தென்காசி மாவட்டத்தில், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் பரப்பு விரிவாக்க இனத்தின் கீழ் முருங்கை ஹெக்டேருக்கு 40 சதவீத மானியத்தில் நடவுப்பொருட்கள் வழங்கப்பட உள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் துரை.இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் என்பது முக்கியத்துவம் வாய்ந்த பயிர்களின் உற்பத்தித் திறனை துறை சார்ந்த உள்ளீடுகளின் மூலம் அதிகரித்து விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கம் கொண்டதாகும். இத்திட்டமானது ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் 60:40 என்ற விகித நிதிப் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் பரப்பு விரிவாக்க இனத்தின் கீழ் முருங்கை ஹெக்டேருக்கு ரூ.10,000 வீதம் 40 சதவீத மானியத்தில் நடவுப்பொருட்கள் வழங்கப்பட உள்ளன. கொடி வகை பயிர்களுக்கு நிரந்தர பந்தல் அமைத்தல் போன்ற இனங்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.2 இலட்சம் வரை 50 சதவீதம் பின்னேற்பு மானியமாக வழங்கப்பட உள்ளன. தற்காலிக பந்தல் (ட்ரல்லிஸ்) அமைப்பதற்கு ஹெக்டேருக்கு ரூ.25,000 வரை 50 சதவீதம் பின்னேற்பு மானியமாக வழங்கப்பட உள்ளது.
மேற்கண்ட திட்ட இனங்களில் பயன்பெற விரும்பும் விவசாயிகளுக்குரிய ஆவணங்களான பட்டா நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் 2 மற்றும் அடங்கல் உள்ளிட்டவற்றை சம்மந்தப்பட்ட வட்டாரத்தின் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன்பெறலாம்.
மேலும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் இந்த ஆண்டு 10 பஞ்சாயத்து கிராமங்கள் அரசாங்கத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட இந்த பஞ்சாயத்து கிராமங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு 80 சதவீத இலக்கீடு இக்கிராமங்களில் செயல்படுத்தப்படும் என்றும், மேற்கூரிய அனைத்து திட்ட இனங்களும் 80 சதவீதம் பொது பிரிவு விவசாயிகளுக்கும், 20 சதவீதம் ஆதிதிராவிட விவசாயிகளுக்கும் வழங்கப்படும்.
பெண் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் 30 சதவீதம் திட்ட இனங்கள் பெண்களுக்கு வழங்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு tnhorticulture.tn.gov.in., என்ற தோட்டக்கலைத் துறை இணையதளத்திலும், உழவன் செயலிலும் பதிவு செய்து பயன்பெறலாம். கூடுதல் விபரங்களுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகவும் என மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
முன்னதாக மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தென்னையில் ஊடுபயிராக வாழை சாகுபடி செய்ய ஹெக்டேருக்கு ரூ.10 ஆயிரம் வீதம் 40 சதவீதம் மானியத்தில் நடவுபொருட்கள் மற்றும் இடுபொருட்கள் வழங்கப்படுகிறது.
அதேப் போல், வாழையில் ஊடுபயிராக காய்கறி சாகுபடி செய்ய ஹெக்டேருக்கு ரூ.10ஆயிரம் வீதம் 40 சதவீத மானியத்தில் இடுபொருட்கள் வழங்கப்படுவதாகவும் தென்காசி மாவட்ட ஆட்சியர் தகவல் வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
இந்த 6 தகுதி போதும்- 50 % மானியத்தில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க!
Share your comments