கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியான நபர்களை தேர்வு செய்யும் பணி வேகமெடுக்க தொடங்கியுள்ள நிலையில் அதற்கான விண்ணப்ப படிவத்தை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.
முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த தருவாயில், திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் முதன்மையான திட்டமாக கருதப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்குதல் வருகிற செப்டம்பர் 15-ஆம் நாளன்று தொடங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
முதற்கட்டமாக அனைத்து நியாய விலைக்கடைகள் மூலமாக சிறப்பு முகாம் அமைத்து பயனாளிகளை தேர்வு செய்யும் பணி தொடங்க உள்ளது. பயனாளிகளுக்கான விண்ணப்ப படிவத்தினை அரசு நேற்று வெளியிட்டது. அதில் இடம்பெற்றுள்ள விதவை ஓய்வூதியம் என்கிற வார்த்தை இடம்பெற்றுள்ளது. விதவை என்கிற சொல்லுக்கு பதிலாக கலைஞர் பயன்படுத்த வலியுறுத்திய கைம்பெண் என்கிற சொல்லினை பயன்படுத்தலாமே என சமூக வலைத்தளங்களில் கோரிக்கை எழுந்துள்ளது.
யாரெல்லாம் மகளிர் உரிமை தொகைப் பெற தகுதியில்லை:
- ரூபாய் 2.5 இலட்சத்திற்குமேல் ஆண்டு வருமானம் ஈட்டும் குடும்பங்கள்.
- குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 இலட்சம் மேல் ஈட்டி வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள். ஆண்டுக்கு ரூ.2.5 இலட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டி தொழில் வரி செலுத்துவோர்.
- மாநில, ஒன்றிய அரசு ஊழியர்கள் / பொதுத்துறை நிறுவனங்கள்/வங்கிகளின் ஊழியர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் அவற்றின் ஓய்வூதியதாரர்கள்.
- தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் (ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களைத் தவிர). அதாவது பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், ஊராட்சிமன்றத் தலைவர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள்.
- சொந்தப் பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள்.
- ஆண்டுக்கு 50 லட்சத்திற்கும்மேல் ஆண்டு விற்பனை (Annual turnover) செய்து சரக்கு மற்றும் சேவை வரி (GST) செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள்.
- ஏற்கனவே முதியோர் ஓய்வூதியம் (OAP), விதவை (கைம்பெண்) ஓய்வூதியம், அமைப்பு சாராத் தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள்.
- மேற்கண்ட ஏதாவது ஒரு தகுதியின்மை வகைப்பாட்டில் வரும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெறத் தகுதி இல்லை.
விதிவிலக்குகள்:
மாற்றுத் திறனாளிகள் நலத்துறையால் வழங்கப்படும் கடும் உடல் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை பெறும் உறுப்பினரைக் கொண்ட குடும்பங்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவை. இவ்வகைப்பாட்டினர், திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து, எவ்விதத் தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில், விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் என அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காண்க:
ஆடி தொடங்கினால் வெங்காயத்தின் விலை குறையலாம்- சந்தை வியாபாரி நம்பிக்கை
Share your comments