உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் வேர்க்கடலையை விரும்பாதவர் எவரும் இல்லை. அந்த அளவிற்கு வேர்க்கடலையில் பல ஆரோக்கியப் பலன்கள் உள்ளது. வேர்க்கடலையை பலரும் பல விதங்களில் எடுத்துக் கொள்கிறார்கள். சிலர் வேகவைத்து, சிலர் வறுத்து மற்றும் சிலர் பொரித்து என எடுத்துக் கொள்கின்றனர். இருப்பினும், வேர்க்கடலையின் முழுமையான ஆரோக்கியப் நன்மைகளைப் பெறுவதற்கு அதனை ஊறவைத்து அதிகாலையில் சாப்பிடுவது தான் மிகவும் சிறந்தது.
வேர்க்கடலையில் உள்ள சத்துக்கள்
வேர்க்கடலையில் புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் பி வைட்டமின்கள் மற்றும் பிற ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களும் வேர்க்கடலையில் உள்ளது. இதுதவிர வேர்க்கடலையில் ஐசோஃப்ளேவோன்ஸ், பி-கூமரிக் அமிலம், ரெஸ்வெராட்ரோல், பைடிக் அமிலம் மற்றும் பைட்டோஸ்டெரால்கள் போன்ற நன்மை தரும் தாவர கலவைகளும் உள்ளது.
வேர்க்கடலையின் ஆரோக்கிய நன்மைகள்
- பித்தப்பைக் கல்லைத் தடுக்க உதவுகிறது.
- மிகவும் நிறைவானது மற்றும் உடல் எடை குறைப்புக்கு உதவுகிறது.
- தோல் தொடர்பான பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.
- இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்கவும் உதவுகிறது.
- செரிமானம் மற்றும் மூளையின் செயல்பாட்டிற்கு மிகவும் நல்லது.
உடல் எடை குறைப்புக்கு வேர்க்கடலை எப்படி உதவும்?
வேர்க்கடலை உடல் எடையை குறைக்க அல்லது உடல் எடையைப் பராமரிக்க உதவுகிறது. இதில் புரதம் மற்றும் கரையாத உணவு நார்ச்சத்து போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது. ஆகவே, வேர்க்கடலை எடை குறைப்புக்கு ஏற்ற உணவாக அமைகின்றன. வேர்க்கடலையில் கொழுப்பு மற்றும் கலோரிகள் அதிகமாக இருந்தாலும், உடல் எடை அதிகரிக்க பங்களிப்பதாக தெரியவில்லை என ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. இருப்பினும், எடை குறைப்புக்கு வேர்க்கடலை சிறந்த உணவு தான் என்பதற்கு, எந்த உறுதியான ஆதாரமும் இல்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
எடுத்துக்காட்டாக, ஆரோக்கியமாக உள்ள பெண்களை உள்ளடக்கிய ஒரு சிறிய மற்றும் 6 மாத ஆய்வில், குறைந்த கொழுப்புள்ள உணவில் இருக்கும் மற்ற கொழுப்பு மூலங்கள், வேர்க்கடலையுடன் மாற்றப்பட்ட போது, அவர்கள் கிட்டத்தட்ட 3 கிலோ எடையை இழந்தனர். இதேபோன்ற மற்றொரு ஆய்வில், ஆரோக்கியமான பெரியவர்கள், கிட்டத்தட்ட 8 வாரங்களுக்கு தினந்தோறும் 89 கிராம் வேர்க்கடலையை உணவில் சேர்த்துக் கொண்டாலும், எதிர்பார்த்த அளவிற்கு உடல் எடை இல்லை எனவும் கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த ஆய்வு முடிவுகள் அனைத்தும் கவனிக்கத்தக்கவை.
ஊறவைத்த வேர்க்கடலையை எப்போது சாப்பிட வேண்டும்?
காலை உணவுக்கு முன்பாக ஊறவைத்த வேர்க்கடலையை உட்கொள்ள வேண்டும். வேர்க்கடலை பெரும்பாலும் எடை குறைப்புடன் தொடர்புடையது. ஏனெனில் அவை திருப்தியை அதிகரிக்கிறது. வேர்க்கடலையில் கலோரிகள் அதிகமாக இருப்பதால், அதிகளவில் சாப்பிடக்கூடாது. ஆனால் சரிவிகித உணவின் ஒரு பகுதியாக அவற்றை மிதமாக சாப்பிடுவது, உடல் எடையை குறைக்கவும் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
மேலும் படிக்க
அகத்திக் கீரையுடன் பசுநெய் கலந்து சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
Share your comments