இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான மக்கள் கடுமையான மனநல நெருக்கடியை எதிர்கொள்கிறார்கள் என ஐசிஎம்ஆரின் ஆய்வறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.
குடும்பத்தில் மருத்துவத்திற்கு என்று ஒதுக்கும் பட்ஜெட்டில் மனநலக் கோளாறு தொடர்பான பிரச்சினைக்கு அதிகம் செலவிடப்படுவதாக தெரிய வந்துள்ளது. மனநலக் கோளாறு உள்ள உறுப்பினர்களைக் கொண்ட 20 சதவீத இந்திய குடும்பங்கள் வறுமையில் இருப்பதாகவும் சமீபத்திய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
ஜூலை மற்றும் டிசம்பர் 2018 க்கு இடையில் நடைபெற்ற தேசிய மாதிரி கணக்கெடுப்பில் (NSS- National Sample Survey) 1.18 லட்சம் குடும்பங்கள் மற்றும் 5.76 லட்சம் தனிநபர்களை உள்ளடக்கிய கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்த தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. இந்த ஆய்வானது மனநோயின் தாக்கத்திற்கு உள்ளான 6,679 நபர்களை உள்ளடக்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் முதன்முதலாக நடத்தப்பட்ட ஆய்வில், குடும்பத்தின் மொத்த சுகாதாரப் பாதுகாப்புக்கான பட்ஜெட்டில், 18.1 சதவீதத்திற்கும் அதிகமானோர் மனநலப் பராமரிப்புக்காக ஒதுக்கியுள்ளனர். மனநலப் பிரச்சினைகள் என்பது, ’மனநிலைக் கோளாறுகள், மனச்சோர்வு, டிமென்ஷியா மற்றும் அறிவுசார் குறைபாடுகள் தவிர அசாதாரண எண்ணங்கள், உணர்ச்சிகள், நடத்தை மற்றும் உறவுகள் தொடர்பு' எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
நாட்டின் பிற பகுதிகளுடன் ஒப்பிடுகையில், டாமன் மற்றும் டையூ (23.4 சதவீதம்), இமாச்சலப் பிரதேசம் (23.9 சதவீதம்) மற்றும் சிக்கிம் (31.9 சதவீதம்) போன்ற சிறிய பகுதிகளில் உள்ள மக்கள் மனநல பிரச்சினைக்களுக்காக அதிகம் செலவிடுகின்றனர். பெரிய மாநிலங்களில், மகாராஷ்டிரா (21.3 சதவீதம்) மற்றும் தெலுங்கானா (22.2 சதவீதம்) ஆகியவை முன்னிலையில் உள்ளன.
இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான மக்கள் கடுமையான மனநல நெருக்கடியை எதிர்கொள்கிறார்கள். ஆறில் ஒருவருக்கு மனச்சோர்வு, பதட்டம், இருமுனைக் கோளாறுகள் மற்றும் ஸ்கிசோஃப்ரினியா உள்ளிட்ட உடல்நலம் தொடர்பான கோளாறுகளில் ஏதேனும் ஒன்று உள்ளன என்று ஆய்வு கூறுகிறது. மனநல நெருக்கடியின் அறிகுறிகள் நபருக்கு நபர் வேறுபடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
“ஒட்டுமொத்தமாக, 20.7 சதவீத குடும்பங்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளன. நாட்டில், சுகாதாரச் செலவுகளைக் குறைப்பதற்காக, மனநலப் பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் நிர்வகிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது,” என்று கொச்சியில் உள்ள அமிர்தா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் துணை ஆசிரியர் டாக்டர் டென்னி ஜான் கூறினார்.
மனநோய்கள் மீதான சுகாதார செலவினங்களின் தாக்கத்தை குறைக்க நிதி இடர் பாதுகாப்பை வழங்குவதற்கான முக்கியமான தேவை இருப்பதாக ஐசிஎம்ஆர் ஆய்வறிக்கை கூறுகிறது. கொரோனாவில் தாக்கத்தில் பலருக்கு வேலையிழப்பு, தொழில் நஷ்டம் என பல்வேறு இன்னல்களுக்கு பொதுமக்கள் உள்ளாகினார் என்பது கவனத்தில் கொள்ள வேண்டியவையாகும்.
மேலும் காண்க:
Share your comments