தமிழகத்தில் விவசாயம், கால்நடை வளர்ப்பு போன்று மீன் வளர்ப்பிலும் பல்வேறு வாய்ப்புகள் குவிந்துள்ளன. உள்நாடுகள் மற்றும் வெளிநாடுகளுக்கும் மீன்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் நல்ல லாபத்தை மீன் வளர்ப்பில் காண இயலும்.
கடல் கடந்து மீன் பிடிப்பு என்பதை தாண்டி, இருக்கிற இடத்திலேயே முறையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து மீன் வளர்ப்பில் ஈடுபட முடியும். அதற்கு அரசின் சார்பிலும் பல்வேறு மானிய நிதி உதவித்திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. மீன்வளர்ப்பில் ஈடுபட ஆர்வமுள்ள நபர்களுக்கு அட்டகாசமான அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம்:
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பின்வரும் திட்டங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர் செய்திக்குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அவற்றின் முழு விவரம் பின்வருமாறு-
திருவள்ளூர் மாவட்டத்தில் மீன்வளர்ப்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், உள்நாட்டு மற்றும் கடல்வளம் மீன்வள உற்பத்தியை பெருக்கும் நோக்கத்தோடும் தொழில்முனைவோர்களை ஊக்குவித்து அவர்களை மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பில் அதிக முதலீடு செய்திடும் நோக்கில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பின்வரும் திட்டங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயோ பிளாக் தொட்டிகள்:
புதிய நன்னீர் மீன்வளர்ப்பிற்கான சிறிய அளவிலான பயோ பிளாக் தொட்டிகள் அமைத்திட ஆகும் மொத்த செலவினத்தொகை ரூ.7.50 இலட்சத்தில் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் பயனாளிக்கு 60 விழுக்காடு மானியம் என ரூ.4.50 இலட்சம் மானியமாக வழங்கப்படும்.
உவர் நீரில் கொடுவா வளர்ப்பு:
ஒரு ஹெக்டேர் பரப்பளவில் உவர்நீரில் கொடுவா மீன்வளர்ப்பிற்காக புதிய மீன்வளர்ப்பு குளங்கள் அமைத்திட ஆகும் மொத்த தொகை ரூ.14.00 இலட்சத்தில் பொது பயனாளிக்கு 40 விழுக்காடு மானியம் என ரூ.5.60 இலட்சம் மற்றும் ஆதிதிராவிடர் (SC) பயனாளிக்கு 60 விழுக்காடு மானியம் என ரூ.8.40 இலட்சம் மானியமாக வழங்கப்படும்.
இறால் வளர்ப்பு:
0.1 ஹெக்டேர் பரப்பளவில் இறால் வளர்ப்பிற்கான உயிர் கூழ்மதிரள் (பயோபிளாக்) குளங்கள் (இடுபொருட்கள் உட்பட) அமைத்திட ஆகும் மொத்த செலவின தொகை ரூ.18.00 இலட்சத்தில் பொது பயனாளிக்கு 40 விழுக்காடு மானியம் என ரூ.7.20 இலட்சம் மற்றும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் / மகளிர் பயனாளிக்கு 60 விழுக்காடு மானியம் என ரூ.10.80 இலட்சம் மானியமாக வழங்கப்படும்.
கடல்மீன் வளர்ப்பு:
கூண்டுகளில் கடல் மீன் வளர்த்திட ஆகும் மொத்த செலவின தொகை ரூ.5.00 இலட்சத்தில் பொது பயனாளிக்கு 40 விழுக்காடு மானியம் என ரூ.2.00 இலட்சம் மற்றும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் பயனாளிக்கு 60 விழுக்காடு மானியம் என ரூ.3.00 இலட்சம் மானியமாக வழங்கப்படும்.
Read also: விவசாயத்துடன் அலங்கார மீன் வளர்ப்பில் அசத்தும் தூத்துக்குடி சரவணன்!
மீன் பிடி உபகரணங்கள்:
பாரம்பரிய மீனவர்கள் தங்களின் மர கட்டுமரத்திற்கு மாற்றாக 10 மீட்டர் நீளத்திற்குட்பட்ட கண்ணாடி நாரிழைப்படகு, இயந்திரம், வலை மற்றும் ஜஸ் பெட்டிகள் புதிதாக வழங்கிட மொத்த செலவின தொகை ரூ.5.00 இலட்சத்தில் பொது பயனாளிக்கு 40 விழுக்காடு மானியம் என ரூ.2.00 இலட்சம் மற்றும் மகளிர் பயனாளிக்கு 60 விழுக்காடு மானியம் என ரூ.3.00 இலட்சம் மானியமாக வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பயன் பெற விரும்புவோர் உதவி இயக்குநர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை திருவள்ளூர் (இருப்பு) பொன்னேரி அலுவலகம், எண்.05, சங்கர் நகர், பாலாஜி தெரு, வேண்பாக்கம், பொன்னேரி மற்றும் தொலைபேசி எண்.044-27972457 அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர் இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
Read also:
நட்ட மாத்திரத்தில் லாபம்- டர்க்கி பிரவுன் ரக அத்தி சாகுபடி முறைகள்!
வருகை நாட்கள் அடிப்படையில் போக்குவரத்து அரசு ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை அறிவிப்பு!
Share your comments