தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் மானியத்தைப் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நலத்திட்டங்கள் (Welfare schemes)
விவசாயிகள் தங்கள் சாகுபடிச் செலவை எதிர்கொள்ள ஏதுவாக மத்திய மற்றும் மாநில அரசுகள் மானியத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன.
தோட்டக்கலைத் துறை (Department of Horticulture)
தோட்டக்கலைப் பிரிவானது சமீப காலங்களில் இந்திய விவசாயத்தில் முக்கிய அங்கமாக மாறி வருகிறது.நாட்டின் ஊட்டச்சத்து பாதுகாப்பு, வறுமை ஒழிப்பு மற்றும் வேலை வாய்ப்புகள் உருவாக்கத்தில் தோட்டக்கலையின் பங்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
லாபம் ஈட்ட வழிவகை (The way to make a profit)
இப்பிரிவு விவசாயிகளுக்கு மாற்று பயிர் சாகுபடி செய்வதற்கான வாய்ப்பினையும் பண்ணை நிலங்களை சிறந்த முறையில் பயன்படுத்தி அதிக லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகளையும் வழங்குகிறது.
இது மட்டுமல்லாமல், பெருமளவிலான புதிய வேலை வாய்ப்புகளை அளிக்கும் வேளாண் தொழிற்சாலைகள் நீடித்து இயங்கும் வாய்ப்பினையும் அளித்து வருகிறது.
விவசாயிகளுக்கு அழைப்பு (Call to farmers)
அந்த வகையில், தென்காசி மாவட்ட தோட்டக்கலை விவசாயிகள், மத்திய அரசு வழங்கும் மானியத்தைப் பெற விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தென்காசி மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் ஜெயபாரதி மாலதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
நிதி ஒதுக்கீடு (Allocation of funds)
தென்காசி மாவட்ட தோட்டக் கலைத்துறைக்கு பிரதமரின் நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தின் பரப்பு இலக்காக 3,517 ஹெக்டேரும், ரூ.29.63 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.
நீர்ப்பாசனம் (Irrigation)
எனவே, தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்டப் பகுதிகளில் தோட்டக் கலைப் பயிர்களை பயிரிடும் விவசாயிகள் இத்திட்டம் மூலம் சொட்டு நீர்ப்பாசனம், தெளிப்பு நீர்ப்பாசனம் அமைத்துப் பயன்பெறலாம்.
மேலும், சொட்டு நீர்ப்பாசனத்தில் பயன்பெறும் விவசாயிகள் கூடுதலாக துணை நீர் மேலாண்மைத் திட்டத்தின் கீழ் நிலத்தடி நீர்மட்டம் பாதுகாப்பாக உள்ள குறுவட்டங்களில் மட்டும் நீர்மேலாண்மைக்கான அமைப்புகளை உருவாக்கியும் மானியம் பெறலாம்.
50 சதவீத மானியம் (50 percent subsidy)
அதாவது ஆழ் துளைக் கிணறு அமைத்தல், மின் மோட்டார், பம்பு செட் நிறுவுதல், குழாய்கள் பதித்தல் மற்றும் நீர்த்தேக்க தொட்டி அமைத்தலுக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.
மானியம் பெற விரும்பும் விவசாயிகள், வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகலாம்.
தேவைப்படும் ஆவணங்கள் (Documents required)
-
நிலப்பட்டா
-
சிட்டா
-
அடங்கல்
-
புகைப்படம்
-
சிறு, குறு விவசாயி என்பதற்கான சான்றிதழ்
-
ஆதார் அடையாள அட்டை
-
வங்கிக் கணக்கு புத்தகத்தின் நகல்
மேற்கூறிய ஆவணங்களுடன் விவசாயிகள் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, மத்திய அரசின் மானியத்தைப் பெற்றுப் பயனடையலாம்.
இவ்வாறு இந்தச் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
நவீன இயந்திரங்கள் வரமா? சாபமா? அழிவின் விளிம்பில் உழவு மாடுகள்!
Share your comments