1. வாழ்வும் நலமும்

மோரில் உள்ள மருத்துவப் பண்புகள்

KJ Staff
KJ Staff

 மோரானது வீக்கம், எரிச்சல் மற்றும் செரிமான கோளாறுகள், இரைப்பை குடல்நோய்கள், மண்ணீரல் நோய்கள், இரத்தசோகை மற்றும் பசியின்மை ஆகியவற்றிற்கு எதிரான இயற்கை சிகிச்சை அளிக்கும் பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

மோரில் விட்டமின் பி2 (ரிபோஃப்ளோவின்), பி6(பைரிடாக்ஸின்), பி12(கோபாலமின்), ஏ1(ரெட்டினால்), சி4(கால்சியம் அஸ்கார்பேட்), ஃபோலேட்டுகள் போன்றவை உள்ளன.

மேலும் இதில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், துத்தநாகம், இரும்புச்சத்து ஆகியவை காணப்படுகின்றன. மோரில் எரிசக்தி, நீர்ச்சத்து, கார்போஹைட்ரேட், புரதம், மிகக்குறைந்தளவு கொலஸ்ட்ரால், ஃபோலேட்டுகள் முதலியவை காணப்படுகின்றன.

இதய நலத்திற்கு

மோரில் உள்ள பொட்டாசியமானது உயர்இரத்த அழுத்தத்தைக் குறைத்து இதயதுடிப்பை சீராக்கி எளிதான இரத்தஓட்டத்திற்கு வழிவகை செய்கிறது.

மேலும் மோரானது உயிரியக்க புரதங்களை அதிகளவு கொண்டுள்ளது. உயிரிக்க புரதங்கள் உடலில் கொலஸ்ட்ராலின் அளவினைக் குறைத்து நோய்எதிர்ப்பு சக்தியையும் வழங்குகின்றன. இதனால் இதயநலத்தை பேணுபவர்கள் உப்பு சேர்க்காத மோரினை அருந்துவது நலம் பயக்கும்.

உடலுக்கு தேவையான நீர்ச்சத்தினைப் பெற

மோரானது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு நீர்ச்சத்தினையும் வழங்குகிறது. மேலும் மோரில் உள்ள மின்பகுளி தாதுப்பொருட்கள், நீர்ச்சத்து ஆகியவை கோடைகாலத்தில் ஏற்படும் நீர்இழப்பினை சரிசெய்து உடலின் நீர்ச்சத்தினை நிலைநிறுத்த உதவுகிறது. இதனால் இது கோடைக்கு ஏற்ற குளிர்பானமாக வெப்பமண்டல நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.

நோய்எதிர்ப்பு ஆற்றலினைப் பெற

மோரில் உள்ள புரோபயாடிக் பொருளானது உணவினை நன்கு செரிக்கச் செய்வதோடு நோய்எதிர்ப்பு ஆற்றலை வழங்கி நோய்க்கிருமிகளின் தொற்றிலிருந்தும் நம்மை பாதுகாக்கிறது.

மேலும் மோரில் உள்ள துத்தநாகம் நோய்எதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்தி விட்டமின் சி-யுடன் இணைந்து உடலுக்கு நோய்எதிர்ப்பு ஆற்றலை வழங்குகிறது.

வலுவான எலும்புகளைப் பெற

கால்சியம் தாதுபொருளானது எலும்பின் அடர்த்தியை அதிகரித்து எலும்பிற்கு வலுவூட்டுகிறது. மேலும் கால்சியம் தசைச் சுருக்கம் ஏற்படாமலும், செல்களுக்கு இடையே தகவல் பரிமாற்றத்திற்கும் உதவுகிறது.

மோரில் உள்ள அதிகப்படியான கால்சியமானது எலும்புகள், அதன் அடர்த்தியை இழக்காமல் இருக்கச் செய்வதோடு எலும்புகளின் கட்டமைப்பை நிலையாக பராமரிக்கவும் செய்கிறது.

இதனால் மோரினை அருந்தி வயதான காலத்தில் ஏற்படும் ஆஸ்டியோபோரோஸிஸ் நோயிலிருந்து பாதுகாப்பு பெறலாம்.

குழந்தைகள் நல்ல ஆராக்கியமான பற்கள் மற்றும் எலும்புகளைப் பெற மோரினை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கர்ப்பிணி பெண்களுக்கு

கர்ப்பகாலத்தில் பெண்கள் தங்களின் குழந்தை மற்றும் தங்களின் உடல்நலத்திற்கு ஊட்டச்சத்துக்களை உணவில் எடுத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.

மோரில் உள்ள புரதம், நுண்ஊட்டச்சத்துக்கள் மற்றும் புரோபயாடிக் பொருட்கள் கர்ப்பிணிகளை நோயிலிருந்து பாதுகாக்கிறது.

மோரில் உள்ள ஃபோலேட்டுக்கள் கருவில் உள்ள குழந்தையின் மூளை மற்றும் உடல்உறுப்புக்களின் வளர்ச்சிக்கு மிகவும் உதவிபுரிகிறது.

கர்ப்பிணிகள் தினமும் மோரினை ஒருவேளை அருந்துவதன் மூலம் தங்கள் மற்றும் தங்களின் குழந்தை ஆகியோரின் உடல்நலத்தினைப் பேணலாம்.

நல்ல செரிமானத்திற்கு

மோரானது பெருங்குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவிபுரியும் புரோபயாடிக் என்ற பொருளைக் கொண்டுள்ளது.

இந்த பாக்டீரியா நல்ல செரிமானம், குடல் மற்றும் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுதல் ஆகியவற்றோடு ஹீலியோபாக்டர் பைலரி போன்ற நோய்க்கிருமி நுண்ணுயிரிகளினால் ஏற்படக்கூடிய நோய்த்தொற்றிலிருந்து தடுக்கிறது.

ஹீலியோபாக்டர் பைலரி பாக்டீரியா குடல்புண் நோய்க்கு முக்கிய காரணியாக உள்ளது. நீர்மோரில் சேர்க்கப்படும் பொருட்களான சீரகம், மிளகு, இஞ்சி, கறிவேப்பிலை போன்றவை உணவினை நன்கு செரிக்கச் செய்கின்றன.

உணவினை அதிகமாக உண்டதாக உணர்ந்தால் நீர்மோர் அருந்தினால் செரிமானம் எளிதாக நடைபெறும்.

விருந்து உணவினை உண்ணும்போது அதிகப்படியான மசாலாக்கள், எண்ணெய், நெய் போன்றவை உணவு குழாய் மற்றும் செரிமான மண்டலத்தின் சுவர்களில் படிந்திருக்கும்.

நீர்மோரினை அருந்தும்போது உணவுக்குழாய், செரிமான மண்டலத்தில் படிந்திருக்கும் அதிகப்படியான மசாலாக்கள், எண்ணெய், நெய் போன்றவற்றை நீக்கி எளிதில் செரிமானம் அடையச் செய்கிறது. எனவேதான் விருந்தின் முடிவில் மோர் அருந்தப்படுகிறது.

மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட செரிமானக் கோளாறுகளை சரிசெய்யவும் மோர் பயன்படுத்தப்படுகிறது.

உடல்வளர்ச்சிதை மாற்றம் சீராக நடைபெற

வளர்ச்சிதை மாற்றம் என்பது உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்க நடைபெறும் இயற்கை நிகழ்வாகும். இதற்கு வளர்ச்சிதை மாற்ற நொதிகள் அவசியாகும்.

மோரில் உள்ள விட்டமின் பி6(பைரிடாக்ஸின்), பி12 (கோபாலமின்) உள்ளிட்ட பி தொகுப்பு விட்டமின்கள் வளர்ச்சிதை மாற்ற நொதிகள் ஆகும்.

எனவே மோரினை அடிக்கடி உணவில் சேர்த்து சீரான வளர்ச்சிதை மாற்றத்தைப் பெறலாம். மேலும் மோரானது கல்லீரல் சீராக செயல்படவும் உதவுகிறது.

ஆழ்ந்த தூக்கத்திற்கு

மோரில் உள்ள மெக்னீசியச்சத்து தூக்கமின்மைக்கு நிவாரணம் தருகிறது. மோரில் உள்ள மெக்னீசியம் நரம்புமண்டலத்தை கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

மோரினை அருந்தும்போது அதில் உள்ள மெக்னீசியம் நரம்பு மண்டலம் மற்றும் மூளையை தளர்வுறச் செய்து ஆழ்ந்த தூக்கத்தினை வரவழைக்கிறது. படுக்கைக்கு செல்லும்முன் மோரினை அருந்துவதால் ஆழ்ந்த தூக்கத்தினைப் பெறலாம்.

தெளிவான பார்வைக்கு

மோரில் கண்களின் செயல்பாட்டிற்குத் தேவையான விட்டமின் ஏ1(ரெட்டினால்)-ஐக் கொண்டுள்ளது. மோரினைத் தொடர்ந்து அருந்தும்போது கண்பார்வை சம்பந்தமான நோய்கள் வருவது தடுக்கப்படுகிறது. மேலும் தெளிவான பார்வை நாம் பெறலாம்.

கேசம் மற்றும் சருமப்பராமரிப்பிற்கு

வறண்ட கேசத்தினர் மோரினை தேய்ந்து சிலநிமிடங்கள் ஊறவைத்து குளிக்கும்போது கேசம் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும். மோரில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கேசத்தினை பலப்படுத்தி மிருதுவாக்குகிறது.

மோரில் உள்ள விட்டமின்கள், புரோடீன்கள், ஆன்டிஆக்ஸிஜென்டுகள் சருமத்தினை பளபளப்பாக்கி பொலிவுறச் செய்கிறது. தொடர்ந்து மோரினைக் கொண்டு முகத்தினை கழுவும்போது முகம் நாளடைவில் பளிச்சிடுகிறது.

மோரினைப் பயன்படுத்தும் முறை

பாலில் உள்ள லாக்டோஸ் சகிப்புதன்மை இல்லாதவர்கள் மோரினை அருந்தி கால்சியம் சத்தைப் பெறலாம்.

புதிதாக தயாரிக்கப்பட்ட மோரினையே பயன்படுத்த வேண்டும். மேலும் மோரில் சீரகம், மிளகு, இஞ்சி, கறிவேப்பிலை, மல்லிஇலை சேர்த்து பருகுவது நலம் பயக்கும்.

மோரானது அப்படியேவோ, சமையலிலோ பயன்படுத்தப்படுகிறது. பான்கேக்குகள் தயாரிப்பிலும், இறைச்சியினை மெதுவாக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

மோரினை தயாரிக்கும் முறை

முதலில் பாலினை காய்ச்சி ஆறவைத்து பின் பழைய தயிர் அல்லது மோரினை கொண்டு உறையிடப்படுகிறது.

ஸ்ட்ரேப்டோகாக்கஸ் தெர்மோஃபிலஸ் மற்றும் லாக்டோ பாசில்லஸ் டெல்ப்ரூக்கி சைப்ஸ் போன்ற பாக்டீரியாக்கள் இதன்மீது செயல்பட்டு பாலினை கெட்டியான தயிராக மாற்றுகின்றன.

பின் தயிருடன் தேவையான அளவு தண்ணீர் (ஒரு பங்கு தயிருக்கு மூன்று பங்கு தண்ணீர்) சேர்த்து கடைந்து வெண்ணெய் எடுக்கப்படுகிறது. வெண்ணெய் எடுக்கப்பட்ட மீதமுள்ள திரவம் மோர் என்றழைக்கப்படுகிறது.

English Summary: Health benefits of Buttermilk

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.