கொரோனா பீதியால், நாடே குலைநடுங்கியுள்ளது. உலக நாடுகளில், நாளுக்கு நாள் நோய்தொற்று பாதிப்பு அதிகரிப்பு, பலி எண்ணிக்கை உயர்வு என பலத்த அச்சுறுத்தலை நமக்கு ஏற்படுத்தியுள்ளது கொரோனா.
இந்நோயைக் குணப்படுத்தும் மருந்தைக் கண்டுபிடிக்க ஆராய்ச்சியாளர்கள் இரவு பகலாக உழைத்து வருகின்றனர். தமிழகத்தைப் பொருத்தவரை, குணமடைவோரின் எண்ணிக்கை கணிசமாக இருப்பது சற்று ஆறுதலான விஷயம்.
நோய் பரவலைக் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வரும் வேளையில், நாமும் நம்முடைய ஆரோக்கியத்தில் சிறிது கவனம் செலுத்துவதும் கட்டாயம்தானே. நோய் வரும் முன் காக்க வேண்டுமானால், நம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும்.
ஏனெனில் நோய் எதிர்ப்புச் சக்திக் குறைவாக உள்ளவர்களையே கொரோனா குறிவைத்துத் தாக்கி, தன் கோர தாண்டவத்தை ஆடுகிறது. அவ்வாறு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பல்வேறு கஷாயங்கள், மருந்துகள் பரிந்துரை செய்யப்படுகின்றன.
அதேநேரத்தில், வீட்டில் நாமே சுத்தமாகத் தயாரித்துப் பருகக் கூடிய தேநீர்களும் உண்டு. இந்த தேநீர்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன என ஆயுர்வேத மருத்துவத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க ஆயுர்வேத மூலிகைகளே அதிகம் உதவும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.
அந்த தேநீர்கள் பற்றி இப்போது பார்ப்போம்.
இஞ்சி தேநீர் (Ginger tea)
1/2 ஸ்பூன் அரைத்த இஞ்சி விழுதை, ஒரு டம்ளர் நீரில் கரைக்கவும். பிறகு அந்தக் கரைசலை 5 முதல் 6 நிமிடங்கள் வரை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். இந்த கரைசல் குடிக்கும் அளவுக்கு சூடு வந்தவுடன் குடித்துவிடவும்.
மருத்துவ பயன்கள் (Medical Benefits)
இந்த தேநீரைப் பருகுவதால், சளி, இருமல் மற்றும் வயிறு சார்ந்த பிரச்சனைகள் குணமாகும்.
ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள்(Hypertension, மருத்துவர்களின் ஆலோசனைப்படி இந்த தேநீரைப் பருகுவது நல்லது.
பட்டை தேநீர்(Cinnamon tea)
1/2 இஞ்ச் இலவங்கப்பட்டையை ஒரு டம்ளர் நீரில் சேர்த்து, 5 முதல் 7 நிமிடங்கள் கொதிக்க விடவும். பிறகு ஆற வைக்கவும். வெதுவெதுப்பான சூடு வந்தவுடன் பருகவும்.
மருத்துவ பயன்கள் (Medical Benefits)
இலவங்கப்பட்டை உடல் எடையைக் குறைக்க உதவுவதுடன், இதயம் சார்ந்த நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளையும் தடுக்கிறது. மேலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சமன்செய்வதுடன், பாக்டீரியாவிற்கு எதிராகவும் போராடுகிறது.
துளசி தேநீர் (Tulsi tea)
ஒரு டம்ளர் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து இறக்கவும். அதில், 4 அல்லது 5 துளசி இலைகளைப் போட்டு மூடி விடவும். சிறிது நேரம் கழித்து இந்தத் தேநீரைக் குடிக்கவும்.
மருத்துவப் பயன்கள் (Medical Benefits)
துளசி இலைகள் எண்ணற்ற நன்மைகளை அளிக்க வல்லது என்பது அனைவருக்குமே தெரியும். இவ்வாறு தேநீராகப் பருகுவதன் மூலம், நோய் எதிர்ப்பு சக்தி ஊக்குவிக்கப்படும். மேலும் மன அழுத்தம் குறைவதுடன், ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் சமன் செய்யப்படுகிறது.
சீரகத் தேநீர் (Jeera tea)
1/2 ஸ்பூன் சீரகம், 1/2 ஸ்பூன் வரக்கொத்தமல்லி விதைகள், 1/2 ஸ்பூன் வெந்தயம் ஆகியவற்றை ஒரு டம்ளர் நீரில் சேர்த்து நன்குக் கொதிக்க வைக்கவும். வெதுவெதுப்பான சூடு வந்தவுடன் பருகவும்.
மருத்துவப் பயன்கள் (Medical Benefits)
இந்த தேநீர் ஜீரணத்தை (Digestion)ஊக்குவிப்பதுடன், எடை அதிகரிப்பதையும் தடுக்கிறது.
துளசி மிளகு தேநீர் (Tulsi black pepper tea)
இரண்டு டம்ளர் தண்ணீரில், மூன்று அல்லது நான்கு துளசி இலைகள், இரண்டு மிளகு மற்றும் ஒரு கிராம்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். இளஞ்சூடாக இருக்கும்போதே இந்த தேநீரைப் பருகவும்.
மருத்துவப் பயன்கள் (Medical Benefits)
இந்த தேநீர் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், மழைக்கால நோய் தொற்றில் இருந்தும் நம்மைக் காக்க உதவும். கர்ப்பிணிகள் மட்டும், மருத்துவரின் ஆலோசனைப் படி இந்த தேநீரைப் பருகுவது நல்லது.
மேலும் படிக்க...
கேன்சர் கில்லர் என்று சொல்லப்படும் முள் சீத்தா பழம்! அதன் நன்மைகள் தெரியுமா உங்களுக்கு!
காளான்களை பதப்படுத்தும் மற்றும் விற்பனை முறைகள்!
Share your comments