செல்வம் இழந்தால், எதுவும் இழக்கப்படுவதில்லை. உடல்நலம் இழந்தால், எல்லாம் இழக்கப்படுகிறது என ஒரு பழமொழி உண்டு. அதாவது If Wealth is lost, Nothing is lost. If Health is lost, Everything is lost என்பார்கள் ஆங்கிலத்தில்.
நிலம், நீர், காற்று என அனைத்தும் மாசு மயமாகிவிட்ட இன்றைய சூழலில், நம் அனைவருக்கும், ஆரோக்கியத்தைப் பெறுவதே மாபெரும் சவாலாக மாறிவிட்டது.
ஆனால், உணவானாலும் சரி, உடல் உழைப்பானாலும் சரி, உழைப்புக்கேற்ற உணவை உண்டு, ஆரோக்கியத்தை தம் வசப்படுத்தி வைத்திருந்தார்கள் நம் முன்னோர்கள். அந்த வகையில் அவர்கள் தவறாமல் உட்கொண்டது சிறுதானியங்களைத்தான். ஏனெனில், ஆரோக்கியமான உணவு முறையில், முதலிடம் பிடிப்பது சிறுதானியங்களே.
இவற்றை உட்கொண்டதால்தான் அன்று, உணவே மருந்து என்ற நிலை இருந்தது. ஆனால், நாகரீகம் என்ற பெயரில், துரித உணவுக்கு மாறியதால்தான் தற்போதைய தலைமுறை, மருந்தே உணவு என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே நோய்களின் நடமாடும் இயந்திரமாக மாறிய மனிதனைக் காப்பாற்றவும், நோயிலிருந்து முழுமையாக விடுபடவும் சிறுதானியங்கள் பெரிதும் கைக்கொடுக்கும்.
நம்முடைய பிரதான உணவாகக் கருதப்படும் அரிசியில் இருப்பதைவிட அதிக சத்துக்களை இந்த சிறுதானியங்கள் கொண்டுள்ளன. இதனை உட்கொள்ளும்போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பன்மடங்கு அதிகரிக்கும். அதுமட்டுமல்லாது உடல் பருமன் குறைவதுடன், இதயநோய் உள்ளிட்ட நோய்கள் வராமல் தடுக்கப்படும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
அதிலும் ஈவு இரக்கமின்றி,கொரோனா வைரஸ் மக்களைக் கொன்றுகுவிக்கும் இவ்வேளையில், நம் அனைவரும் சிறுதானியங்களை உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது.
சிறு தானியங்களின் வகைகள்
கம்பு, சோளம், வரகு, பனிவரகு, சாமை, தினை, குதிரைவாலி, கேழ்வரகு, போன்றவையே சிறுதானியங்கள்.
உருவத்தில், அளவில் மிகவும் சிறியதாகக் காணப்படுவதால், இவை சிறுதானியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. எனினும், கீர்த்தி சிறிது, மூர்த்தி பெரிது என்பதற்கு இணங்க நமக்கு இந்த சிறுதானியங்கள் பல்வேறு நன்மைப் பயக்கின்றன.
கம்பு - (Pearl Millet)
வறண்ட பகுதியில்கூட விளையும் தன்மை கம்புக்கு உண்டு. இதில் அதிக அளவில் புரதம், கால்சியம், பாஸ்பரம், இரும்புச் சத்து, ரைபோபுளோவின், நயாசின் சத்துக்கள், வைட்டமின்கள், தாது உப்புகள் , மாவுச்சத்து, கரோட்டின், லைசின் போன்ற அமிலங்கள் என பல உயிர்ச்சத்துகள் உள்ளதால் உணவுச் சத்து தரத்தில் முதலிடம் வகிக்கிறது.
தோலிற்கும், கண்பார்வைக்கும் அவசியமான வைட்டமின் ஏ உருவாக்குவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டீன் அதிக அளவில் கம்பில் மட்டுமே உள்ளது. அரிசியை விட கிட்டத்தட்ட எட்டு மடங்கு அதிக இரும்புச் சத்து கம்பு தானியத்தில் உள்ளது. உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும்.கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும்.இதயத்தை வலுவாக்கும்.சிறுநீரைப் பெருக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்
கேழ்வரகு - (Finger Millet)
உடலுக்கு நல்ல உறுதியைக் கொடுக்கும். பாலில் உள்ள கால்சியத்தை விட கேழ்வரகில் கால்சியம், இரும்புச் சத்து ஆகியவை அதிகம் உள்ளன. எனவே கேழ்வரகை தினமும் உணவில் சேர்த்தால் உடல் வலுப்பெறும். நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கிறது. உடல் சூட்டைத் குறைக்கும்
வரகு (Broom Corn Millet)
வரகு, கோதுமையை விட சிறந்தது. இதில் உள்ள நார்ச்சத்து, அரிசி, கோதுமையில் இருப்பதை விட அதிகம்.. அதனால் உண்ட உணவை விரைவில் செரிக்க வைக்கும் தன்மையே வரகின் சிறப்பு. இதில் புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்து உள்ளது. இது உடல் எடையைக் குறைக்கக்கூடியது. மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது.
திணை - (Foxtail Millet)
திணையில் கனிமச்சத்து, இரும்புச்சத்து, புரதச்சத்து, புரதம், நார்ச் சத்து, மாவுச் சத்து, கொ பீட்டா கரோட்டின் உள்ளிட்டவை நிறைந்துள்ளன. இதனால் வாயுத்தொல்லை உள்ளிட்ட பல்வேறு நோய்கள் தீர திணை உதவுகிறது.
குதிரைவாலி (Barnyard Millet)
மானாவாரி நிலத்தில் விளையக்கூடிய தானியம்தான், குதிரைவாலி. இதன் கதிர், குதிரையின் வால் போன்ற அமைப்பு கொண்டது. இதில் இரும்புச் சத்து, நார்ச் சத்து, சுண்ணாம்புச் சத்து ஆகியவை அதிகளவில் உள்ளன. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு.
சோளம் - (Sorghum)
சோளத்தில், ஆற்றல், புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, கால்சியம், இரும்புசத்து, பி-கரோட்டின், 47 மி.கி, தயமின், ரிபோப்ளோவின், நயசின் ஆகிய சத்துக்கள் உள்ளன. இவை நீரிழிவு நோய், செரிமான குறைகள், ரத்தசோகை சர்க்கரை நோய் முதலியவற்றைக் குணப்படுத்துகிறது. சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி இதற்கு இருப்பதால், உடம்பில் உள்ள உப்பைக் கரைக்கும் தன்மை உண்டு.
Elavarase Sivakumar
Krishi Jagran
மேலும் படிக்க...
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் 2021 டிசம்பருக்குள் முடிக்க திட்டம்
RBI கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள் - விவசாயிகளுக்கு என்ன பயன்?
முத்ரா கடன்தாரர்களுக்கு மத்திய அரசின் சிறப்பு போனஸ்
Share your comments