மருந்துச்செடி வகைகளுள் வல்லாரை முக்கிய இடம் வகிக்கின்றது. இதன் தாயகம் என்று பார்த்தால் இந்தியா, சீனா, இந்தோனேஷியா, மடகாஸ்கர் மற்றும் ஆப்பிரிக்கா ஆகியன ஆகும். இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் சமையல் மூலிகையாகவும், சட்னி, ஊறுகாய், புத்துணர்வு பானம் தயாரிக்கப் பயன்படுகின்றது. இத்தகைய வல்லாரை கீரை பயிரிடும் முறைகளைக் குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
பயிரிட ஏற்ற காலம்
அக்டோபர் மாதம்தான் வல்லாரை சாகுபடி செய்ய சிறந்த பருவம் ஆகும். வல்லாரையானது மிதமான காலநிலை மற்றும் நிழலான பகுதிகளில் நன்கு வளரும் தன்மை கொண்டது. 50 சதவிகிதம் நிழலில் அதிகமாக வளரும். அதோடு, மகசூல் அதிகமாக கிடைக்கும். ஈரப்பதமான சதுப்பு நிலம் மற்றும் நீர் நிலைகளைச் சுற்றி நன்கு வளரும் தன்மை உடையது. அமில மண் மற்றும் உவர் மண்ணில் வளருகின்ற தன்மை கொண்டது. ஈரத் தன்மையுள்ள, அங்கக தன்மை கொண்ட களிமண்ணில் நன்கு வளருகின்றது.
நடவு முறை
- இந்த வல்லாரை என்பது கணுக்கள் உடைய தண்டுத் துண்டுகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றது.
- சுமாராக ஒர் எக்டருக்குப் பயிரிட வேண்டும் என்றால் 1 லட்சம் எண்ணிக்கையில் தாவரங்கள் தேவையானவையாக இருக்கின்றன.
- இந்த தண்டுகளை தேவையான அளவுள்ள படுக்கைகளை அமைத்து நடவு செய்ய வேண்டும்.
- அதன்பின்பு, வேர்கள் நன்கு பிடிப்பதற்கு எனப் பாசனம் செய்ய வேண்டும்.
நீர் பாய்ச்சல்
- நீர் பாய்ச்சல் என்று பார்த்தால் நடவு செய்தவுடன் நீர் பாய்ச்சிட வேண்டும். பயிர் நன்கு வளரும் வரையில் நான்கு முதல் ஆறு நாட்களுக்கு நீர் பாய்ச்சிட வேண்டும்.
- அதன் பின்னர் பயிரின் தேவைக்கு ஏற்ப நீர் பாய்ச்சிட வேண்டும்.
உர மேலாணமை
- ஒரு எக்டருக்கு என்று எடுத்துக் கொண்டால் தழைச்சத்து 100 கிகி, மணிச்சத்து 60 கிகி மற்றும் சாம்பல் சத்து 60 கிகி கொடுக்கக்கூடிய உரங்களை இடுதல் வேண்டும்.
- இவற்றையே இரண்டாகப் பிரித்து, இருமுறை கொடுக்கலாம்.
கீரையின் பயன்கள்
- வல்லாரை கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ஞாபக சக்தி அதிகரிப்பதுடன், மூளை நரம்புகள் நன்றாக வலுப்பெறும்.
- வீக்கம், கட்டிகள் மறைய வல்லாரை இலையை விளக்கெண்ணெயில் வதக்கி வீக்கம், கட்டி ஆகியவற்றின் மீது கட்டிவர விரைவில் நல்ல பலனைப் பெறலாம்.
- வல்லாரை இலையை வாயில் போட்டு மென்று விழுங்கினால் குடல் புண், குடல் நோய், வாய்ப்புண், வாய் நாற்றம் ஆகியவை குறையும்.
- வல்லாரை கீரையானது தொண்டைக் கட்டுதல், காய்ச்சல் மற்றும் சளி முதலியவற்றை குணப்படுத்த உதவுகின்றது.
- உடற்சோர்வு, பல்நோய்கள் மற்றும் படை முதலான தோல் நோய்களை வேரறுக்கும் வல்லமைக் கொண்டது இந்த வல்லாரை.
மேலும் படிக்க
நாட்டுக்கோழி வளர்ப்புக்கு 50% மானியம் வேண்டுமா? இன்றே பதிவு செய்யுங்கள்!
ஆடு வளர்ப்புக்கு ரூ. 4 லட்சம்! மத்திய அரசின் அருமையான திட்டம்!!
Share your comments