சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டாரம், மரிச்சிலம்பு மற்றும் ஆயக்குடி கிராமத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் உலக மக்காச்சோளம் மற்றும் கோதுமை மேம்பாட்டு மையம் இணைந்து மக்காச்சோளத்தில் ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு ஆய்வு, விவசாயிகள் மற்றும் விரிவாக்க அலுவலர்கள் ஆய்வுத்திடல் மதிப்பீடு செய்தல் நிகழ்வு நடைப்பெற்றது.
இக்கூட்டத்தில் வரவேற்புரை அளித்த பூச்சியியல் துறை இணை பேராசிரியர், முனைவர் து.சீனிவாசன் அவர்கள் உழவர்களை வரவேற்று மக்காச்சோளத்தில் தற்போது பெருகிவரும் மக்காச்சோள படைப்புழு தாக்குதலை பற்றி எடுத்துரைத்தார்.
மக்காச்சோளத்தில் 2018 ஆம் ஆண்டு முதல் மக்காச்சோள படைப்புழு இந்தியாவில் ஊடுருவி அதிக தாக்குதலை ஏற்படுத்தி வருவதாகவும் அதற்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பலவிதமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளை உழவர்களுக்கு வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அவர் மேலும் பேசுகையில், மெக்சிகோவை சேர்ந்த உலக மக்காச்சோளம் மற்றும் கோதுமை மேம்பாட்டு மையத்தின் நிதி உதவி பெற்று பயிர்களில் ஆய்வுத்திடல் அமைத்து உழவர்களுக்கு இடுபொருட்களை வழங்கி மக்காச்சோளப் படைப்புழுக்கள் மற்றும் மக்காச்சோளத்தில் வரும் நோய்களுக்கு எதிரான ஆய்வுகளை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் முனைந்து நடைமுறைப்படுத்தியுள்ளதாகக் கூறினார்.
படைப்புழு கட்டுபடுத்த பயிர் பாதுகாப்பு முறை:
தொழில்நுட்ப உரையாற்றிய பூச்சியியல் துறை இணை பேராசிரியர் முனைவர் பா.ச.சண்முகம், மக்காச்சோள படைப்புழுக்களை கட்டுப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை பற்றி விளக்கி கூறினார். அவற்றின் விவரம் பின்வருமாறு-
வேப்பம் புண்ணாக்கு ஏக்கருக்கு 100 கிலோ இறுதி உழவின் போது இடுதல் வேண்டும். சையான்ட்ரினிலிபுரோல் 19.8 சதவீதம், தயோமீத்தாக்சம் 19.8 %, ஒரு கிலோ விதைக்கு 4 மிலி என்றளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும். இறவையில் தட்டை பயிர், எள், துவரை அல்லது சூரியகாந்தி மற்றும் மானாவாரியில் தீவன சோளத்தை வரப்பு பயிராக மூன்று வரிசை விதைக்க வேண்டும்.
படைப்புழுக்களின் தாய் அந்திப்பூச்சி நடமாட்டத்தை கண்காணிக்க ஏக்கருக்கு 5 இனக்கவர்ச்சி பொறிகளை வைக்க வேண்டும். படைப்புழுவின் பாதிப்பை கட்டுப்படுத்த மக்காச்சோளத்தின் பருவத்திற்கேற்ப பின்வரும் பூச்சிக் கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை உபயோகப்படுத்த வேண்டும்.
- இளம் தளிர் பருவத்தில் (பயிர் முளைத்த 15-20 நாள்) குளோரான்டரினிலிபுரோல் 18.5 SC 0.4 மிலி/லி (அ) புளுபென்டமைடு 480 SC(அ) 0.4 மிலி/லி (அ) அசாடிராக்டின் 1500 பிபிஎம் 5 மிலி/லி தெளிக்க வேண்டும்.
- முதிர் குருத்து நிலையில் (பயிர் முளைத்த 35-40 நாள்) மெட்டாரைசியம் அனைசோபிலியே (TNAU-Ma-GDU) ஏக்கருக்கு ஒரு கிலோ (அ) எமாமெக்டின் பென்சோயேட் 5 SG 0.4 கிராம்/லி (அ) நொவலூரான் 10%EC 15 மிலி/லி (அ) ஸ்பைனிடிரோம் 11.70 SC 0.5 மிலி/லி தெளிக்க வேண்டும்.
- பூ மற்றும் கதிர் உருவாகும் பருவத்தில் தேவைப்பட்டால் முதிர் குருத்து நிலையில் தெளிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பூச்சி கொல்லியினை (ஏற்கனவே பயன்படுத்தாத ஒன்று) தெளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
தலைமையுரை ஆற்றிய மக்காச்சோள ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் செல்வக்குமார், மக்காச்சோள சாகுபடி முறைகளை பற்றியும் மற்றும் களைக்கொள்ளிகளின் உபயோகம் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். மக்காச்சோள ஆராய்ச்சி நிலைய பயிர் இனபெருக்க உதவி பேராசிரியர் கே.ஆர்.விசதிய ஷீலா, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மக்காச்சோள கலப்பின ரகங்களின் உபயோகம் பற்றி விளக்கினார்.
Read more:
இயற்கை விவசாயத்தில் 3 வருஷம் கூட ஆகலாம்- ஆனால்? ஆட்சியரின் வேண்டுக்கோள்
Share your comments