நம் உடலில் மிக முக்கிய உறுப்பாக நுரையீரல் உள்ளது. இதயத்தைப்போல் நுரையீரலும் சரியாக இயங்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் ஒருவரின் வாழ்க்கை தரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. நமது சுவாசத்தின் மூலம் நுரையீரல் சுற்றுச்சூழலுடன் தொடர்பு கொள்கிறது. தினமும் ஏற்படும் தூசி, பாக்டீரியா மற்றும் காற்றின் மூலம் பரவும் பிற நச்சுகள் நமது நுரையீரலுக்குள் செல்கின்றன. நுரையீரல் இயற்கையாக இந்த அனைத்து நச்சுகளில் இருந்தும் நம்மைப் பாதுகாக்கிறது. நாம் நமது நுரையீரலை பாதுகாப்பது என்பது மிகவும் அவசியமானதாகும்.
நுரையீரல் பாதுகாப்பு
அதிக மாசு ஏற்படும் இடங்களில் முகக்கவசம் அணிந்துகொண்டு வேலை செய்வது, பொதுவாக நுரையீரல் (Lungs) சம்பந்தமான இன்ப்ளூயன்ஸா, நிமோகாக்கஸ் மற்றும் கோவிட்19 போன்ற நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க தடுப்பூசி போடுவது போன்றவையாகும். உங்கள் நுரையீரலைப் பாதுகாப்பதன் மூலம் அது உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
பல்வேறு நோய்கள்
புகைப்பிடித்தல் (Smoking) உடல் நலத்திற்கு கேடு விளைப்பதோடு, உங்கள் நுரையீரலையும் பெரிய அளவில் பாதிக்கும். சிகரெட்டில் இருக்கும் தார், கார்பன் மோனாக்சைடு போன்ற விஷங்கள் உங்கள் நுரையீரலை பாதிக்கும். புகை பிடித்தால் உங்களுக்கு கிடைக்கும் பரிசானது நீங்கள் இயற்கையாக சுவாசிப்பதை விட்டுவிட்டு கருவி மூலம் நீங்கள் சுவாசிப்பதற்கு உங்களை அழைத்துச் செல்லும்.
புகை பிடிப்பதால் புற்றுநோய், நுரையீரல் சம்பந்தமான நாள்பட்ட நோய்கள், மூச்சுக்குழாய் அழற்சி உள்ளிட்ட உயிரைக் கொல்லும் பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவை அனைத்தும் நுரையீரலை பாதிப்பதால் ஒருவரின் நடக்கும் மற்றும் பேசும் திறன் பாதிக்கப்படுகிறது. உடற்பயிற்சி (Excercise) செய்வதற்கான சகிப்புத் தன்மைக்கு இதயமும் அதை செய்வதற்கான திறனுக்கு நுரையீரலும் பொறுப்பேற்கின்றன.
இதை எளிமையாக கூற வேண்டுமென்றால், நீங்கள் எவ்வளவு தூரம், எவ்வளவு வேகமாக ஓட முடியும் என்பது உங்கள் இதயத்தைப் பொறுத்தும், எவ்வளவு நேரம் ஓட முடியும் என்பது உங்கள் நுரையீரலைப் பொறுத்தும் அமைகிறது. நாம் வயதாகும்போது அதற்கேற்ப நுரையீரலின் செயல்பாடு குறைகிறது. ஆனால் அதேசமயம் அது உங்கள் உடல் நிலை விகிதாச்சாரத்திற்கு ஏற்றவாறே இருக்கும்.
மருத்துவ பரிசோதனை
எனவே, ஒரே வயதுடைய ஒரு நபர் செய்யக்கூடிய ஒரு செயலை மற்றொருவர் செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் உடனே அவர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு அதற்கானசச முறையான சிகிச்சை பெறுவது மிகவும் கட்டாயம் ஆகும். இருமல், மூச்சுத் திணறல், நெஞ்சு வலி, மூச்சுத்திணறல், தும்மல், குறட்டை மற்றும் நெஞ்சில் சளி கட்டுதல் போன்றவை சுவாச நோய்களின் பொதுவான அறிகுறிகளாகும்.
இது சம்பந்தமாக கவனமாக இருங்கள். இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரைப் பார்க்க தயங்காதீர்கள். இந்த அறிகுறிகள் காய்ச்சல் போன்ற சில பொதுவான நோய்களாகக்கூட இருக்கலாம். இருப்பினும் காய்ச்சலாக இருந்தால் அது 7 நாட்களில் குணமாகிவிடும். 7 நாட்களில் இந்த அறிகுறிகள் சரியாகாமல் தொடர்ந்தால் உங்களுக்கு நுரையீரல் சம்பந்தமான நோய் உள்ளது என்று அர்த்தம்.
எப்போது மருத்துவ நிபுணர்களின் உதவியை நாடவேண்டும் என்பதை அறிந்து அதற்கேற்ப அவர்களின் உதவியை நீங்கள் பெற்றால் நீங்கள் ஆரோக்கியமாக வலிமையுடன் வாழலாம்.
நுரையீரலின் திறனை அறிந்துகொள்ள
உங்கள் நுரையீரலின் திறனை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் உங்கள் மூச்சை நிறுத்தி, சிறிது நேரம் இருங்கள். உங்கள் சுவாசத்தை 20 வினாடிகளுக்கு மேல் உங்களால் வைத்திருக்க முடிந்தால், உங்கள் நுரையீரல் 50 சதவீதத்திற்கும் அதிகமாக நன்றாக வேலை செய்கிறது என்று அர்த்தம். 40 வினாடிகளுக்கு மேல் இருக்க முடிந்தால் உங்கள் நுரையீரல் 75 சதவீதம் வேலை செய்கிறது என்றும் ஆரோக்கியமாக உள்ளது என்றும் அர்த்தம். உங்கள் நுரையீரலின் செயல்பாட்டை அறிந்து கொள்ள மருத்துவ ஆய்வகங்களில் நீங்கள் எளிமையான நுரையீரல் பரிசோதனை செய்து கொள்ளலாம். எனவே உடற்பயிற்சி செய்து உங்களை என்றும் இளமையாக வைத்திருங்கள்.
மேலும் படிக்க
இன்றைய சூழலில் நம் உடல்நலம் காக்க தூதுவளை தான் தேவை!
பாதங்களை பாதுகாக்கும் பயனுள்ள பயிற்சிகள்: தெரிந்து கொள்வோம்!
Share your comments