கொப்பரை கொள்முதல் (Purchase of copra at MSP)

விலை ஏற்ற இறக்கத்தில் இருந்து விவசாயிகளை பாதுகாத்திட தமிழ்நாடு முழுவதும் 40 ஆயிரம் மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. தென்னை விவசாயிகளிடம் இருந்து கொப்பரை தேங்காய் எளிதில் கொள்முதல் செய்வதற்காக, தமிழ்நாடு வேளாண்மை விற்பனை வாரியம் மூலம் 40 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்படும்.

கொள்முதல் இலக்கு நிர்ணயம் (Copra Purchase target)

பந்து கொப்பரை மற்றும் அரவைக் கொப்பரை என இரண்டு வகைகளாக தேங்காய் கொப்பரை கொள்முதல் செய்யப்படும். மத்திய அரசினால் 2020-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலையான பந்து கொப்பரைக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.103-ம், அரவைக் கொப்பரைக்கு ரூ.99.60 என்ற விலையில் கொள்முதல் செய்யப்படும். கொள்முதல் பணி அடுத்த ஆறு மாதங்கள் நடைபெறும். 500 மெட்ரிக் டன் பந்து கொப்பரையும், 39 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரவைக் கொப்பரையும் கொள்முதல் செய்ய அரசால் திட்டமிடப்பட்டு உள்ளது.

Credit : Covai post

தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 725 மெட்ரிக் டன் அரவைக் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட உள்ளது. இந்த கொள்முதல் 23.12.2020 வரை நடைபெறும். எனவே விவசாயிகள் கொள்முதல் நிலையத்தை அணுகி தங்களது பெயர்களைப் பதிவு செய்யலாம்.

பெயர்களைப் பதிவு செய்யும் போது நிலச்சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை மற்றும் வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும். மத்திய அரசின் கொள்முதல் நிறுவனமான நாபெட் நிறுவனம் பரிந்துரைக்கும் குறைந்தபட்ச தரத்தில் கொப்பரை இருத்தல் அவசியம் ஆகும்.

கொப்பரைக்கு குறைந்தபட்ச தரம் (Minimum quality per Copra)

அரவைக் கொப்பரைக்கு அயல் பொருட்கள் 1 சதவீதத்துக்கும், பூஞ்சானம், கருமை கொண்ட கொப்பரைகள், சுருக்கம் கொண்ட கொப்பரைகள், சில்லுகள் 10 சதவீதத்துக்கும், ஈரப்பதம் 16 சதவீதத்துக்கும் மிகாமல் இருப்பது நாபெட் நிறுவனம் நிர்ணயித்துள்ள குறைந்த பட்ச தரமாகும். விவசாயிகள் இந்த தரத்தை உறுதி செய்து குறைந்தபட்ச ஆதார விலை பெறலாம். மேலும் விவரங்களுக்கு சாத்தான்குளம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளரை, 76038 87549 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
தமிழகத்தில் கொப்பரை கொள்முதலுக்கு தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம் மாநில முகமையாக செயல்படுகின்றது. கொப்பரை தேங்காய்க்கான தொகையை விரைவில் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்திட அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு உள்ளது. சேமிப்பு கிடங்குகளில் கொப்பரை குவியல்கள் சேர்க்கப்பட்ட நாளில் இருந்து மூன்று நாட்களுக்குள் அதற்குரிய தொகை வழங்கப்படும்.
தமிழ்நாடு அரசு தென்னை விவசாயிகளின் நலனுக்காக மேற்கொண்டுள்ள இந்த கொப்பரை கொள்முதல் திட்டத்தில் தென்னை விவசாயிகள் அதிக அளவில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

English Summary: Purchase of 725 Metric tonnes copra in Thoothukudi Says Collector Published on: 15 July 2020, 09:50 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.