விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு: வரும் 11-ஆம் தேதி வழங்குகிறார் மு.க.ஸ்டாலின், விவசாயிகளுக்கு மாதம் ரூ. 3000 பெறும் திட்டம்: விண்ணப்பங்கள் அழைப்பு, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி மாநாட்டினை தொடங்கி வைத்தார் மு.க. ஸ்டாலின், பொங்கல் பரிசுத்தொகுப்புக்கு பதிலாக ரூ. 1000 ரொக்கமாக வழங்கப்பட உள்ளதாகத் தகவல், TANGEDCO:14 புதிய துணை மின் நிலையங்களைத் திறந்து வைத்தார் மு.க. ஸ்டாலின், தமிழக ரேஷன் கடைகளில் காலிப்பணியிடங்கள்: வரும் பொங்கலுக்குள் நிரப்பப்பட உள்ளதாகத் தகவல் முதலான வேளாண் தகவல்களை இப்பதிவு வழங்குகிறது.
TNEB: விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு: வரும் 11-ஆம் தேதி வழங்குகிறார் மு.க.ஸ்டாலின்!
இலவச மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்த 50 ஆயிரம் விவசாயிகளுக்கு வரும் 11-ம் தேதி மின் இணைப்பிற்கான அரசாணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பேசிய தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, 50,000 விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்திற்கு அரசாணையை வருகின்ற 11-ம் தேதி, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார். முன்பதிவு செய்ததன் அடிப்படையில், இந்த 50 ஆயிரம் பேருக்குமே இலவச மின் இணைப்புகளுக்கு உண்டான ஆணைகள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
PM Scheme: விவசாயிகளுக்கு மாதம் ரூ. 3000 பெறும் திட்டம்: விண்ணப்பங்கள் அழைப்பு!
நிலம் குறைவாக உள்ள விவசாயிகள் மற்றும் ஏழை குடும்பங்களுக்கு மத்திய அரசு பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. விவசாயம் செய்யும் முதியோர்களுக்குப் பிரதமர் கிசான் மனதம் யோஜனா திட்டத்தின்கீழ் மாதம் ரூ. 3000 வழங்கும் திட்டத்தினை மோடி அரசு செயல்படுத்தி வருகிறது. 18 முதல் 40 வயது வரை உள்ள விவசாயிகளும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். 2 ஹெக்டேருக்கு குறைவான விவசாய நிலம் வைத்திருப்பவர்களும், PM Manadham Yojana திட்டத்தின் பயனாளிகளாகலாம். இத்திட்டத்தில் இணையும் விவசாயிகள் தாங்கள் இணையும் வயதினைப் பொறுத்து ரூ. 55 அல்லது ரூ. 110 என மாதாமாதம் கட்ட வேண்டும் இத்தொகை அவர்களது 60 வயதுக்குப்பின் மாதம் ரூ. 3000 - ஆக வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் விவசாயிகள் அருகில் உள்ள பொதுச்சேவை மையங்களை அணுகி விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி மாநாட்டினைத் தொடங்கி வைத்தார் மு.க. ஸ்டாலின்!
தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற “நாளையை நோக்கி இன்றே – தலை நிமிர்ந்த தமிழ்நாடு “ எனும் நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சி மாநாட்டில் கலந்துகொண்டார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.TANSAM மற்றும் TAMCOE ஆகிய நிறுவனங்களின் சிறப்பு மையங்களைத் திறந்து வைத்து, தமிழ்நாடு விண்வெளி மற்றும் பாதுகாப்புக் கொள்கை 2022-யை வெளியிட்டுள்ளார். பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே முன்னணி மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் விளங்கி வருகிறது என்றும், முதலீடுகளைப் பெருமளவில் ஈர்த்து, இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கிடவும், மாநில பொருளாதாரத்தை வலுவடையச் செய்திடவும், 2030-31 ஆம் நிதியாண்டிற்குள் தமிழ்நாடு 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சி அடைந்திடவும் பல்வேறு வளர்ச்சி நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது என முதல்வர் தெரிவித்துள்ளார்.
TANGEDCO: 14 புதிய துணை மின் நிலையங்களைத் திறந்து வைத்தார் மு.க. ஸ்டாலின்!
ரூ 594.97 கோடி மதிப்பில், 14 துணை மின் நிலையங்கள், 57 துணை மின் நிலையங்களைத் துவக்கி வைத்தார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். மேலும், 723 எம்.வி.ஏ. அளவிற்கு தரம் உயர்தப்பட்ட மின் மாற்றிகளின் செயல்பாடுகளைத் தொடங்கி வைத்ததோடு, 8 புதிய 110KV துணை மின் நிலையங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இத்தகைய தொடக்கத்தால் தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை வெகுவாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் எனும் திட்டத்தினையும் வரும் 11-ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விவசாயிகளுக்கு அங்ககச் சான்றிதழ்களை வழங்கினார் வேளாண் அமைச்சர்!
சென்னை கிண்டியில், விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று இயக்கத்தின் சார்பில் அனைத்து மாவட்ட தலைமை அதிகாரிகளுடன் துறையின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்துகொண்டார். அப்போது அங்கக விவசாயம் செய்யும் விவசாய பெருமக்களுக்குத் தமிழக அரசின் அங்ககச் சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட தலைவர், செயலர், இயக்குனர், துணை இயக்குநர் முதலான அதிகாரிகள் பங்குபெற்றனர்.
மேலும் படிக்க
சிறப்பாகக் கொண்டாடி முடிந்த முருங்கை கண்காட்சி!
இன்றைய வேளாண் தகவல் முதல் வானிலை வரை!
Share your comments