இணையவழி மூலமாக நிலஅளவைக்கு (F-Line measurement) விண்ணப்பிக்கும் புதிய வசதியை நேற்றைய தினம் (20/11/2023) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையிலுள்ள தலைமைச் செயலகத்தில் நடைப்பெற்ற நிகழ்வில் தொடங்கி வைத்தார்.
நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும் என்று இருந்த நிலையை மாற்றி, பொதுமக்களின் வசதிக்காக 'எந்நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும்' நில அளவை செய்ய https://tamiinilam.tn.gov.in/citizen என்ற இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
இப்புதிய சேவையின் மூலம் பொதுமக்கள் நில அளவை செய்ய விண்ணப்பிக்கும் பொருட்டு வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பொதுமக்கள் நில அளவை கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல், இணையவழியிலேயே செலுத்தி விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் உங்களது பெயர், மொபைல் எண் மூலம் Log in செய்யுங்கள். அதன் பின், புல எல்லை அளந்து காண்பிக்க (Field Line measurement) என்பதை க்ளிக் செய்து தேவையான விவரங்களை அளிக்கவும். இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.60, இதனுடன் அளக்க வேண்டிய எல்லையானது கிராமப்புறமாக இருப்பின் ( பவுண்டரி ஒன்றுக்கு ரூ.200) எனவும், நகர்ப்புறமாக இருப்பின் ( பவுண்டரி ஒன்றுக்கு ரூ.400)- உம் கட்டணமாக செலுத்த வேண்டும்.
நிலஅளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு குறுஞ்செய்தி அல்லது அலைபேசி வாயிலாக தெரிவிக்கப்படும். மேலும், நிலஅளவை செய்யப்பட்ட பின்னர் மனுதாரர் மற்றும் நிலஅளவர் கையொப்பமிட்ட 'அறிக்கை/வரைபடம்' ஆகியவற்றை மனுதாரர் https://eservices.tn.gov.in/ என்ற இணையவழிச் சேவையின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட இந்த புதிய திட்டத்தின் மூலம் பொதுமக்களின் அலைச்சல் வெகுவாக குறையும் என்பதோடு, நேரமும் மிச்சமாகும். முதல்வரின் அறிவிப்புக்கு பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் நேற்றைய நிகழ்வில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்காக நிலஎடுப்பு செய்த தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட மாற்று இடங்களுக்கு நிலவரித்திட்டப் பணி மேற்கொண்டு அவர்களின் 60 ஆண்டு கால கோரிக்கைக்கு தீர்வு காணப்பட்டு 3543 பயனாளிகளுக்கு பட்டாவும் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வருவாய்த்துறை சார்பில் ரூ.14.86 கோடி செலவிலான கட்டடங்களையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியின் போது வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உட்பட அரசுத்துறை உயர் அதிகாரிகள் பலரும் கலந்துக் கொண்டனர்.
இதையும் காண்க:
இறங்கமாட்டேனு அடம்பிடிக்கும் தங்கம்- மீண்டும் விலை உயர்வு!
SBI junior associates: 8424 காலிப்பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு- முழுவிவரம்
Share your comments