நீரின்றி எந்த உயிரும் வாழ இயலாது என்பது இயற்கை விதித்த விதி. அந்த வகையில் பயிரின் உயிரே நீர்தான். அதனால்தான், அவை முளைத்த சில நாட்களில் உயிர்த்தண்ணீர் விடுவது அவசியமாகிறது.
இதனைக் கருத்தில்கொண்டு, விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன வசதிகளை மானியத்துடன் வழங்கும் வகையில், பிரதான் மந்திரி கிரிஷி சின்சயா யோஜனா (Pradhan Mantri krishi Sinchayee Yojana) திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
திட்டத்தின் சிறப்பு அம்சம்
-
சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் சொட்டு நீர்ப்பாசனம், தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை சார்பில் அமைத்துத் தரப்படுகிறது.
-
பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் தெளிப்பு நீர்ப்பாசனம் அமைத்துத் தரப்படும்.
விவசாயக் கருவிகள்
இதுமட்டுமன்றி விவசாயிகளின் நலன் கருதி, அந்தந்த குறு வட்டங்களில் குறுகிய ஆழக்கிணறு அல்லது குழாய் கிணறு அமைப்பதற்கு 50 சதவீதம் மானியம் அல்லது ரூ.25,000 வழங்கப்படுகிறது.
இதே போல், டீசல் பம்புசெட் அல்லது மின்மோட்டார் பம்புசெட் அமைக்க 50 சதவீதம் மானியம் அல்லது ரூ.15,000 வழங்கப்படுகிறது
மேலும், வயலுக்கு அருகில் பாசன நீரைக் கொண்டு செல்ல நீர்ப்பாசன குழாய் அமைப்பதற்கு 50 சதவிகிதம் மானியம் அல்லது ஹெக்டேருக்கு ரூ.10,000 வீதம் வழங்கப்படும். இதே போன்று, பாதுகாப்பு வேலியுடன் தரைநிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைப்பதற்கு 50 சதவிகிதம் மானியம் அல்லது ஒரு கனமீட்டருக்கு ரூ.350 வீதம் அதிகபட்சம் ரூ.40,000 கூடுதல் மானியமாக வழங்கப்படுகிறது.
மேற்கண்ட மானியத்தை அனைத்து விவசாயிகளுக்கும், தோட்டக்கலைத்துறை சார்பில் பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தேவைப்படும் ஆவணங்கள்
-
ஆதார் அட்டை நகல்
-
குடும்ப அட்டை நகல்
-
சிறு, குறு விவசாயி சான்றிதழ்
-
சிட்டா
-
அடங்கல்
-
நில வரைபடம்
-
புகைப்படம் 2
ரூ.5,816 லட்சம் ஒதுக்கீடு
இதனிடையே விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் தங்களது நிலங்களில் நுண்ணீர்ப் பாசன கட்டமைப்புகளையும், துணை நிலை நீர் மேலாண்மைத் திட்ட மானியங்களையும் பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது, நம் மாவட்டத்தில் பிரதமரின் நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தின் கீழ் விவசாய நிலங்களில் சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம், மழைத்தூவுவான் போன்ற நீர் சிக்கன அமைப்புகளை அமைத்திட ரூ.5,816 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், துணைநிலை நீர் மேலாண்மை திட்டங்களுக்காக விழுப்புரம் மாவட்டத்துக்கு ரூ.1,324 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
எனவே தேவைப்படும் ஆவணங்களை விவசாயிகள் வேளாண்துறை அலுவலர்களிடம் சமர்ப்பித்து, இந்தத் திட்டத்துக்கான மானியத்தைப் பெற்று பயன்பெற வேண்டும் என்றார்.
மேலும் படிக்க...
இளமையைத் தக்க வைக்க உதவும் இஞ்சி-பூண்டு விழுது!- மணக்கும் அளப்பரியப் பயன்கள்!
பிரதமரின் விவசாயிகள் ஓய்வுதியத் திட்டதில் சேர என்ன செய்ய வேண்டும்- வழிமுறைகள் உங்களுக்காக!
Share your comments