வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகமானது, 2022-23 ஆம் நிதியாண்டிற்கான பல்வேறு தோட்டக்கலை பயிர்களின் பரப்பளவு மற்றும் உற்பத்தியின் மூன்றாவது முன்கூட்டிய மதிப்பீட்டை வெளியிட்டுள்ளது.
தோட்டக்கலை உற்பத்தி 355.25 மில்லியன் டன்களாக மதிப்பிடப்பட்டுள்ளது; இவை கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 8.07 மில்லியன் டன்கள் அதிகம் என கணிக்கப்பட்டுள்ளது. அரசு தோட்டக்கலைப் பயிர்களுக்கு வழங்கி வரும் மானியம் தொடர்பான திட்டங்கள் இந்த உற்பத்தி அதிகரிப்புக்கு கைக்கொடுத்துள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதுத்தொடர்பாக ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் விவரம் பின்வருமாறு-
மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மற்றும் பிற அரசு ஆதார நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் 2022-23 ஆம் ஆண்டிற்கான பல்வேறு தோட்டக்கலை பயிர்களின் பரப்பளவு மற்றும் உற்பத்தியின் மூன்றாவது முன்கூட்டிய மதிப்பீட்டை வெளியிட்டுள்ளது.
ஒன்றிய வேளாண் அமைச்சரின் கருத்து:
அதன்படி, 2022-23 ஆம் ஆண்டிற்கான மொத்த தோட்டக்கலை உற்பத்தியின் மதிப்பீடு 355.25 மில்லியன் டன்கள் என கணக்கீடப்பட்டுள்ளது. இது 2021-22 ஆம் ஆண்டை விட (இறுதி அளவீடு) 8.07 மில்லியன் டன்கள் அதிகமாகும். கிட்டத்தட்ட 2.32% உற்பத்தி அதிகரிப்பு. இதுக்குறித்து மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா கூறுகையில், ”நாட்டில் தோட்டக்கலை உற்பத்தியை தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த சாதனைக்கு நமது விவசாய சகோதர சகோதரிகள், விஞ்ஞானிகள் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் விவசாயம் மற்றும் உழவர் நட்பு கொள்கைகளின் கடின உழைப்பே காரணம்” என்று கூறியுள்ளார்.
எவையெல்லாம் உற்பத்தி அதிகரிப்பு?
2022-23-க்கான மூன்றாவது முன்கூட்டிய மதிப்பீட்டின்படி பழங்கள், காய்கறிகள், தோட்டப் பயிர்கள், மசாலாப் பொருட்கள், பூக்கள் மற்றும் தேன் ஆகியவற்றின் உற்பத்தி அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2021-22 ஆம் ஆண்டில் 107.51 மில்லியன் டன்னாக இருந்த பழ உற்பத்தி 2022-23 ஆம் ஆண்டில் 109.53 மில்லியன் டன்னாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தியில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. காய்கறிகளின் உற்பத்தி 2021-22 ஆம் ஆண்டில் உற்பத்தி 209.14 மில்லியன் டன்களாக இருந்த நிலையில், 2022-23 ஆம் ஆண்டில் 213.88 மில்லியன் டன்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2021-22 ஆம் ஆண்டில் 15.76 மில்லியன் டன்னாக இருந்த தோட்டப் பயிர்களின் உற்பத்தியானது, 2022-23 ஆம் ஆண்டில் 16.84 மில்லியன் டன்களாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, உற்பத்தி அளவானது சுமார் 6.80% அதிகரிப்பு.
2021-22 ஆம் ஆண்டில் உற்பத்தி 56.18 மில்லியன் டன்களாக இருந்த உருளைக்கிழங்கு உற்பத்தி 2022-23 ஆம் ஆண்டில் 60.22 மில்லியன் டன்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேப்போல் 2021-22 ஆம் ஆண்டில் 20.69 மில்லியன் டன்னாக இருந்த தக்காளி உற்பத்தி 2022-23 ஆம் ஆண்டில் 20.37 மில்லியன் டன்னாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
Read also:
மரவள்ளிக் கிழங்கில் தேமல் நோய் வந்தால் என்ன செய்யலாம்?
TN land survey- இணையதளத்தில் பட்டா மாறுதல் உட்பட இவ்வளவு வசதிகள் உள்ளதா?
Share your comments