ஆரோக்கியமான உடலுக்கு தேவையான சத்துக்களில் புரோட்டீன் எனும் புரதச்சத்து மிகவும் இன்றியமையாதது. இது உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்துக்கும் முக்கியமான பங்கு வகிக்கிறது. ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் வீதம் புரதச்சத்து உடலுக்கு தேவைப்படுகிறது. ஒருவரின் சராசரி எடை 55 கிலோ என்றால் அவர் தினமும் உணவில் 55 கிராம் வரை புரதம் சேர்க்கலாம். ஆனால் காய்கறிகள் மற்றும் மாவுச்சத்து அடங்கிய உணவுகளே அதிகமாக எடுப்பதால் ஒருசிலருக்கு முழுமையாக புரதச்சத்து சென்றடைவதில்லை. எனவே, புரதச்சத்து குறையும் போது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
புரதச்சத்து குறைபாடு (Protein Loss)
புரதச்சத்து குறைப்பாட்டால் கல்லீரல் பிரச்னைகள் உண்டாகின்றன. இதனால் கல்லீரல் செல்களில் கொழுப்பு சேர்கிறது. இது கல்லீரல் வீக்கம் அல்லது கல்லீரல் செயலிழப்பு போன்ற தீவிர பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. உடல் எடை அதிகமாக உள்ளவர்களும், அதிகமாக மது குடிப்பவர்களுக்கும் கல்லீரல் பிரச்னை அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. தோல், கூந்தல் மற்றும் நகங்களும் புரதச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றன. கூந்தலில் உதிர்வு ஏற்படுகிறது. புரதம் இல்லாததால், தோல் வெடிப்புகள் ஏற்படலாம்; நகங்களும் பலவீனமடைகின்றன. குழந்தைகளுக்கு தோலில் வறட்சியும், பிளவு ஏற்படக்கூடும்.
பசியின்மை என்பது புரதக்குறைபாட்டின் முக்கிய அம்சமாக இருந்தாலும், துவக்க அறிகுறி அதற்கு எதிர்நிலையில் இருக்கும். உடலில் புரதச்சத்து குறைந்ததுமே, அதனை அடைவதற்காக ஹார்மோன்கள் தூண்டப்பட்டு, பசி உணர்வு உண்டாகி அடிக்கடி எதையாவது சாப்பிட்டுக் கொண்டே இருக்கத் தோன்றும்.
புரதச்சத்து குறைபாடு, உடலின் நோய் எதிர்ப்புத் திறனை பாதிக்கிறது. இதனால் உடலில் தொற்று பாதிப்பு உண்டாவது அதிகரிக்கிறது.
உணவில் புரதம் குறைவதால் தசைகள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. எலும்பு முறிவுக்கான ஆபத்துக்கும் வழிவகுக்கிறது. எலும்பை வலுப்படுத்தும் புரதம் இல்லாததால் அவை பலவீனமடைந்து, விரைவில் எலும்பு முறிவு ஏற்படும் நிலையை அதிகரிக்கிறது.
மேலும், நோய் எதிர்ப்புச்சக்தி குறைதல், வீக்கம் மற்றும் வீங்கிய சருமத்துக்கு வழிவகுக்கும் எடிமா, உற்சாகமின்மை, அடிக்கடி சோர்வடைதல், உடலில் ரத்த சர்க்கரை அளவில் மாறுபாடு உண்டாதல், எலும்பு மற்றும் இணைப்பு மூட்டுகளில் வலி, தசை இழப்பு உட்பட பல பிரச்னைகளும் உண்டாகின்றன. எனவே ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு உடல் நலத்தை காக்க முயற்சிப்போம்.
மேலும் படிக்க
Share your comments