உடலுக்கு வலி தராமல், உடல் வலியை போக்கும் ஒரு உடற்பயிற்சி எது என்றால், அது யோகாசனம் மட்டுமே. யோகா என்பது பல கோணங்களில் உடலை அசைத்து, வளைத்து, மனதை ஒருமுகப்படுத்தி செய்யும் ஒரு பயிற்சியாகும். இந்த பயிற்சியால் மனதையும் உடலையும் இணைத்து நீடித்த ஆரோக்கியத்தை பெற முடியும். ரத்த அழுத்தம், மன அழுத்தம், உடல் பருமன் இப்படி பல பிரச்னைகளை தீர்க்க, யோகாவை முறையாக பயிற்சி செய்தால் போதும்.
யோகா பயிற்சி (Yoga Training)
யோகா பயிற்சிகள் பார்ப்பதற்கு எளிமையானதாக தோன்றினாலும், உங்களுக்கே தெரியாமல் பல தவறுகளை நீங்கள் செய்யக் கூடும். அதுவும் கொரோனா காலத்திற்கு பிறகு, நாம் ஆன்லைன் வாயிலாக யோகா பயிற்சி மேற்கொள்கிறோம். இதனால் யோகா செய்யும் போது பயிற்சியில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என்ன என்பதை அறிந்து கொள்வது அவசியம்.
செய்ய வேண்டியவை (Do's)
- முதலில் யோகா செய்யும் இடத்தை நாம் தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும்.
- ஆசனங்களை வெறும் வயிற்றில் செய்ய வேண்டும். நீங்கள் பலவீனமாக உணர்ந்தால், வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு தேன் கலந்து குடிக்கலாம்.
- யோகப் பயிற்சிகளைத் துவங்குவதற்கு முன் சிறுநீர் மற்றும் மலம் கழித்திருக்க வேண்டும்.
- பயிற்சி அமர்வுகளுக்கு முன் சிறிது நேரம் தியானம், அல்லது பிராத்தனை செய்யலாம். இதனால் மனம் ஒரு நிலைக்கு வரும்.
- அதேபோல் யோகா செய்யும் முன் கண்டிப்பாக உடலை தளர்த்தும் உடற்பயிற்சிகளை (warm-ups) செய்ய வேண்டும். இதனால் சுளுக்கு போன்ற பிரச்னைகள் வராமல் இருக்கும்.
- எல்லா ஆசனங்களையும் மெதுவாக, நிதானமாக செய்ய வேண்டும். அந்த அந்த பயிற்சிக்கு தேவையான உடல் மொழியை பின்பற்ற வேண்டும்.
- யோகா பயிற்சிக்குச் செல்வதற்கு முன் நீரேற்றமாக இருங்கள். காலை எழுந்தவுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் பருக வேண்டும்.
- யோகா பயிற்சிகளின் போது உடல் உறுப்புகள் வெகு இயல்பாக அசைக்க வேண்டும். அதனால் தளர்வான ஆடைகளை அணியவும்.
- நல்ல காற்றோட்டம் உள்ள அறையில் பயிற்சி செய்யவேண்டும்
- யோகாசனத்தை பிடிப்புடன் செய்ய யோகா மேட்டை (yoga mat) பயன்படுத்தவும்
- யோகாசனங்களைச் செய்யும்போது சுவாசிப்பதில் விழிப்புடன் இருக்க வேண்டும் அந்தந்த பயிற்சிக்கு ஏற்றவாறு சுவாசிப்பது நல்லது.
- பயிற்சியை முடிக்கும் போது உடல் சூடு அதிகரித்து காணப்படும். அதனால் உடலை குளிர்ச்சியடைய செய்யும் தளர்வு நுட்பங்களுடன் பயிற்சியை முடிக்கவும்.
செய்யக்கூடாதவை (Don'ts)
- சோர்வு, நோய், அல்லது கடுமையான மன அழுத்த சூழ்நிலையில் யோகா செய்யக்கூடாது.
- பெண்கள் தங்கள் மாதவிடாய் காலத்தில் வழக்கமான யோகா பயிற்சிகளை குறிப்பாக ஆசனங்களை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக தளர்வு நுட்பங்கள் மற்றும் பிராணயாமா செய்யலாம்.
- சாப்பிட்ட உடனே யோகா செய்ய வேண்டாம். உணவுக்குப் பிறகு 2 முதல் 3 மணி நேரம் கழித்து செய்ய வேண்டும்.
- யோகா செய்த பிறகு 30 நிமிடங்களுக்கு குளிக்கவோ, தண்ணீர் குடிக்கவோ, உணவு சாப்பிடவோ கூடாது.
- அறுவை சிகிச்சைக்கு பின் அல்லது ஏதேனும் சுளுக்கு அல்லது எலும்பு முறிவுகளின் போது, யோகா பயிற்சியை தவிர்க்க வேண்டும். நிபுணர்களுடன் கலந்தாலோசித்த பிறகு அவர்கள் யோகாவை மீண்டும் தொடங்கலாம்.
- யோகாவுக்குப் பிறகு கடுமையான உடற்பயிற்சிகளைச் செய்யாதீர்கள்.
- அதிக வெப்பம், மிகவும் குளிர் அல்லது ஈரப்பதம் போன்ற சீரற்ற வானிலை நிலைகளில் யோகா பயிற்சி செய்ய வேண்டாம்.
மேலும் படிக்க
அழகை கெடுக்கும் மரு எதனால் வருகிறது: தடுப்பதற்கான வழி என்ன?
புரதச்சத்து ரொம்ப முக்கியம்: இல்லையெனில் இந்த நோயெல்லாம் ஏற்படும்!
Share your comments