மனஅழுத்தம் என்பது வயது வித்தியாசம் இல்லாமல் ஆண் மற்றும் பெண் என இரு பாலினத்திற்கு பொருந்தக்கூடிய ஒரே அளவிலானவை கிடையாது. இன்றைய காலக்கட்டத்தில், வேலை ஒதுக்கப்பட்ட பின், தங்களின் மூத்த பணியாளர்கள் மற்றும் மேலாளர்களை திருப்திப்படுத்தும் முயற்சியில் பலருக்கும் மன அழுத்தம் ஏற்படுகிறது. நாம் நம் இலக்கை அடைய முடியாத நேரத்தில் தான் பெரும்பாலும் மன அழுத்தம் ஏற்படுகிறது.
குறைவான அளவில் மன அழுத்தம் அல்லது பதட்டம் சில நேரங்களில் பயனுள்ளதாக அமைகிறது. உதாரணமாக, ஒரு திட்டத்தை செயல்படுத்தும் போது ஏற்படும் அழுத்தம் காரணமாக நாம் சிறப்பாக கவனம் செலுத்தி அதிக ஆற்றலுடன் அந்த வேலையை செய்கிறோம். இரண்டு வகையான அழுத்தங்கள் உள்ளன: நேர் அழுத்தம் (eustress- “positive stress”) மற்றும் சவால்கள் அல்லது அதிக பளு என பொருள்படும் எதிர்மறை அழுத்தம் (distress – “negative stress”). மன அழுத்தம் அதிகமாகும் போதும், சரியாக நிர்வகிக்கப்படாமல் இருக்கும் போதும் எதிர்மறை விளைவுகள் ஏற்படுகின்றன.
மன அழுத்தத்தை ஏற்படுத்தும் முக்கிய காரணிகள்
- வாழ்வியல் அழுத்தம்
தன்னை ஏதாவது உடல்ரீதியாக தாக்கும் என ஒரு நபர் பயந்தால், உடல் உடனடியாக அதிகபட்ச ஆற்றலை தந்து அச்சூழ்நிலையில் தன்னைக் காத்துக்கொள்ள அல்லது தப்பிச்செல்ல உதவுகிறது.
- உள்நிலை அழுத்தம்
இதனால் மக்கள் தாங்களாகவே அழுத்தத்தை உண்டாக்கி கொள்கிறார்கள். நம்மால் கட்டுப்படுத்த முடியாத ஒன்றை பற்றி கவலைகளை வளர்த்துக் கொள்ளும் போது இது ஏற்படுகிறது. சிலர் இவ்வகை வாழ்நிலைக்கு பழகிவிடுகிறார்கள். அவர்கள் மேலும் அழுத்தமான சூழ்நிலைகளை விரும்பி ஏற்கிறார்கள்.
- சுற்றுச்சூழல் அழுத்தம்
சத்தம், கூட்டம், வேலை அல்லது குடும்ப பளு போன்ற காரணிகளால் ஏற்படும் அழுத்தம். அழுத்தம் ஏற்படுத்தும் சூழல் காரணிகளை அறிந்து அவற்றை தவிர்ப்பதன் மூலம் அழுத்த அளவை குறைக்கலாம்.
- களைப்பு மற்றும் அதிக வேலைப்பளு
அதிக நாட்களின் பளு காரணமாக ஏற்படும் இவ்வகை அழுத்தத்தால் அதிக உடல் பாதிப்புகள் ஏற்படும். வீடு அல்லது பள்ளியில் அதிக அல்லது கடினமான வேலையை செய்வதால் இது ஏற்படுகிறது. ஓய்வு மற்றும் பொழுதுபோக்குக்கு நேரத்தை சரியாக திட்டமிட்டு செயல்படாததாலும் இது ஏற்படும். பலர் இதனை கட்டுப்படுத்துவது சிரமம் என்று நினைப்பதால், இதுவே மிக கடுமையான அழுத்தமாக கருதப்படுகிறது.
மன அழுத்தம் உண்டாக்கும் காரணிகளை குறுகிய (acute) மற்றும் நீண்ட கால (Chronic) பாதிப்புக்களை ஏற்படுத்தும் வகைகளாவும் வகைப்படுத்தலாம்
- குறுகியகால காரணங்களால் ஏற்படும், உதாரணமாக ‘சண்டையிடு’ அல்லது ‘ஓடிவிடு’ வகை விளைவுகள், குறுகிய கால அழுத்தமாக கருதப்படுகிறது. இவை, ஆபத்துக்கள் அல்லது அழுத்தம் ஏற்படுத்தும் காரணிகள் தாக்கும் போது மூளையின் பழைமையான பகுதி மற்றும் மூளையில் உள்ள சில இரசாயனங்களால் ஏற்படும் துரிதமான விளைவுகளாகும்.
- சண்டையை அல்லது ஓட்டத்தைத் தூண்டும் காரணிகள் முடிந்த பிறகும் நடைமுறையில் இருக்கும் அல்லது தொடர்ந்த காரணிகள் நீண்டகால பாதிப்புக்களாக கருதப்படும். தொடர்ந்த அழுத்தம் ஏற்படுத்தும் வேலை, உறவுமுறை சிக்கல்கள், தனிமை, நிதிநிலை தொடர்பானக் கவலைகள் ஆகியவை இவற்றுள் சில.
மன அழுத்தத்தை கண்டறிய உதவும் முக்கிய அறிகுறிகள்
படபடப்பு
மன அழுத்தம் இருந்தால், பதட்டம் ஏற்படும். இவ்வாறு பதட்டத்தின் போது இதய துடிப்பானது அளவுக்கு அதிகமாக இருப்பதால், உயர் இரத்த அழுத்தம் ஏற்படும். ஆகவே அடிக்கடி பதட்டம் ஏற்பட்டால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
தலைவலி
பொதுவாக டென்சன் ஏற்பட்டாலே தலைவலி ஏற்படும் என்பது தெரிந்த ஒன்றே. ஆனால் அதிகமான அளவில் மன அழுத்தமானது இருந்தால், மூளைக்கு செல்லும் இரத்தக்குழாய்களிலும் அழுத்தம் மற்றும் துடிப்பு அதிகரிக்கும். இதனால் கடுமையான ஒற்றை தலைவலிக்கு ஆளாகலாம்.
கூந்தல் உதிர்தல்
நவீன உலகில், கூந்தல் உதிர்தலுக்கு முக்கிய காரணம் மன அழுத்தம் தான். சிலருக்கு இளமையிலேயே வழுக்கை ஏற்படுவதற்கு காரணமும் மனஅழுத்தம் தான். எனவே அதிக வேலைப் பளுவினால் டென்சன் மற்றும் மன அழுத்தம் இருந்தால், உடனே அதனை சரிசெய்ய பாட்டு கேட்பது, உடற்பயிற்சி செய்வது, விளையாடுவது என்பனவற்றில் ஈடுபட வேண்டும்.
தற்காலிக ஞாபக மறதி
மன அழுத்தம் இருந்தால், அடிக்கடி மறதி ஏற்படும். ஏனெனில் வாழ்க்கையானது ஒரே அழுத்தத்தில் இருக்கும் போது, எதையும் நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. இவ்வாறான மறதி ஏற்பட்டால், உடனே மனதை அமைதிப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.
அதிகபடியான வியர்வை
எப்போதுமே வியர்த்துக் கொண்டிருந்தாலும், அது மன அழுத்தம் அதிகமாக உள்ளது என்பதற்கான அறிகுறி. ஆகவே உடனே மன அழுத்தத்தை குறைப்பதற்கான முறைகளை பின்பற்ற வேண்டும்.
நரைமுடி
பொதுவாக நரைமுடியானது பரம்பரை வழியாக அல்லது அதிகப்படியான மன அழுத்தத்தினால் தான் ஏற்படும். அதிலும் தற்போது இளம் வயதிலேயே நரைமுடியானது வந்துவிடுகிறது. எனவே இவ்வாறு இளம் வயதிலேயே நரைமுடியானது ஏற்பட்டால், உடனே அதனை சரிசெய்ய முயற்சிக்க வேண்டும்.
தொடர்ந்து எரிச்சல்
எப்போதும், எதற்கெடுத்தாலும் எரிச்சலானது ஏற்பட்டால், அது நிச்சயம் மன அழுத்தத்திற்கான அறிகுறியே. சில சமயங்களில் எரிச்சல் அல்லது கோபம் வந்தால் பிரச்சனையில்லை. ஆனால் அதுவே எப்போதும் இருந்தால், அது பெரும் பிரச்சனை.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவு
மாதம் மாதம் ஏதாவது ஒரு காரணத்திற்கு உடல் நிலை சரியில்லாமல் போகிறதென்றால், அதற்கு மன அழுத்தத்தினால், உடல் நோய் எதிர்ப்பு சக்தியானது குறைவாக உள்ளது என்பதற்கான அறிகுறியாகும்.
முதுமை
மன அழுத்தமானது அதிகம் இருந்தால், சீக்கிரமாகவே முதுமைத் தோற்றமானது காணப்படும். மேலும் மன அழுத்தம் அளவுக்கு அதிகமாக இருந்தால், சருமத்தில் சுருக்கங்களை ஏற்படுவதோடு, ஆங்காங்கு கரும்புள்ளிகளையும் ஏற்படுத்தும்.
மன அழுத்தம் தொடர்பான சில நோய்கள்
- வயிற்று நோய்கள்
- போதைக்கு அடிமையாதல்
- ஆஸ்த்துமா
- களைப்பு
- படபடப்பு, தலைவலி
- இரத்த அழுத்தம்.
- தூக்கமின்மை.
- வயிற்று, ஜீரண கோளாறுகள்.
- இருதய நோய்கள்.
- மனநிலை பாதிப்பு.
- சொரியாசிஸ், படை, அரிப்பு, உணர்ச்சியற்ற தோல் போன்ற தோல் வியாதிகள்.
எதிர்மறையான சமாளிப்பு நடவடிக்கைகள்
இவை தற்காலிகமாக மன அழுத்தத்தை குறைக்க உதவலாம். ஆனால், நீண்டகாலப் போக்கில் இவை அதிக அபாயமானவை:
- புகை பிடித்தல்
- அதிகமாக மது அருந்துதல்
- அதிகமாக அல்லது குறைவாக உண்பது
- தொலைக்காட்சி அல்லது கணினி முன் மணிக்கணக்கில் அமர்ந்திருப்பது
- நண்பர்கள், உறவினர்களுடன் பழகுவதை நிறுத்திவிடுவது
- அழுத்தத்தை குறைக்கும் மாத்திரைகள் அல்லது மருந்துகளை உண்பது
- அதிகமாக தூங்குவது
- பிறரை தூற்றுவது
- பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அதிகமாக உழைப்பது
- உங்கள் அழுத்தத்தை பிறர் மீது கோபமாக வெளிக்காட்டுவது (திட்டுதல், கத்துதல், வன்முறை)
- மன அழுத்தத்தை சமாளிக்கும் ஆரோக்கியமான வழிமுறைகளும் உள்ளன, ஆனால் அவை மாற்றங்கள் மூலம் மட்டுமே சாத்தியம். மன அழுத்தத்தை ஏற்படுத்தும் சூழ்நிலை அல்லது அதனால் ஏற்படும் விளைவுகள் ஆகிய ஏதாவது ஒன்றை நாம் மாற்ற வேண்டும். இதைப்பற்றி ஆழமாக சிந்தியுங்கள், பிறருடன் ஆலோசனை செய்யுங்கள். காரணிகள் அல்லது நபர்களை அறிந்து அவற்றை குறைக்கும் அல்லது நீக்கும் வழிகளை கடைபிடியுங்கள்.
- மன அழுத்த வகைகளை அறிந்து, அவற்றை உண்டாக்கும் காரணிகளையும் அறியுங்கள். நீங்கள் எதை கட்டுப்படுத்த விரும்புகிறீர்கள் என்பதை அறிவது மிகவும் முக்கியம்.
Share your comments