நடுத்தர வயதுடைய பல பெண்களுக்கும், உடல் பருமனான பெண்கள் பலருக்கும் உள்ளங்காலில் தோல் தடித்து, அடிக்கடி வெடிப்பு ஏற்பட்டு, சிறிது துாரம் நடப்பதற்குள் வலி தாளாமல் அவதியுறுவதை காண முடிகிறது. உடல் பருமனுக்கும், இதற்கும் நேரடி தொடர்பில்லை என்றாலும், உடல் கனம் முழுவதையும் பாதமே (Foot) தாங்குவதால் வெடிப்பு ஏற்படுகிறது. உள்ளங்காலின் வெளிப்புற அமைப்பு, கனத்த தசைப் போர்வை போன்று தடித்த தோல் விரிப்பு கொண்டது.
தசை இறுக்கம் (Muscle tightness)
கடுமையான சூடு, ஈரம், மேடு, பள்ளம் இவற்றை தாங்கும் சக்தி பெற்றுள்ளது. இந்த தடித்த தோல் பகுதி விரிந்து சுருங்கும் தன்மை கொண்டது. தினமும் குளிப்பதற்கு முன், உள்ளங்காலில் ஏதேனும் ஒரு எண்ணெய் தேய்த்து கழுவ வேண்டும். இரவில் படுக்கைக்கு போவதற்கு முன், லேசாக எண்ணெய் தேய்த்து தசை இறுக்கத்தை தளர்த்தி விட வேண்டும்.
உள்ளங்காலில் வறட்சி (Dryness of the sole)
வெந்நீர் கொண்டு கழுவி துடைப்பது, கால்களில் வெடிப்பு வராமல் பாதுகாக்கும்; கால் தசை இறுக்கம் தளர்ந்தால், நிம்மதியாக துாங்க முடியும். உள்ளங்காலில் வறட்சி அதிகமாகும் போது, தோலின் வெளிப்புறம் வரை ரத்த ஓட்டம் வருவது நின்று, தோல் வறண்டு, தோலின் மேல்புற விரிப்பு அழிந்துவிடும்; தோல் தடிக்கும்.
மேல் தோல் தடிக்க தடிக்க, அதில் விரிந்து சுருங்கும் தன்மை குறைவதால், உடல் அழுத்தம் தாங்காமல் பாளம் பாளமாக வெடிக்கும். சிலருக்கு உடல் சூடு அதிகமாக இருக்கும்; அவர்களுக்கு உள்ளங்கால் தோல் வெடித்து ரத்தம் கசியும்; கடுமையான வலியும் ஏற்படும். அரிப்பு மிகுதியால், சிலர் காலை தேய்த்து, புண் ஏற்படுத்தி கொள்வர்.
தோல் தடித்து வெடிப்பு ஏற்படும் போது, தோலின் வெளிப்புறம் வரை ரத்த ஓட்டம் ஏற்படும்படி, தினமும் சாதம் வடித்த கஞ்சியை சுட வைத்து தேய்த்து, வெந்நீரில் சிறிது நேரம் இதமாக கால்களை தேய்த்து கழுவலாம். ஈரத்தை துடைத்த பின், மூலிகை தைலம் தேய்த்து தடவி விடலாம்.
நிவாரணி
அரிசி மாவை தண்ணீரில் கலந்து கஞ்சி பதத்தில் காய்ச்சி, ஆறியதும், பாதங்களில் தடவி கொள்ளலாம். தினமும் இரு முறை இப்படி செய்தால், காலில் வெளித்தோல் பரப்பு வரை ரத்த ஓட்டம் ஏற்பட்டு, வெடிப்பு மறையும். வெடிப்பிற்கான களிம்புகள் தற்காலிக நிவாரணிகளாகவே இருக்கும்.
ரத்தக்கசிவு, அரிப்பு இருந்தால் மருத்துவரின் ஆலோசனையின்படி மருந்து சாப்பிட வேண்டும். நன்னாரி வேர்த் தோல், சுக்கு, கடுக்காய் கொண்டு தயாரிக்கப்படும் ரத்த சுத்திக்கான கஷாயம் மிகவும் நல்லது.
பேராசிரியர் எஸ்.சுவாமிநாதன்,
ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஆயுர்வேத கல்லுாரி,
நசரத்பேட்டை, சென்னை.
94444 41771
மேலும் படிக்க
Share your comments