இன்றைய காலகட்டத்தில், உடற்பயிற்சி மேற்கொள்ளும் இளைஞர்கள் உணவுகள் மூலம் கிடைக்கும் இயற்கை புரதச்சத்துகளை விட புரோட்டீன் பவுடர்கள் மற்றும் புரோட்டீன் ஷேக்குகள் மூலம் கிடைக்கும் புரதச்சத்துக்களையே விரும்புகின்றனர். ஏனென்றால், குறுகிய காலத்தில் கட்டுமஸ்தான உடலை பெற வேண்டுமென ஆசைபட்டு இதையெல்லாம் முயற்சி செய்கின்றனர். அதுமட்டுமல்லாமல், புரோட்டீன் பவுடர்களை பெரும் தொகை கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர். இது உடலுக்கு நல்லதா கெட்டதா என்பதை பற்றி பார்ப்போம்.
புரதச்சத்து (Proteins)
புரதச்சத்து என்பது 20-க்கும் மேற்பட்ட பொருட்களின் கூட்டு சேர்க்கை. இது உடல் தசைகளுக்கு வலு சேர்க்கிறது. செல்களின் தேய்மானத்தை குறைத்து புதுப்பிப்பதற்கும், காயம், புண் போன்றவற்றை ஆற்றுவதற்கும் உதவுகிறது. என்சைம், ஹார்மோன், வைட்டமின், ஹீமோகுளோபின் போன்றவை உற்பத்தியாக புரதம் தேவை. நோய் எதிர்ப்பு சக்தியை தருகிற இம்யூனோ குளோப்லின்களை (Immunoglobulin) தயாரிக்கவும் இது தேவை.
நமக்கு தினமும் சராசரியாக 50 கிராம் புரதம் அவசியம். இதை நாம் சாப்பிடும் உணவில் இருந்தே பெறலாம். சைவம் சாப்பிடுபவர்கள் பால், தயிர், பருப்பு, பயறு, காளான், எண்ணெய் வித்துகள், கொட்டைகள் வழியாகவும், அசைவம் சாப்பிடுபவர்கள் மீன், முட்டை, இறைச்சியை உட்கொள்வதன் வழியாகவும் புரதச் சத்தை பெறலாம்.
புரோட்டீன் பவுடர் (Protein Powder)
இயற்கையாக உற்பத்தியாகும் உணவை சாப்பிடும்போது, புரதச்சத்துடன் உடலுக்கு தேவையான நார்ச்சத்து, வைட்டமின், தாது, ஆன்ட்டி ஆக்ஸிடன்ட், போன்ற மற்ற சத்துகளும் கிடைத்துவிடும். இது உடல் ஆரோக்கியத்துக்கு இன்னும் வலு சேர்க்கும். ஆனால், புரோட்டீன் ஷேக் அல்லது பவுடரை உட்கொள்ளும்போது, அதிலுள்ள புரதம் மட்டுமே உடலில் சேரும். மற்ற சத்துகள் சேராது.
இதனால், மற்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமல்லாமல், புரோட்டீன் பவுடர்களை அதிகமாக உட்கொண்டால், சிறுநீரகத்தை பாதிக்கும். சிறுநீரகத்தில் கல் உருவாகும். ரத்தத்தில் , சர்க்கரை அளவு, கொழுப்பு அதிகரித்து, இதய நோய்கள் வர வழிவகுக்கும். அப்படியேயானலும், ஜிம்முக்கு செல்பவர்களுக்கு கூடுதல் புரதச்சத்து வேண்டுமானால், தினமும் இரண்டு முட்டைகளின் வெள்ளை கரு, பருப்பு குழம்பு அல்லது கூட்டு, அரை லிட்டர் பால், 200 கிராம் பயறு, 300 கிராம் கோழி இறைச்சி, நவதானியங்கள் கலந்த சத்துமாவு 200 கிராம் சாப்பிட்டு வந்தால், அவர்களுக்குத் தேவையான அளவு புரதம் கிடைத்துவிடும்.
ஜிம்முக்குப் போகிறவர்களுக்கு மற்றவர்களைவிடப் புரதச் சத்து கூடுதலாக தேவைதான். ஆனால், அதை முறையான ஆலோசனையுடன் அளவாக எடுத்துக் கொண்டால் நன்மையே.
மேலும் படிக்க
நரைமுடியை கருமையாக்கும் உருளை: எப்படி பயன்படுத்த வேண்டும்!
குங்குமப்பூ தண்ணீரை குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
Share your comments