தமிழ்நாட்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்கள் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, வருவாய் ஈட்டி, பொருளாதார சுயசார்பு பெற்று வருகின்றனர். அவர்களின் வியாபாரத்தை அதிகரிக்கும் பொருட்டு அமேசான், ப்ளிப்கார்டு போன்று “மதி சந்தை” என்கிற விற்பனைத் தளம் தொடங்கப்பட்டுள்ளது.
சுய உதவிக் குழுவினர் தயாரிக்கும் பொருட்கள் அனைத்துத் தரப்பினரையும் சென்றடையும் வகையிலும், அவர்களின் தயாரிப்புப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், மாநில / மாவட்ட / வட்டார அளவில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிப்புப் பொருட்களின் விற்பனைக் கண்காட்சிகள் வாயிலாக சுய உதவிக் குழுவினரின் தயாரிப்புப் பொருட்களுக்கு விற்பனை வாய்ப்புகளையும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கி வருகிறது.
அமேசான் போல் ஒரு இணையம்:
இணையம் மற்றும் சமூக ஊடகங்களின் பங்களிப்பு பெருகி வரும் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப சுய உதவிக் குழுவினரின் தயாரிப்புப் பொருட்களை இணையம் மற்றும் சமூக ஊடகங்களின் வாயிலாக விற்பனை செய்ய தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, இணைய தளம் வாயிலாக பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களை வாங்கிடும் வகையில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிப்புப் பொருட்களின் மதி சந்தை விற்பனை இணைய தளத்தினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த இணையதளத்தில், பல்வேறு வகையான அரிசி வகைகள், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட உணவு பொருட்கள், ஊறுகாய், இனிப்பு-கார வகை தயாரிப்புகள், கைவினைப்பொருட்கள், சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத மூலிகை சோப், மர வேலைப்பாடு பொருட்கள், வாழை நார் தயாரிப்பு, பனை இலை தட்டு, கைத்தறி மற்றும் ஜவுளி (பட்டுப்புடவை, தரை விரிப்பு, சின்னாளப்பட்டி பட்டு புடவை, ஜமக்காளம்) போன்றவையும் உள்ளன.
mathi sandhai இணையத்திற்குள் செல்ல க்ளிக் செய்க
மேலும், இதே நிகழ்வில் சுய உதவிக் குழுவினர், பொதுமக்கள் ஆகியோர் முற்றம் இதழிற்கான சந்தாவினை செலுத்தி, முற்றம் மாத இதழினை தங்களின் இல்லத்திற்கே நேரடியாக அஞ்சல் வாயிலாக பெற்றிடும் வகையில் உருவாக்கப் பட்டுள்ள தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு முற்றம் மாத இதழ் இணைய தளம் /கைப்பேசி செயலி ஆகியவற்றையும் அமைச்சர் உதயநிதி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வினைத் தொடர்ந்து, மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை அனைத்துத் தரப்பினரும் வாங்கிடும் வகையில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் சென்னை, நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள சுய உதவிக் குழுவினர் தயாரிக்கும் பொருட்களின் மதி அனுபவ அங்காடி கட்டிடத்தினையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். இந்த மதி அனுபவ அங்காடியில் சுய உதவிக் குழு மகளிரால் நடத்தப்படும் "மதி கஃபே" என்ற சிற்றுண்டி உணவகமும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் காண்க:
MFOI 2023: மஹிந்திரா டிராக்டர்ஸை தொடர்ந்து FMC ஸ்பான்ஸராக ஆதரவு
Share your comments