பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனில் (British Journal of Nutrition) சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆய்வில் கர்ப்பிணி பெண்கள் தீவிர பதப்படுத்தப்பட்ட உணவை உட்கொள்வது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் கெடுதலை உண்டாக்கும் என கண்டறிந்துள்ளனர்.
தாய்மார்களின் உணவு உட்கொள்ளும் முறைகள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு அதனால் ஏற்படும் தாக்கம் குறித்து பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷன் மேற்கொண்ட ஆராய்ச்சியின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
கர்ப்ப காலத்தில் தீவிர பதப்படுத்தப்பட்ட உணவை உட்கொள்வது குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கலாம் என கண்டறியப்பட்டுள்ள இந்த ஆய்வின் படி தாய்மார்கள் தீவிர பதப்படுத்தப்பட்ட உணவை (UPF) உட்கொள்ளுவதால், குழந்தைகளின் தலை சுற்றளவு மற்றும் தொடை நீளம் அதிகமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
நாம் பெரும்பான்மையாக உட்கொள்ளும் தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகள் சிலவற்றின் பட்டியல்: ஐஸ்கீரிம், கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்கள், சிப்ஸ், உடனடி உணவுகள் (fast foods), ஜின்,ரம், விஸ்கி போன்ற மதுபான வகைகள்.
பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷன் இந்த ஆய்விற்காக பிரேசிலில் 417 தாய்மார்களை தேர்ந்தெடுத்தது. அவர்கள் உணவு உட்கொள்ளும் முறைகள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு அதன் தாக்கம் குறித்த அனைத்து வகையான ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்த 417 தாய்மார்களில் கிட்டத்தட்ட பாதி தாய்மார்கள் முதல் முறையாக கர்ப்பமுற்ற பெண்மணிகள். அவர்களின் சராசரி வயது 24.7 ஆண்டுகள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
" (UPF- ultra-processed food) தீவிர பதப்படுத்தப்பட்ட உணவானது கர்ப்பத்தின் பிற்பகுதியில் கரு வளர்ச்சியின் எலும்புக் கூறுகளுடன் எதிர்மறையாக தொடர்புடையது என தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில் கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்க முறையினை கடைப்பிடிப்பதன் மூலம் குழந்தையின் உடல் அமைப்பு சிறப்பாக வளர்ச்சியுறும்” என்றும் ஆய்வின் முடிவு கூறுகிறது.
இந்த அறிக்கை இதுவரை மருத்துவ உலகில் அதிகம் ஆய்வு செய்யப்படாத பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மூத்த குழந்தை மருத்துவர் டாக்டர் அருண் குப்தா கூறியுள்ளார். குப்தா பொது நலனுக்கான ஊட்டச்சத்து ஆலோசனையின் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.
"பெரும்பாலான ஆய்வுகள் வளர்ச்சியடைந்த குழந்தைகளின் போக்கினை பற்றி தான் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆய்வானது கர்ப்ப காலத்தில் தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களினை தினசரி நுகர்வாக எடுத்துக்கொண்டால் அவை எதிர்மறையான தாக்கத்தை உண்டு பண்ணும் என காட்டுகிறது," என்று குப்தா கூறினார்.
மேலும் " கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவினை உட்கொள்வது தான் கரு சிறப்பாக உருப்பெற வலுச்சேர்க்கும். எனவே குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு கர்ப்ப காலத்தில் தீவிரப்பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது தான் தீர்வு” எனவும் தெரிவித்துள்ளார்.
தீவிர பதப்படுத்தப்பட்ட உணவினை உட்கொள்வது சாதாரண மனிதர்களுக்கே அதிக எடை, நீரிழிவு, புற்றுநோய்கள் மற்றும் இதய பிரச்சினைகளையும் ஏற்படுத்தும் என பல்வேறு ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
Share your comments