1. விவசாய தகவல்கள்

வெட்டிவேர் விவசாயத்தில் அதிக இலாபம் பெற சிறந்த வழிகள்!

KJ Staff
KJ Staff
More profit
Credit : Dheiveegam

நம் முன்னோர்கள் வெட்டிவேர் ஊறப்போட்ட சில்லென்ற பானைத் தண்ணீர், கோடையை விரட்டி அடிக்க வெட்டிவேர் தட்டி என்று அதன் மகிமையை முழுவதுமாக உணர்ந்திருந்தார்கள். வெட்டிவேர் ஊறிய தண்ணீரைக் குடித்தால் சர்க்கரை நோய் (Diabetes) கட்டுப்படும் என்றும் கூறுகிறார்கள். வெட்டிவேர் கொண்டு பாய், காலணி, தலைக்குத் தொப்பி என்று வெளிநாட்டவர் பலரும் அதன் பயனை அடைகிறார்கள். இத்தகைய மகத்துவம் வாய்ந்த வெட்டிவேரை எப்படி பயிர் செய்து இலாபம் பார்ப்பது என்று பார்ப்போம். வெட்டிவேர் விவசாயத்திற்கு எந்தவித மண்ணாக (soil) இருந்தாலும் பாதகமில்லை. ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் இரண்டு டன் வேர் நிச்சயம். மணல் பாங்கான நிலமாக இருந்தால் வேர் நன்கு இறங்கி விவசாயிகளுக்கு நல்ல மகசூலைத் (Yield) தரும். இரண்டு டன்னுக்கு மேலும் கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.

12 மாதத்தில் அறுவடை

மூலிகை எண்ணெய் (Herb oil) தயாரிப்பவர்களும், வாசனை திரவியங்கள் தயாரிப்பவர்களும் உடனடியாக வாங்கிக் கொள்ள தயாராக உள்ளார்கள். செடியை வேர் அறுபடாமல் பிடுங்கி எடுத்து, மேலே உள்ள பச்சை செடியை நீக்கிவிட்டு, வேரை மட்டும் மண் போக அலசி, உலர்த்தி கொடுப்பது அவசியம். பன்னிரெண்டு மாதங்களில் இருந்து பதினான்கு மாதங்களுக்குள் அறுவடை (Harvest) செய்து கொள்ளலாம். ஒரு ஏக்கருக்கு பன்னிரண்டாயிரம் முதல் பதினைந்தாயிரம் வரை நாற்றுகள் தேவைப்படும். ஒரு நாற்று (seedling) 60 பைசாவிற்கு வாங்கி பயிரிட வேண்டியதுதான்.

முதல்முறை மட்டும் தான் இந்த செலவு. அடுத்த முறை நம் நிலத்தில் இருந்தே நாற்றுகள் எடுத்துக்கொள்ளலாம். மிகுதியாக உள்ளதை தேவையானவர்களுக்கு விற்றுவிடலாம். ரசாயன உரம் தேவையில்லை. பூச்சி மருந்து தேவையில்லை. வெட்டிவேர் செடியே பூச்சிகொல்லியாக (Pesticide) செயல்படுகிறது.

பெரிய காய்கறித்தோட்டம் (Vegetable garden) வைத்திருப்பவர்கள் ஊடுபயிராகவோ அல்லது வரப்புகளிலோ நெருக்கமாக நட்டுவிட்டால் அதுவே பூச்சி விரட்டியாகவும் செயல்படும். வேரை விற்று வரும்படியும் பார்க்கலாம்.

நாங்கள் எங்கள் நிலத்தில் போன வருடம் ஒரு ஏக்கரில் சோதனை முறையில் வெட்டிவேர் பயிரிட்டு பார்த்தோம். எங்கள் நிலம் காரத்தன்மை அதிகம் கொண்ட களிமண் நிலம். களிமண்ணின் கெட்டித் தன்மையைப் போக்குவதுதான் நாங்கள் பயிரிட்டதன் முக்கிய நோக்கம். எங்கள் நோக்கம் சரிவர நிறைவேறிவிட்டது.

அறுவடை

மண்புழு (Earthworm) செய்யும் வேலையை ஒவ்வொரு வெட்டிவேர் செடியும் செய்துவிட்டது. இந்த வருடம் பயிரிடும்போது கண்டிப்பாக போன வருடத்தைவிட அதிக மகசூல் கிடைக்கும். காரணம் நிலம் கடினத்தன்மை போய் காற்றோட்டம் உள்ளதாகிவிட்டது. அதிக தண்ணீரும் இதற்கு தேவையில்லை. வாரம் ஒரு முறை தண்ணீர் விட்டாலே போதுமானது. கரும்பு நடுவதுபோல் நடவேண்டும். பார்ப்பதற்கு உலர்ந்தாற்போல் இருந்தாலும் நாற்று நட்ட பதினைந்திலிருந்து இருபத்தி ஐந்து நாட்களுக்குள் பச்சை பிடித்துவிடும். மூன்று மாதங்கள் கழித்து கால் மாற்றிவிட வேண்டும். ஆறு மாதங்கள் கழித்து களை எடுக்க வேண்டும். அவ்வளவுதான். அதற்குப் பிறகு பதிமூன்றாம் மாதத்தில் அறுவடை (Harvest) தான்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

காய்கறி தோட்டங்கள் அமைப்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு!

புறஊதாக் கதிர்களில் இருந்து தோலைப் பாதுகாக்க திராட்சைப்பழம்: ஆய்வில் தகவல்

English Summary: The Best Ways to Make More Profit in Vettiware Agriculture! Published on: 07 February 2021, 09:06 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.