Rain water harvesting
தண்ணீர் பற்றாக்குறையினால் நடப்பாண்டு குறுவை சாகுபடி எந்தளவிற்கு மோசமடைந்துள்ளது என்பதை விவரிக்க வார்த்தைகள் இல்லை. இந்நிலையில் கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமெடுத்துள்ளதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இனி அடுத்த சில வாரங்களில் வட கிழக்கு பருவமழையும் தொடங்க உள்ள நிலையில் பெய்யும் மழைநீரை முறையாக சேமித்து விவசாய பணிகளில் ஈடுப்படுத்தினால் பயிர் வாடுவதை தடுக்க இயலும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.
இதனிடையே வேளாண் ஆலோசகர் அக்ரி சந்திர சேகரன், மழைநீரை அறுவடை செய்து பராமரிக்கும் கட்டமைப்புகள் குறித்த தகவல்களை கிரிஷி ஜாக்ரானுடன் பகிர்ந்துள்ளார். அவர் குறிப்பிட்ட விவரங்கள் பின்வருமாறு-
விண்ணிலிருந்து மழைத்துளிகளை ஓரு துளியும் வீணாகாமல் சேகரிக்க வேண்டும் என்பதற்காகவே "அறுவடை" என்ற சொல்லை பயன்படுத்துகிறேன். மழை பெய்யும் போது அந்தந்த இடங்களில் சேகரிப்பதன் மூலமாக நில வளமும் மண் வளமும் காக்கப்படுகிறது. மழைநீர் சேகரிக்க பயன்படும் கட்டமைப்புகளை இனி பார்க்கலாம்.
நீர் சேகரிப்பு குழி:
இவ்வகையில் மழைநீர் அறுவடை செய்வது மிக எளிது. குழியின் நீளம் அகலம் இவ்வளவு தான் இருக்க வேண்டும் என்றில்லை. சாதாரணமாக நெடுஞ்சாலைகளின் சாலைக் கரைகளை பலப்படுத்த உதவும் குழிகள், பள்ளங்கள் போல அமைக்கலாம். இதனுடைய நோக்கமே பெய்கின்ற மழை அதே இடத்துல சேகரிக்கப்பட்டு பூமிக்குள் செல்ல ஏதுவாக வழிவகை செய்ய வேண்டும் என்பது தான். சிறு/ குறு விவசாயிகள் தங்கள் நிலங்களில் உரக்குழிகள் இருப்பது போல அமைக்கலாம்.
சமமட்ட பள்ளம்:
வேளாண்பொறியியல் துறையினரால் மண் அரிப்பினை தடுப்பதற்கு அமைக்கப்படும் பள்ளங்களில் மழைநீர் சேகரிக்கப்படுவதால் , ஈரப்பதம் பல நாட்களாக காக்கப்படுகிறது.
பண்னணக் குட்டை:
இது தனிநபர்களின் விவசாய நிலங்களில் அரசின் மானிய உதவியுடன் அமைக்கப்படுகிறது. இதில் சேகரமாகும் நீர் பயிர்களுக்கும், மரக்கன்றுகளுக்கு உயிர் காக்கும் தண்ணீரை வழங்க முடியும். திறமையும் ஆர்வமுள்ள விவசாயிகள் பண்னண குட்டைகள் பயன்படுத்தி மீன் வளர்ப்பு மேற்கொண்டு அதிக வருவாய் பெறலாம்.
அவரவர் நிலங்களில் இயற்கையாகவே தாழ்வான பகுதியை தேர்ந்தெடுத்து பண்னண குட்டைகளை அமைக்கலாம்.
தடுப்பணைகள்:
ஓடைகளின் குறுக்கே கட்டப்படும் கட்டுமானமே தடுப்பனைணகள் ஆகும். இதனுடைய நோக்கம் ஓடிவரும் நீரின் வேகத்தை கட்டுப்படுத்தி மண்அரிமானத்தை ( SOIL EROSION) தடுக்கிறது. இங்கு நீர் நிறுத்தி வைப்பதால், நிலத்தடி நீர்வளம் பெருக்கப்படுகிறது. பொதுவாக பெய்கின்ற மழைநீர் 20 முதல் 30% ஓட்டமாக சென்று வீணாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலே குறிப்பிட்ட மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை குறைந்த செலவில் செய்து குறைந்தப்பட்சமாக 10% மழைநீரை சேகரித்தால் கூட நிலத்தடி நீர் மட்டம் கணிசமாக உயருவதுடன் மண்அரிப்பும் தடுக்கப்படுகிறது. நிலத்தினுள் நீர் பிடிப்புத்திறனும் மண்ணிக்கு எற்படுவதால் மானாவாரி சாகுபடியில் கூடுதலான மகசூல் எற்பட வாய்ப்புள்ளது.
எனவே விவசாயிகள் அரிதாக பெய்கின்ற மழைநீரை சேமிக்க ஆர்வமாக இருக்க வேண்டும் என வேளாண் ஆலோசகர் அக்ரி சு.சந்திர சேகரன் தெரிவித்துள்ளார். மேற்குறிப்பிட்ட தகவல் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள்/ விளக்கங்கள் தேவைப்படுமாயின் அணுகவும்.
அக்ரி சு.சந்திர சேகரன்-9443570289
இதையும் காண்க:
Share your comments