கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வரும் நோயாளிகளை மியூகோர்மைகோசிஸ் என்று அழைக்கப்படும் கருப்பு பூஞ்சை நோய் தாக்கிவருகிறது. இதற்கான அறிகுறிகள் என்ன, இதிலிருந்து நம்மை காப்பது எப்படி என்பதை தெரிந்துக்கொள்வோம்.
மியூகோர்மைகோசிஸ் எனப்படும் பூஞ்சை தொற்று
கொரோனா தொற்றின் 2-வது அலை இந்தியாவை தினமும் அச்சுறுத்தி வரும் வேலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தவர்களுக்கும், குணமடைந்து வருவோர்களுக்கும் மியூகோர்மைகோசிஸ் (Mucormycosis) என்று அழைக்கப்படும் கருப்பு பூஞ்சை (Black Fungus) தொற்று நோய் ஏற்படுவது தெரியவந்துள்ளது.
மகாராஷ்டிராவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மியூகோர்மைகோசிஸ் பாதிப்பு இருப்பதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நோய்க்கு இதுவரை 10 பேர் பலியாகியுள்ளதாகவும், பல நோயாளிகள் பார்வை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இதைப் பற்றி நாம் கட்டாயம் தெரிந்து கொண்டு, அதிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
மியூகோர்மைகோசிஸ் பாதிப்புக்கு என்ன காரணம்?
மியூகோர்மைகோசிஸ் அல்லது கருப்பு பூஞ்சை பாதிப்பு, பூஞ்சை தொற்று (Fungal complications) காரணமாக ஏற்படுகிறது. சுற்றுச்சூழலில் பூஞ்சை வித்துக்களுடன் தொடர்பு ஏற்படுபவர்களுக்கு இந்த மியூகோர்மைகோசிஸ் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பூஞ்சை தொற்று தோலில் உள்ள காயங்கள் மூலம் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்தும்.
கொவிட் -19 பாதிப்பிலிருந்து குணமடைபவர்கள் அல்லது குணமடைந்தவர்களிடம் இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருப்பு புஞ்சை பாதிப்புக்கு உள்ளாகுபவர்கள் யார்?
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்ட ஆலோசனைப்படி, கொவிட்-19 நோயாளிகளில் கீழ்கண்ட நிலையில் இருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு மியூகோர்மைகோசிஸ் பாதிப்பு அபாயம் அதிகம் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
-
கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயாளிகள்
-
ஸ்டீராய்டு மருந்து பயன்பாடு காரணமாக எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள்
-
நீண்ட நாட்களாக ஐசியு-ல் இருந்தவர்கள்
-
இணை நோய் உள்ளவர்கள்
-
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துக்கொண்டவர்கள்
-
புற்றுநோய்
-
தீவிர பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர்கள்
நோய்க்கான அறிகுறிகள் என்ன?
நெற்றி, மூக்கு, கன்னத்து எலும்புகள், கண்கள் மற்றும் பற்களுக்கு இடையில் அமைந்துள்ள காற்றுப் பைகளில் தோல் தொற்றுநோயாக மியூகோர்மைகோசிஸ் வெளிப்படத் தொடங்கும்
பின்னர் அது கண்கள், நுரையீரல் வரை பரவி மூளைக்கு கூட பரவுகிறது. இது மூக்கின் மீது கறுப்பு அல்லது நிறமாற்றம், மங்கலான அல்லது இரட்டை பார்வை, மார்பு வலி, சுவாசக் கஷ்டங்கள் மற்றும் இரத்த இருமலுக்கு வழிவகுக்கிறது.
நோய் தடுப்பு முறை
கொரோனா நோயாளிகளுக்கு, நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டும் அல்லது அடக்கும் இம்யூனோமோடூலேட்டிங் மருந்துகளை நிறுத்துமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தனது வழிகாட்டுதல்களில் அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி, முறையான சுகாதாரமான சூழலை பராமரிப்பதும், இந்த பாதிப்பை தவிர்க்க உதவும். ஆக்ஸிஜன் சிகிச்சை எடுக்கும் நோயாளிகளுக்கு, ஹூயுமியூடிபயர் சாதனத்தில் தண்ணீர் சுத்தமாக இருப்பதை உறுதி செய்யவேண்டும், சீரான இடைவெளியில் தண்ணீர் மாற்றப்பட வேண்டும்.
நோயாளிகள், கை சுத்தம், உடல் சுத்தத்தை பராமரிக்க வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுரை வழங்கியுள்ளது.
மேலும் படிக்க...
நாள்தோறும் சிறிது வேர்க்கடலை- இறப்பை ஒத்திப்போட்டு, உயிர்காக்கும் மருந்து!
Share your comments