கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் இதுவரை 1.48 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இதில் விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம்கள் நடைப்பெறும் தேதி குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.
பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் நோக்கத்தோடு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 24.7.2023 அன்று தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார். விண்ணப்பப் பதிவு முகாம்களை இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாக 20,765 நியாய விலைக் கடைகளில் இருக்கும் குடும்ப அட்டைகளுக்கு 24.07.2023 முதல் 04.08.2023 வரை நடைபெற்ற விண்ணப்பப் பதிவு முகாமில் 88.34 இலட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக இரண்டாம் கட்ட முகாம்கள் 05.08.2023 அன்று தொடங்கி 16.08.2023 வரை நடைபெற்று வருகிறது. இந்த இரண்டாம் கட்ட முகாமில் இதுவரை 59.86 இலட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
விண்ணப்பப் பதிவு காலை 9-30 மணி முதல் மதியம் 1-00 மணி வரையும், பிற்பகல் 2-00 மணி முதல் மாலை 5-00 மணி வரையும் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் வசதிக்காக சனி மற்றும் ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை தினங்களிலும் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளும் முகாம்கள் நடைபெறுகிறது.
விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு முகாம்:
இந்த இரண்டு முகாம்களிலும் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் 19.08.2023 மற்றும் 20.08.2023 ஆகிய நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்குமாறு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேற்படி முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் அளிக்கப்பட்ட தகவங்களை தேவையேற்படின் சரிபார்க்க களஆய்வு மேற்கொள்ளப்படும். அப்போது விண்ணப்பத்தாரர்கள் களஆய்விற்கு வரும் அலுவலர்களுக்கு உரிய தகவல்களை அளித்து தகுந்த ஒத்துழைப்பு வழங்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்காக தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 35 ஆயிரத்து 925 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில், விண்ணப்பங்களைப் பதிவு செய்வதற்காக 68 ஆயிரத்து 190 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அரசின் சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தடையின்றி செயல்படுத்துவதற்காக 7,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படக்கூடிய டோக்கன்களில் விண்ணப்பத்தார்கள் ரமுகாமுக்கு வர வேண்டிய தேதி, நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த தேதியில் சரியாக வந்து, எவ்வித கூட்ட நெரிசலுமின்றி, விண்ணப்பங்களை பதிவு செய்து செல்ல மாவட்ட நிர்வாகம் தரப்பில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
எழும்பூர்- கிண்டி உட்பட சென்னையில் நாளை பல பகுதியில் மின்தடை
யப்பாடா.. 3 ரக தக்காளியும் கிலோவுக்கு ரூ.80 வரை அதிரடி குறைவு
Share your comments