விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர மத்திய அரசு முயன்று வரும் நிலையில், உச்சநீதிமன்றத்தால், அமைக்கப்பட்ட குழு முன்பு ஆஜராக மாட்டோம் என விவசாயிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
பேச்சுவார்த்தையில் பங்கேற்போம் (Participate Talks)
அதே நேரத்தில் 15-ந் தேதி மத்திய அரசு நடத்தும் பேச்சுவார்த்தையில் பங்கேற்போம் எனவும் விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளன.
7 கட்டப் பேச்சு (7 Phase Talks)
சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல வட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த 45 நாட்களுக்கும் மேலாக, டெல்லியில் உள்ள எல்லைகளில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து விவசாயிகளை சமாதானப்படுத்த அரசு மேற்கொண்ட 7 கட்டப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
உச்சநீதிமன்றம் தடை (Supreme Court Ban)
இந்நிலையில் இதுதொடர்பான வழக்கை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம் புதிய வேளாண் திருத்தச் சட்டங்களை அமல்படுத்த அதிரடித் தடை விதித்தது. அதே நேரத்தில் இந்த சட்டங்களை ஆராய்ந்து அறிக்கை அளிப்பதற்கு ஒரு குழுவையும் உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.
இது குறித்து டெல்லியில் சிங்கு எல்லையில் விவசாய அமைப்புகளின் தலைவர்கள், பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர். அப்போது அவர்கள், உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழு உறுப்பினர்கள், அரசுக்கு ஆதரவானவர்கள் என்பதால், அவர்கள் முன்னிலையில் ஆஜராக மாட்டோம் என அறிவித்தனர்.
பல்பீர்சிங் ராஜேவால்
உச்சநீதிமன்றம் நியமித்த குழுவின் உறுப்பினர்கள், வேளாண் சட்டங்கள் எவ்வாறு விவசாயிகளுக்கு ஆதரவானவை என எழுதி வருவதால், அவர்கள் நம்பத்தகுந்தவர்கள் அல்ல. நாங்கள் எங்கள் போராட்டத்தை தொடர்வோம். நாங்கள் கொள்கை அடிப்படையில் குழுவுக்கு எதிரானவர்கள். போராட்டத்தில் இருந்து கவனத்தை திருப்புவதற்கு அரசு மேற்கொள்ளும் வழி இது.
தர்ஷண் சிங்
நாங்கள் எந்த குழுவின் முன்பும் ஆஜராக மாட்டோம். நாடாளுமன்றம் விவாதித்து பிரச்சினையை தீர்க்க வேண்டும். நாங்கள் எந்த வெளிப்புற குழுவையும் விரும்பவில்லை.
அபிமன்யு கோஹர் (தவைவர், சம்யுக்த் கிசான் மோர்ச்சா)
வேளாண் சட்டங்களை அமல்படுத்த உச்சநீதிமன்றம் தடை விதித்து இருப்பதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் இந்த சட்டங்கள் முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே எங்கள் முக்கிய கோரிக்கை ஆகும்.
லக்பீர் சிங் (துணைத்தலைவர், அனைத்திந்திய கிசான் சபா-பஞ்சாப்)
குழு அமைக்கும் யோசனையில் எங்களுக்கு நம்பிக்கை கிடையாது. ஒரு குழுவை அமைக்கலாம் என மத்திய அரசு கூறியபோதே, ஆரம்பத்தில் இருந்தே இதை நாங்கள் கூறி வருகிறோம். ஆனால் இந்த முறை கூறி இருப்பது உச்சநீதிமன்றம். இந்த குழுவின் செயல்பாட்டை பார்ப்போம்.
இவ்வாறு கருத்து தெரிவித்த விவசாய அமைப்புகளின் தலைவர்கள், மத்திய அரசு 15-ந் தேதி நடத்த உள்ள பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
விவசாயிகளின் இந்த அறிவிப்பு போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் உச்சநீதிமன்றத்தின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் அமைந்துள்ளதாகவேக் கருதப்படுகிறது.
மேலும் படிக்க...
ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க ரூ.60,000பின்னேற்பு மானியம்!
கைதிகள் சாகுபடி செய்த கரும்புகள்- விற்பனைக்குத் தயார்!!
நெருங்கி வருகிறது தைப் பொங்கல் - தொடர் மழையால் மண்பானைகள் தயாரிப்பு பாதிப்பு!
Share your comments