நமது வீட்டு கொல்லைப்புறத்தில் காய்கறி தோட்டம், கோழி வளர்ப்பு (புறக்கடை கோழிவளர்ப்பு) போன்றவற்றில் ஈடுப்படுவதன் மூலம் கூடுதல் வருமானம் பார்க்கும் சூழ்நிலையில், கொல்லைப்புறத்தில் அலங்கார வண்ணமீன் வளர்ப்பதன் மூலமும் நல்ல லாபம் பார்க்கலாம் என வேளாண் ஆலோசகர் அக்ரி சந்திரசேகரன் நம்மிடையே தெரிவித்துள்ளார்.
மேலும் இதற்கு ஒன்றிய அரசின் சார்பில் பின்னேற்பு மானியமும் வழங்கப்படுவதாக குறிப்பிட்ட வேளாண் ஆலோசகர், அலங்கார மீன் வளர்ப்பு குறித்தும், மானியத்திட்டம் குறித்தும் பல்வேறு தகவல்களை க்ரிஷி ஜாக்ரனுடன் பகிர்ந்துள்ளார். அவற்றின் முழு விவரம் பின்வருமாறு-
அலங்கார மீன் வளர்ப்பு- லாபகரமான தொழிலா?
இன்றைய நகர்ப்புற பகுதியில் வீடுகளில் அலங்கார மீன் வகைகளை கண்ணாடி தொட்டியில் வளர்ப்பது ஒரு பேஷனாக மாறியுள்ளது. இது பொழுது போக்காக மட்டுமல்ல வியாபார ரீதியில் லாபம் பார்க்கக் கூடிய தொழிலாகவும் உள்ளது. அலங்கார மீன்கள் வளர்ப்பு 1805 ஆம் ஆண்டுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. இன்றைய சூழ்நிலையில் வீடுகளில் நாய்க்குட்டி வளர்ப்பிற்கு அடுத்தப்படியாக அலங்கார மீன்கள் வளர்ப்பில் அதிமானவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய படித்த இளைஞர்கள்,மகளிர்களுக்கு இது ஒரு சுய வேலை வாய்ப்பாகவும் அதிக வருமானம் தரக்கூடிய தொழிலாகவும் கருதப்படுகிறது.
இதற்காக பிரதம மந்திரியின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மத்திய மாநில அரசுகளின் மானியம் வழங்கப்படுகிறது. அவற்றின் விவரம் பின்வருமாறு-
அலங்கார மீன் வளர்க்க தேவைப்படும் அம்சங்கள் என்ன?
வீடுகளின் கொல்லைப்புறத்தில் காலியாக உள்ள இடத்துல 300 சதுர அடி இடத்தை தேர்வு செய்து சூரிய ஒளி, மழை பாதிப்பு இல்லாமல் இருக்க "ஷேடு நெட் " ( SHADE NET) அமைக்க வேண்டும். அந்த இடத்தில் தலா 3000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 6 சிமெண்ட் தொட்டிகளை அமைக்க வேண்டும்.
என்ன வகையான மீன்களை வளர்க்க முடியும்?
வளர்ப்புக்கு தேவையான கப்பி, மோலி , தங்கமீன் , மற்றும் கொய் வகையான மீன்களை கருவுற்ற நிலையில் வாங்கி 150 லிட்டர் கொள்ளளவு கொண்ட கண்ணாடி தொட்டியில் வளர்த்து அவற்றின் மீன் குஞ்சுகளை தனித்தனியாக பிரித்து சிமெண்ட் தொட்டிகளில் (3000 லிட்டர் சிமெண்ட் தொட்டி) இட்டு வளர்த்து (30 முதல் 45 நாட்கள் வரை) பின் இனத்திற்கு தகுந்ததாற் போல தலா ஒரு மீன் ரூ.1.50 முதல் 5 ரூபாய் வரை விற்பனை செய்யலாம்.
Read more: விவசாயத்துடன் அலங்கார மீன் வளர்ப்பில் அசத்தும் தூத்துக்குடி சரவணன்!
இதற்கு மானியம் எவ்வளவு தெரியுமா?
மேற்குறிப்பிட்ட முறையினை செயல்படுத்த அதிகப்பட்சமாக 3 லட்சம் வரை செலவாகும். இதற்காக மானியம் ரூ.1.8 லட்சம் கீழ்க்கண்ட இனங்கள் வாரியாக வழங்கப்படுகிறது.
சிமெண்ட், கண்ணாடி தொட்டி, பைப், மின்சார விளக்கு பராமரிக்க, மீன் தீவனம், கருவுற்ற மீன்கள் வாங்கிட, வேலை ஆட்கள் கூலி, ஆக்சிஜன் சிலிண்டர் போன்ற இதர உபகரணங்கள் வாங்கிட இந்த மானியம் வழங்கப்படுகிறது.
இந்த மானியத்தொகை எல்லாவிதமான பணிகள் முழுமையாக முடிவடைந்ததும் 15-வது நாளில் மீன்வளர்க்கும் பயனாளிகளின் வங்கி கணக்கில் பின்னேற்பு மானியமாக வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் சேர விரும்பும் விவசாயிகள் தங்களுடைய வட்டார மீன்வள ஆய்வாளர் அலுவலகத்தையோ, மாவட்ட மீன் வள உதவி இயக்குநர் அவர்களை தொடர்பு கொள்ளவும்.
விவசாயத்தை மட்டும் செய்யாமல் விவசாயத்துடன் தொடர்பு கொண்ட தேனீ வளர்ப்பு, மீன் வளர்ப்பு, பட்டுப்பூச்சி வளர்ப்பு, மியவாக்கி மரம் வளர்ப்பு போன்றவற்றில் ஈடுபடுவதன் மூலம் தினசரி, வார, மாத, ஆண்டு வருமானம் பெறலாம். இதன் மூலம் நாம் மேற்கொள்ளும் விவசாய பணியை மேலும் லாபகரமான தொழிலாக மாற்றலாம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என வேளாண் ஆலோசகர் அக்ரி சு.சந்திர சேகரன் தெரிவித்துள்ளார்.
மேற்குறிப்பிட்ட திட்டம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் அல்லது இக்கட்டுரை தொடர்பாக ஏதேனும் முரண்கள் இருப்பின் வேளாண் ஆலோசகர் அக்ரி சு.சந்திர சேகரன் அவர்களைத் தொடர்புக் கொள்ளலாம். தொடர்பு எண்: 9443670289
Read more:
துவண்டு போகாத மனம்- தேனீ வளர்ப்பில் லட்சங்களில் வருமானம் ஈட்டும் கொளப்பலூர் மஞ்சுளா
Share your comments