1. வாழ்வும் நலமும்

பாரம்பரியம் மிக்க நமது உணவுமுறையின் வரலாறு பற்றிய ஆழமான பார்வை

Anitha Jegadeesan
Anitha Jegadeesan
Spices used our traditional dishes

பண்டை தமிழர்களின் உணவுமுறை அவர்களின் வாழ்வியலோடு ஒன்றென கலந்திருந்தது. "உணவே மருந்தாகவும், மருந்தே உணவாகவும்" வாழ்ந்தார்கள். உணவு முறையிலும் உயரிய கோட்பாடுகளையும், கட்டுப்பாடுகளையும் உள்ளடக்கி இருந்தது.  கிடைத்ததை, கிடைத்த நேரத்தில்  சாப்பிடுகிற வழக்கமோ, சுவையை அடிப்படையாக கொண்டதோ அல்ல. ஒவ்வொரு உணவு முறையின் பின்னும் பல்வேறு அறிவியல் ரீதியான காரணங்கள் புதைந்திருக்கின்றன.

உணவும், உண்ணும் முறையும்

உணவு என்பது மூன்று முறை மட்டுமே உட்கொள்ளப்பட்டது. பெரும்பாலும் கேழ்வரகு, சாமை, கொள்ளு, அவரைக்காய் ஆகிய இந்நான்கும் அவர்களின் பிரதான உணவாக இருந்ததாக சங்ககால புறநானூற்றுப் பாடலில் சொல்கிறது. உணவில் அறுசுவைகளும் அளவாய் இருந்தது. அன்றாட சமையலில் மிளகு, சீரகம், வெந்தயம், மல்லி (தனியா), மஞ்சள் போன்ற மருத்துவ குணமுள்ள பொருட்களை தவறாது சேர்த்துக் கொண்டனர். நிராகாரமாக கறிவேப்பிலை கரைத்த நீர்மோர், சுக்கு பொடியிட்ட பானகம், கொத்துமல்லிக் காபி போன்றவற்றையே அருந்தினர். சாப்பிடும் உணவுகளில் கார மற்றும் அமிலநிலை அறிந்து உட்கொண்டனர். கறிவேப்பிலை, கடுகு, சீரகம், பூண்டு, மிளகு, மஞ்சள் மற்றும் நல்லெண்ணெய் போன்றவை காரநிலையுடைய பொருட்கள். மேலும் இது சீரான செரிமானத்திற்கு பேருதவியாக இருக்கும். வாழையிலையில் உணவு உண்ணும் பழக்கம் இருந்தது.

Morning Breakfast

காலை உணவு

காலை உணவாக கஞ்சியை மட்டுமே உண்டனர். நீண்ட இடைவேளைக்கு பின் உணவு உட்கொள்ளும் போது நீர்சத்து நிறைந்த கம்பு, சாமை, கேழ்வரகு போன்றவற்றின் கூழினை உணவாக உட்கொண்டனர். 

மதிய உணவு

மதிக்கு ஏற்ற சிறு தானியங்கள், அரிசி, காய்கறிகள் போன்றவற்றை  உணவாக உட்கொண்டனர். 

இரவு உணவு

இரவு உணவு அந்தி சாயும் நேரத்தில் உண்டார்கள். மின்சார வசதிகள் இல்லை என்றாலும், அதற்கு பின்பு ஆரோக்கியம் மற்றும் அறிவியல் பூர்வமான காரணங்கள் இருந்தன. உணவு உண்டு 2 மணி நேரத்திற்கு பிறகு  தூங்க செல்ல வேண்டும். இதனால் முறையாக செரிமானம் நிகழும்.

உணவின் மொழி

அன்றைய தமிழர்கள் தரையில் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் பழக்கம் இருந்தது. உணவு பார்த்தங்களை உட்கொள்ளும் பழக்கத்தை அடிப்படையாக கொண்டு சொற்களை வடிவமைத்தனர்.

அருந்துதல் - மிகச் சிறிய அளவே உட்கொள்ளல்.

உறிஞ்சல் - வாயைக் குவித்துக் கொண்டு நீரியற் பண்டத்தை ஈர்த்து உட்கொள்ளல்.

குடித்தல் - நீரியல் உணவை (கஞ்சி போன்றவை) சிறிது சிறிதாக பசி நீங்க உட்கொள்ளல்.

பருகல் - நீரியற் பண்டத்தை சிறுகக் குடித்தல்.

தின்றல் - தின்பண்டங்களை உட்கொள்ளல்.

துய்த்தல் - சுவைத்து மகிழ்ந்து உட்கொள்ளல்.

நக்கல் - நாக்கினால் துலாவி உட்கொள்ளல்.

நுங்கல் - முழுவதையும் ஒரு வாயில் ஈர்த்துறிஞ்சி உட்கொள்ளல்.

மாந்தல் - பெருவேட்கையுடன் மடமடவென்று உட்கொள்ளல்.

மெல்லல் - கடிய பண்டத்தைப் பல்லால் கடித்து நன்கு மென்று உட்கொள்ளல்.

விழுங்கல் - பல்லுக்கும் நாக்குக்கும் இடையே தொண்டை வழி உட்கொள்ளல்.

உண்ணல் - பசிதீர உட்கொள்ளல்.

Traditional way of eating

“பதார்த்தகுண சிந்தாமணி” என்ற சங்க இலக்கிய நூலில் நாம் உண்ணும் உணவை பற்றி ஆழமான கருத்துக்கள் குறிப்பிடப் பட்டுள்ளன. நீர் முதல் நாம் அருந்தும் அனைத்திற்கும் உள்ள மருத்துவ குணம், உண்ணும் உணவில் உள்ள மருத்துவ குணம், கார, அமில தன்மை என ஒவ்வொன்றையும் வகைப்படுத்தி முழுமையாக எழுதி விட்டு சென்றிருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.  உணவுப் பொருள்களுக்கான குணத்தை வகுத்து யார்யார் எவ்வாறு உண்ண வேண்டும், எந்த காலத்தில் எந்த வகை உண்ண வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

பருவத்திற்கு ஏற்ற உணவு

மார்கழி - தை (முன் பனி காலம்)

கொண்டல் காற்று அதாவது கிழக்கில் இருந்து காற்று வீசும். இக்காலத்தில் எளிதில் செரிக்க கூடிய உணவு வகைகளாகவும், அறுசுவைகளில் இனிப்பு, கசப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவு வகைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் வெந்நீர் பருக உடலும் வளமும், நலமும் தரும்.

மாசி - பங்குனி (பின்பனி காலம்)

நெய் சத்து, மிதமான கொழுப்பு சத்து நிறைந்த உணவு பதார்த்ததை  உண்ண வேண்டும். எளிதில்  ஜீரணமாகத உணவு பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பகல் தூக்கம், எண்ணெய் பசை, உப்பு, புளிப்பு, இனிப்புச் சுவைகள் சேர்ந்த உணவுகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.  மூலிகைகைகள் கலந்து காய்ச்சிய தண்ணீர், அல்லது சந்தனம், கருங்காலி சேர்த்துக் காய்ச்சிய நீர் இவற்றைப் பருகலாம்.

Tradtional cooking

சித்திரை - வைகாசி (இளவேனிற் காலம்)

பொதுவாக தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெரும்பான்மையான மக்கள் இளவேனிற் காலங்களில் தான் புத்தாண்டாகக் தொடங்குகின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் இந்த சமயத்தில் தான் புத்தாண்டை கொண்டாடுகிறார்கள். எண்ணெய் பசை இல்லாததும், கசப்பு, கார்ப்பு, துவர்ப்பு சுவை உட்க கொள்ளலாம்.

ஆனி - ஆடி (முதுவேனிற் காலம்)

வெயிலின் தாக்கம் கூடுதலாக இருக்கும். எனவே இக்காலங்களில் கொழுப்பு சத்து உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். சுவைகளில் இனிப்பு, கசப்பு சுவையை எடுத்துக் கொள்ளலாம். இக்காலங்களில் கார்ப்பு அதிகமுள்ள உணவை தவிர்த்தல் நல்லது. குளிர்ச்சியான நிராகாரங்களை எடுத்துக் கொள்ளலாம். திருவிழாக்களை நடத்தியத்திற்கும், கூழ் விநியோகியத்திதன் பின்னணியில் இருந்த காரணங்கள் இவையே ஆகும். மண்பானைகளில் வெட்டிவேர், சந்தானம் போன்ற மூலிகைகள் இட்டு பருகலாம்.

ஆவணி - புரட்டாசி (கார் காலம்)

மழை காலம் என்பதால் மந்தமாகவும் ஜீரண சக்தி குறைந்தும் காணப்படும். எனவே உடலில் வாயு சம்பந்தமான நோய்கள் தோன்றும். முட்டி வலி, கால், இடுப்பு பகுதிகளில் வலி உண்டாகும். எனவே அரிசி, கோதுமை, சிறுதானியங்களினால் செய்த கஞ்சியை அருந்த வேண்டும். தண்ணீரைக் நன்கு கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.

Thinai Maavu

ஐப்பசி - கார்த்திகை (குளிர் காலம்) 

குளிர் காலம் என்பதால் பசி அதிகமாகத் தோன்றும். எனவே உடலுக்கு வலுவூட்டும் உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் உண்ணும் உணவு எளிதில் ஜீரணிக்க கூடியதாகவும், பசியை போக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.  இனிப்பு, உப்பு, புளிப்புச் சுவையுள்ள உணவை உட் கொள்ள வேண்டும். வெல்லம், மாவுப் பொருட்கள், உளுந்து, கரும்புச் சாறு, பால், மாமிசம் இவற்றால் செய்த பொருட்கள், எண்ணெய் பலகாரங்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.  

உண்ணும் விதிகள்

  • "நாம் உண்ணும் உணவு, நம்மை உண்ணும் உணவு" இவற்றில் எதை தேர்ந்தெடுப்பது என்று நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.
  • பசித்த பின் உண்ண வேண்டும். தேவை இருந்தால் மட்டுமே உணவு உண்ணும் போது தண்ணீர் அருந்த வேண்டும். கூடுமான வரை வெதுவெதுப்பான நீரை பருக வேண்டும்.
  • பருவத்திற்கேற்ற உணவு முறையை பின்பற்றுவதன் மூலம் பல வியாதிகளை தவிர்க்க இயலும். அந்தந்த காலங்களில் கிடைக்கும் கீரைகள், காய்கறிகள் மற்றும் பழங்களை கண்டிப்பாக உண்ண வேண்டும்.

அறுசுவையும் அளவோடு இருந்தால் உங்கள் ஆரோக்கியம்  வளரும் என்பது திண்ணம்…..

English Summary: Why do we need to adopt our ancient food nowadays? Published on: 26 November 2019, 02:47 IST

Like this article?

Hey! I am Anitha Jegadeesan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.