தற்போதைய காலக்கட்டத்தில் உடல் பருமன் என்பது மிக பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. அதிலும் இந்த கொரோனா காலக்கட்டத்தில் பெரும்பாலும் வீடுகளிலேயே இருப்பதால், பலரின் உடல் எடை அதிகரித்திருக்க அதிகம் வாய்ப்பு உண்டு.
முறையற்ற உணவு, முறையில்லா தூக்கம், மன அழுத்தம், போன்ற பல்வேறு காராணங்கள் உடல் எடை கூடுவதற்கு காரணமாக இருக்கலாம் ஆனால், நாம் நம் உடல் மீது காட்டும் அக்கறை மூலமே உடல் பருமன் போன்ற பிரச்சனைகளில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள முடியும்.
இத்தகைய சூழ்நிலையில், கொழுப்பை வேகமாக கரைக்க உதவும் சில எளிய யோகாசன முறைகளை நாம் பின்பற்றினால் போதும் நல்ல ஆரோக்கியமான உடலை நாம் பெற முடியும். இதற்கு அதிக நேரம் தேவைப்படுவது கிடையாது காலையில் தினமும் அரை மணி அல்லது ஒரு மணி நேரம் செலவழித்தால் போதுமானது.
புஜங்காசனம் - Bhujangasana (Cobra pose)
இந்த ஆசனத்தை செய்யும் போது, வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகள் வலிமையடைகிறது, மேலும் வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்களும் கரைகிறது. இந்த ஆசனத்தினால் முதுகு, அடி வயிறு மற்றும் உடலின் மேல் பகுதியும் வலிமையடையும். இந்த ஆசனம் தண்டுவடத்தையும் வலிமையாக்கும்.
செய்யும் முறை
தரையில் குப்புற படுக்கவும். கைகளை தரையில் ஊன்றி தலையை மட்டும் உயர்த்தவும். வயிற்று பகுதியை தூக்க கூடாது. இந்நிலையில் 15 முதல் 30 நொடிகள் இருக்க வேண்டும். பின் மூச்சை வெளிவிட்டவாறே பழைய நிலைக்கு திரும்பவும். இப்படி ஒரு நாளைக்கு 5 முறை செய்ய வேண்டும்.
தனுராசனம் - Dhanurasana (Bow pose)
தனுர் என்றால் வில் என்று அர்த்தம். வில்லைப் போல் உடலை வளைத்து செய்வதால், இந்த ஆசனத்தின் பெயர் தனுராசனம் அழைக்கப்படுகிறது. இந்த ஆசனத்தின் மூலம் அடிவயிற்று தசைகள் நல்ல வலிமை பெறும். மேலும் இந்த ஆசனம் செய்வதால் வயிற்றுக் கொழுப்புக்கள் மற்றும் தொடையில் உள்ள கொழுப்புக்கள் கரைய உதவும், மேலும் செரிமான மண்டலம் நன்கு செயல்பட்டு, மலச்சிக்கல் பிரச்சனை அகலும்.
செய்யும் முறை
முதலில் தரை விரிப்பின் மேல் குப்புறப்படுக்கவும். பின் தலையை மேலே தூக்கி தாடையை தரைவிரிப்பின் மேல் வைக்கவும். இருகால்களையும் மடக்கி வலது கைவிரல்களால் வலது கணுக்காலையும், இடது கை விரல்களால் இடது கணுக்காலையும் பிடித்துக் கொள்ளவேண்டும். இந்த நிலையில் சுமார் 2 முதல் 3 முறை ஆழமாகவும் பொருமையாகவும் மூச்சை இழுத்து விடவும்.
மூச்சை நிதானமாக வெளியேவிட்டு மடக்கிய கால்களை அப்படியே மேலே தூக்க வேண்டும். அப்படி தூக்கும்போது தலையிலிருந்து மார்புவரை உள்ள உடல் பகுதியையும் மேலே தூக்க வேண்டும். வயிற்றுப் பகுதி மட்டும் தரை விரிப்பின் மேல் பதிந்திருக்க வேண்டும். கண்கள் மேல் பார்த்தவாறு இருக்கவேண்டும். இந்த ஆசன நிலையில் 30 முதல் 60 வினாடி வரை இருக்கவேண்டும். பிறகு மூச்சை வெளியே விட்டு வந்து அதிலிருந்து ஓய்வு நிலைக்கு வரவேண்டும். இந்த ஆசனத்தை 2 முதல் 3 முறை பயிற்சி செய்யலாம்.
கும்பகாசனம் - Kumbhakasana (The plank)
தொப்பையை குறைப்பதற்கு இந்த ஆசனம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் தசைகளுக்கு அதிக வலிமையை தருகிறது. அத்துடன் வயிற்றில் உள்ள தசைகளும் உறுதி பெற இந்த ஆசனம் உதவி செய்கிறது.
செய்யும் முறை
இந்த ஆசனத்திற்கு முதலில் தரையில் குப்புறப்படுத்து, பின் புஷ்-அப் நிலையில் 15 முதல் 30 நிமிடங்கள் மூச்சை உள்ளிழுத்தவாறு இருக்க வேண்டும். பின் மூச்சை வெளிவிட்டுக் கொண்டே சாதாரண நிலைக்கு திரும்பவும். இப்படி 5 முறை செய்ய வேண்டும்.
உங்களுக்கு முதுகு அல்லது தோள்பட்டையில் காயம் இருந்தாலோ, அல்லது உயர் இரத்த அழுத்தம் இருந்தால், இந்த ஆசனத்தைச் செய்வதை தவிருங்கள்.
இந்த ஆசனத்தின் போது தலை முதல் குதிங்கால் வரை உடல் ஒரே நேர் கோட்டில் இருப்பது போல் பார்த்துக் கொள்வது அவசியம். கால் விரல்களை நன்கு தரையில் ஊன்றி கொள்ளவேண்டும். பின்பு சுவாசத்தை உள்ளடக்கித் தலையை உயர்த்தி நேராகப் பார்க்கவும். இந்த நிலையில் 15 நொடிகள் இருக்கவும். சுவாசத்தை மெதுவாக வெளியேற்றி ஆரம்ப நிலைக்கு வரவேண்டும் இதனை 5 முதல் 7 முறைகள் இப்பயிற்சியை செய்யலாம்.
Related link :
மனஅழுத்தத்தை குறைக்கும் பத்மாசனம்!!
நாகாசனம் - Naukasana (Boat pose)
இந்த யோகாசனம் தட்டையான வயிற்றைப் பெற உதவும், அதுமட்டுமில்லாமல் இடுப்பு பகுதியைச் சுற்றியுள்ள கொழுப்புக்களைக் கரைக்கவும் உதவு செய்கிறது. இந்த ஆசனத்தினால் முதுகு மற்றும் கால்களின் தசைகள் வலிமை பெறுகிறது.
செய்யும் முறை
இந்த ஆசனம் செய்வதற்கு முதலில் தரையில் படுத்துக்கொள்ளவேண்டும், பின் மூச்சை உள்ளிழுத்தவாறு மேல் உடலையும், கால்களையும் உயர்த்த வேண்டும். முடிந்த வரை 45 டிகிரி கோணத்தில் உடலைக் கொண்டு வர முயற்சி செய்யுங்கள். இந்நிலையில் 15 நொடிகள் இருக்கவேண்டும், பின் மூச்சை வெளியே விட்டவாறு ஓய்வு நிலைக்கு வரவேண்டும்
மேற்கூறிய இந்த ஆசனங்களை குறிப்பிட்ட இடைவெளிவிட்டு சிறிது சிறிதாக செய்துவந்தால் உடல் எடையை சீராக பராமரிக்கலாம். நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடனும் செயல்படலாம்.
மேலும் சில ஆசனங்கள் குறித்து அடுத்தடுத்த சில பகுதிகளில் பார்க்கலாம்...!
மேலும் படிக்க
நோய் நொடி தீர்க்கும் அற்புத மூலிகைச் செடிகளும், மருத்துவ குணங்களும்!
சிக்கன் பிரியர்களா நீங்கள்..? உங்களுக்காக வருகிறது ஆர்கானிக் சிக்கன்!
Share your comments