குடிப்பது புத்தியை மழுங்கடிக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். இப்போது, குடியால் எந்த அளவுக்கு மூளை பாதிக்கப்படும் என்பதை, அறிவியல் அளந்து சொல்லியிருக்கிறது. அமெரிக்காவிலுள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள், 36 ஆயிரம் பேரின் மூளையின் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் படங்களை வைத்து குடியால் மூளைக்கு ஏற்படும் மாற்றங்களை ஆராய்ந்தனர்.
மூளையின் அளவு (Size of Brain)
தினமும் இரண்டு கோப்பை பீர் அல்லது இரண்டு குவளை ஒயின் அருந்துபவருக்கு, மூளையின் கட்டமைப்பிலேயே மாறுதல் ஏற்படுவதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். அதுமட்டுமல்ல, தினமும் இரண்டு குவளை முதல் நான்கைந்து குவளை மது அருந்துவோருக்கு மூளையின் அளவு கணிசமாக குறைந்துவிடும் என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
எந்த அளவுக்கு?
சராசரி நபருக்கு 10 ஆண்டுகள் வயது கூடும்போது, அதற்கேற்ப மூளையின் அளவு குறையும். ஆனால், தினமும் நான்கு குவளை மது குடிப்பவருக்கு அதே அளவு மூளை குறைவு சில ஆண்டுகளிலேயே ஏற்படும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதுவரை குடிப் பழக்கத்திற்கும், மூளை பாதிப்புக்கும் உள்ள தொடர்பு குறித்து நடத்தப்பட்ட மிகப் பெரிய ஆய்வு இது. இதற்கு முன்பு சில நுாறு பேர்களுக்கு இடையே தான் இத்தகைய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. எப்படி பார்த்தாலும், குடிப்பழக்கம் உள்ள நபருக்கு மூளை நாளடைவில் பாதிக்கும் என்பது உறுதி.
மேலும் படிக்க
Share your comments